Tuesday, 13 December 2011

ஈரான் கைப்பற்றிய அமெரிக்க ஆளில்லா விமானம் - அமெரிக்காவிற்கு பேரிழப்பில்லையாம்.

2011-ம் ஆண்டின் இறுதி மாதத்தை ஆக்கிரமித்த செய்தி அமெரிக்க ஆளில்லா விமானமான RQ-170 Sentinel ஈரான் கைப்பற்றியமையே. விமானம் சுட்டுவீழ்த்தப் பட்டதா அல்லது தரையிறக்கப்பட்டதா என்ற கேள்விகளுடன் இதில் சீனாவும் சம்பந்தப்பட்டுள்ளதா என்றா கேள்வியும் இணைந்து இருக்கிறது. Lockheed Martin நிறுவனத்தின் தயாரிப்பான RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தின் உயர் தர தொழில்நுட்பம் ஈரான் கைகளை மட்டுமல்ல அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கும் இரசியா சீனா போன்ற நாடுகளின் கைகளைப் போய்ச் சேரக்கூடும்.

RQ-170 Sentinel இன் சிறப்புத் தன்மைகள்:
1. தாழ அவதானிக்கும்(low observable) திறன்.
2. தாக்குதல் அணிக்கு இலக்குகள் பற்றி உடன் தகவல்கள் வழங்கும் திறன்
3. எதிரிகளின் ராடர்களிற்கு புலனாகாத திறன்(stealth)
4. உயர்தர உணரிகள்(Sensors)
5. செய்மதித் தொடர்புத் தொழில் நுட்பம்(Satcom or satellite communication)
இந்த RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயினால் 01-09-2005இல் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றன.

பின் லாடனும் RQ-170 Sentinel
பின் லாடன் இருக்கும் இடத்தை அறிய அமெரிக்கா activity based intelligence என்னும் நடவடிக்கை சார் உளவறிதல் முறையைப் பாவித்தது. பின் லாடனை அவர் தங்கியிருந்த மாளிகையில் கண்டதாக எந்தவிதமான நேரடியான சாட்சியங்களும் இல்லாமல் அவர் அங்கு தங்கி இருந்தமையை சிஐஏ உறுதி செய்வதற்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரான் கைப்பற்றியதைப்பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:ஈரானில் அமெரிக்க விமானம் வீழ்த்தியதில் சீனவின் பங்களிப்புண்டா? RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை தனது படைகள் அதன் கணனிப் பொறிகளை ஊடுருவிப் பொறுப்பேற்றுத் தரையிறக்கியதாக ஈரான் கூறுகிறது. கணனிப் பொறிகளில் ஈரானிய விமானத் தளத்தை சிஐஏயின் தளம் என்பது போல் உணரப்பண்ணியதாகவும் கூறுகிறது.இப்படி  RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை ஊடுருவிப் பொறுப்பெற்கும் தொழில் நுட்ப அறிவு ஈரானிடம் உள்ளதா என்பது கேள்விக்குரியது. இதில் சீனா சம்பந்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது..

அமெரிக்க சிஐஏயின் RQ-170 Sentinel ஈரான் கைப்பற்றியதால் ஈரான் என்ன நன்மைபெறப்போகிறது?
ஈரானிய எல்லைக்குள் சென்று அமெரிக்க விமானங்கள் நுழைந்து படைத்துறைத் தகவல்கள் திரட்டுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல பறப்புக்கள் ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான் எல்லையில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னரே ஈரான் தான் stealth வகை உளவு விமானங்களை கண்டறியக்கூடிய ரடார்களை உருவாக்கியதாகத் தெரிவித்திருந்தது. RQ-170 Sentinel இன் stealth தொழில்நுட்பத்தை ஈரான் முறியடித்ததா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அது மட்டுமல்ல ஈரான் விரைவில் RQ-170 Sentinel பிரதிகளை reverse-engineering முறை மூலம் தான் உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது. ஈரான் இந்த தொழில்நுட்ப இரகசியங்களை வேறு நாடுகளுக்கு விற்பனையும் செய்யலாம். 1998இல் ஆப்கானிஸ்தானில் விழுந்து வெடிக்காமல் போன அமெரிக்க ஏவுகணையான Tomahawk cruise missiles ஐ விலை கொடுத்து வாங்கியது. 1999இல் ஆப்கானிஸ்தானில் விழுந்த அமெரிக்க விமானமான stealth F-117 Nighthawkஐயும் சீனா வாங்கியது. பின்னர் தனது J-20 stealth fighter விமானங்களை உருவாக்கியது. ஏற்கனவே சீனாவும் இரசியாவும் RQ-170 Sentinelஐப் பார்வையிடுவதற்கான அனுமதியை ஈரானிடம் கோரியுள்ளன.

