Wednesday, 16 November 2011

மீண்டும் ஈரானியக் கணனிகளை ஊடுருவித் தாக்கிய இஸ்ரேல் படைத் தாக்குதலையும் மேற் கொள்ளுமா?


2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய உளவுத்துறை இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது. இப்போது மீண்டும் இஸ்ரேல் அப்படி ஒரு தாக்குதலை நாடாத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்ற சனிக்கிழமை ஈரானில் உள்ள ஒரு பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் பெரும் ஆயுதக் கிடங்கு ஒன்றில்  பாரிய வெடி விபத்து ஏற்பட்டது அதில் ஈரானிய ஏவுகணைத் திட்டத்திற்கு பொறுப்பான பிரிகேடியர் ஜெனரல் ஹசன் ரெஹ்ரானி மொக்காத் உட்பட 17 ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வெடி விபத்து ஈரானில் பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஈரானில் இப்படி வெடி விபத்துக்கள் ஏற்படுவதில்லை. ரைம்ஸ் சஞ்சிகையில் ஒரு பதிவர் உடனே இந்த வெடி விபத்து இஸ்ரேலின் கைவரிசையாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

Stuxnet அக்காவின் தங்கை வைரஸின் கைவரிசை
ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இஸ்ரேல் தனது முந்தைய Stuxnet என்னும் வைரஸின் "தங்கை"யை நடமாட விட்டுள்ளது என்ற தகவல் வெளிவந்திருந்தது. தங்கையின் பெயர் Dugu ஈரான் விரைவில் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்ற தகவல்களும் தங்கை Dugu வைரஸ் பற்றிய தகவல்களும் ஒன்றாகவே ஊடகங்களில் அடிபட்டன. அது மட்டுமல்ல அண்மையில் ஈரான் இஸ்ரேல் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளையும் பரீட்சித்திருந்தது. முதலில் வதந்தியாக இருந்த Dugu வைரஸ் பற்றிய செய்தி  ஈரான் தனது நாட்டு நிறுவனங்களுக்கு Dugu வைரஸை அழிக்கக்கூடிய மென் பொருளை விநியோகம் செய்ததால் உறுதி செய்யப்பட்டது.ஈரான் மீது படைத் தாக்குதல்
ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு அணு சக்தி முகவரகத்தில் இருந்து ஈரான் அணு ஆயுத உற்பத்தி செய்யலாம் என்ற செய்தி வந்தவுடனேயே இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அணு ஆயுத வல்லமை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு உட்பட முழு உலகுக்குமே  பெரும் அச்சுறுத்தல் என்றும் இஸ்ரேலுக்கு நேரடி ஆபத்து என்றும் கூறினார். ஈரானை இஸ்ரேல் மீண்டும் தாக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த வேளையிலேயே ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து எற்பட்டது. இப்போது எழுந்துள்ள அடுத்த கேள்வி ஈரானை இஸ்ரேல் நேரடியாகத் தாக்க்குமா என்பது. இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரஸ் அரச தந்திர நடவடிக்கைகளுடன் நேரடித் தாக்குதலை அண்மித்த நடவடிக்கைகள் தேவை என்று சொன்னார். தற்போதைய உலக பொருளாதார மத்திய கிழக்குப் பிராந்திய நெருக்கடி சூழ் நிலையில் ஈரான் மீது ஒரு படைத் துறைத் தாக்குதலை அமெரிக்கா விரும்பவில்லை என்றே உணரக்கூடியதாக இருக்கிறது. ஈரானுடனான ஒரு போர் உலக எரி பொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். லிபிய எரிபொருள் உற்பத்தி இன்னும் சீரடையாத நிலையில் வளை குடா எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்படல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானின் அணு ஆயுதம் பற்றிய செய்தியும் இஸ்ரேல் தாக்கலாம் என்ற செய்தியும் ஏற்கனவே மசகு எண்ணை விலையை உயர்த்தி விட்டன.  ஆனால் சீனவினதும் இரசியாவின் துணையின்றி ஈரான் மீது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டுவருதல் சாத்திய மற்றது. மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் தமக்குச் சாதகமான சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஈரானும் சிரியாவும் முக்கியம் என்று சீனாவும் இரசியாவும் உறுதியாக நம்புகின்றன. அது மட்டுமல்ல தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீது நேரடியாகவோ அல்லது ஹமாஸ் இயக்கம் மூலமாகவோ தாக்குதல்களைச் செய்யலாம். இதை ஈரானில் உள்ள ஊடகங்கள் பகிரங்கமாகவே தெரிவித்தன.

அமெரிக்கா கணனிப் போரில் இறங்குமா?

லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான போர் ஆரம்பித்த போது அமெரிகாவில் லிபியாவின் படைத்துறை கணனிகளை ஊடுருவி லிபிய விமான எதிர்ப்புக் கட்டமைப்பைச் சிதறடிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது ஆனால் சீனா இரசியா போன்ற நாடுகளின் இணைய வெளிப் போர்த் திறனை வளர்க்க இது ஊக்குவிக்கலாம் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இப்போது ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையோ பொருளாதாரத் தடையோ சரிவராத நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரானியக் கணனிகளை ஊடுருவி ஈரானின் அணு உற்பத்தித் திட்டத்தைச் சிதறடிக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...