Tuesday, 1 November 2011

சிரியக் கிளர்ச்சியும் ஹிஸ்புல்லா இயக்கமும்

1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார். 1963 இல் இருந்து சிரியா அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார்.

சிரிய மக்களின் எழுச்சி
அரபு நாடுகளில் இந்த ஆண்டின் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சிய் பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.

ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர்.  மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன.  ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லிக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிமீது ஈரானும் லெபனானில் செயற்படும் தீவிர இயக்கமான ஹிஸ்புல்லாவும் அதிக கரிசனை கொண்டுள்ளன. லிபியாவில் கடாஃபியின் ஆட்சி வீழ்ச்சியடந்ததைத் தொடர்ந்து ஈரான் தான் மேற்கு நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது. கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு பஸார் அல் அசாத்தான் என்று பல மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறினர். கடாஃபியின் கொலைக்குப் பின்னர் சிரிய கிளர்ச்சியாளர்கள் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன. மேற்கு நாடுகள் லிபியாவில் மக்களைப் பாதுகாக்க விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உறுதி செய்கிறோம் என்ற போர்வையில் ஒரு ஆட்சியாளர் மாற்றத்தை வெற்றிகரமாக ஆளணி இழப்பு ஏதுமின்றி நிறைவேற்றி விட்டன. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கான ஆயுத விநியோகம் ஈரானில் இருந்து சிரியா ஊடாகவே நடைபெறுகிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடையும் போதெல்லாம் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் சிரியாவிலேயே தஞ்சம் புகுவதுண்டு. சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா நிதி ஆயுத உதவி பெறுகிறது. ஹிஸ்புல்லா இயக்கம் சிரியப் பிரச்சனையில் அரசுக்கு சார்பாக இருப்பதை அதன் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள் விரும்பவில்லை. அது ஹிஸ்புல்லாவின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் இது மொத்த அரபு மக்களின் எதிர்ப்புக்கு ஹிஸ்புல்லா உள்ளாகலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவை மட்ட்டுமல்ல இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு போன்ற மக்களாட்சித் தத்துவத்தில் அதிக நம்பிக்கை உள்ள அமைப்புக்களுடன் ஹிஸ்புல்லா கைகோர்க்க வேண்டும் என்றும் பல ஹிஸ்புல்லா அமைப்பினர் கருதுகின்றனர். மேலும் சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தமது இயக்கம் அடக்கு முறை ஆட்சியாளரான அல் அசாத்தை ஆதரிப்பதை விடுத்து சிரிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இவற்றால் ஹிஸ்புல்லாத் தலைமை தாம் சிரியக் கிளர்ச்சியை ஆதரிப்பது போல் பகிரங்கமாக அறிவித்த போதும் அவர்கள் சிரிய ஆட்சி மாற்றம் தமக்கு ஆபத்தானது என்றே நம்புகின்றனர்.

1 comment:

Shanmugam Rajamanickam said...

குட் நைட்......

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...