ஈரான் வெளிவிட்ட படங்கள் போலியானதா?
ஈரான் வெளிவிட்ட படங்களின்படி பார்த்தால் RQ-170 Sentinel ஆளில்லா விமானம் எந்த வித சிதைவோ பாதிப்போ இன்றி தரையிறக்கப் பட்டது போல் இருக்கிறது. முதலில் ஈரான் RQ-170 Sentinelஐ சுட்டு வீழ்த்தியதாகவே தெரிவித்தது. ஈரான் வெளிவிட்ட படங்களில் அது சிதைவுற்ற விமானத்தை திருத்தி பார்வைக்கு சிதைவுறாதது போல் காட்டுவதாக ஒரு ஊடகம் தெரிவிக்கிறது.

அஞ்சிய ஈரானியர்கள்.
தனது இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா ஈரானில் ஒரு கொமாண்டோத் தாக்குதலைச் செய்து RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தைச் அழிக்க முற்படலாம் என்ற வதந்தி ஈரானில் பரவி இருந்தது. சில ஈரானிய ஊடகங்களில் இவை செய்தியாக அடிபட்டது.

அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் வேறு விதமாக இருக்கின்றன.
அமெரிக்க சிஐஏயின் RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என்பது கணனித் தொழில்நுட்பத் துறையில் மிக நீண்டகாலமாகும். அமெரிக்கா ஈரானுக்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானங்களை அனுப்பும் போது அதற்கு அது சுட்டுவீழ்த்தப்படும் அல்லது கைப்பற்றப்படும் ஆபத்து உண்டு என்பதை சிஐஏ நன்கு அறியும். இருந்தும் அந்த ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஈரானில் இருந்து RQ-170 Sentinel திரட்டி அனுப்பும் தகவல்கள் அதிலும் மேன்மையான பயனுள்ளது என்று கருதியே சிஐயே இந்த ஆபத்தான நடவடிக்கையை எடுத்தது. MICAH ZENKOஎன்ற படைத்துறை ஆய்வாளர் ஈரானுக்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை அனுப்பியதை 1960-ம் ஆண்டு இரசிய ஏவுகணைத்திட்டத்தை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய U-2 வேவு விமானம் அனுப்பியமைக்கு ஒப்பிடுகிறார். அப்போது U-2 வேவு விமானம் Operation Grand Slam என்ற குறியீட்டுப் பெயருடன் அனுப்பும் போது அது சுட்டு வீழ்த்தும் சாத்தியம் இருக்கிறது என்று தெரிந்தும் சிஐஏ இரசியாவிற்கு U-2வை அனுப்பியமைக்கான காரணம் அமெரிக்கா U-2 விமானத்திலும் பல மடங்கு திறனுள்ள விமானங்களை குறிப்பாக A-12 OXCARTரக விமானங்களை ஏற்கனவே உருவாக்கி விட்டமையே. சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அமெரிக்கா தனக்குத் தேவையான தகவல்களைப் இரசியாவில் இருந்து பெற்றுவிட்டது. அதைப் போலவே ஈரானின் அணு ஆயுதத் திட்டம், ஹிஸ்புல்லா போன்ற திவிரவாத இயக்கங்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், தொலைதூர ஏவுகணைத்திட்டம், ஈரானின் விமான எதிர்ப்புத் திறன் போன்றவை தொடர்பான பல தகவல்களை RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் திரட்டிவிட்டன. 2005இல் உருவாக்கிய RQ-170 Sentinelஇலும் பார்க்க 65மடங்கு திறனுடைய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிவிட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...