Tuesday, 25 October 2011

அடுத்து சிரிய ஆட்சியாளர்களா?

அமெரிக்காவால் சுற்றி வளைக்கப்படும் ஈரான்

மேற்குலக நாடுகள் பிரித்தாளும் கொள்கையுடையவை. நாம் பிரிந்திருக்கும்போது அவை எம்மை ஆள்வது சுலபம். இப்போது சிரியா பிரிந்து நிற்கிறது. வந்து தலையிடவும் என்று மேற்குலக நாடுகளுக்கு அழைப்பு விடப்படுகிறது. அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர் ஜோன் மக்கெயின் அமெரிக்காவின் நிரலில் முதலாவதாக உள்ளது சிரியா என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். 2011 ஏப்ரல் மாதத்தில் இருந்தே சிரியாவில் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" அவசியம் என்ற கூக்குரல் எழுப்பப்பட்டுவருகிறது. கடாஃபி கொல்லப்பட்டவுடன் பல மேற்குலக ஊடகங்கள் அடுத்தது சிரியாவின் பஷார் அல் அசாத்தான் என்று எழுதி மகிழ்ந்தன. சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிவரும் குழுக்களும் கடாஃபியின் வீழ்ச்சியால் புது உத்வேகம் பெற்றன. லிபியாவில் நேட்டோத் தலையீட்டை முன்னின்று நடாத்திய பிரான்ஸ் சிரியாதான் அடுத்த இலக்கு என்று அக்டோபர் 5-ம் திகதியே தெரிவித்து விட்டது.

மல்லிகைப் புரட்சி
மத்திய கிழக்கிலேயே மிக மோசமான அடக்கு முறையை மக்களின் மீது பிரயோகிக்கும் நாடாக சிரியா இருக்கிறது. துனிசியாவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் மரக்கறிக் கடை வைத்து தன் குடும்பத்தைப் பாதுகாத்து வந்த இளைஞர் பெண் காவல் துறை அதிகாரியால் தாக்கப்பட்டு முகத்தில் காறி உமிழப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சி துனிசிய ஆட்சியக் கலைத்துப் பின்னர் அப்புரட்சி எகிப்திற்குப் பரவி ஹஸ்னி முபாராக்கைப் பதவியில் இருந்து விரட்டி கடாஃபியை ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொலையும் செய்தது. 2011 மார்ச் மாதத்தில் இருந்தே சிரியாவில் மக்கள் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறார்கள். 1982இல் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது இருபதினாயிரத்துக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியதில் இருந்து இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவிலும் லிபியாவைப் போல் சிரியத் தேசிய சபை அமைக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மக்களைப் பாதுகாக்க மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என சில அரச எதிர்ப்பாளர்கள் கோருகின்றனர். சில எதிர்க் கட்சிகள் மற்ற நாடுகளின் படைகள் சிரியாவுக்குள் வருவதை விரும்பவில்லை. அன்னியப் படைகள் சிரியாவுக்குள் வந்தால் சிரியாவின் ஆட்சியாளர்கள் பலமிக்க படையணிகளைக் கொண்டிருப்பதால் பெரிய போரும் பெரிய அழிவும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று இவர்கள் கருதுகிறார்கள். லிபியாவில் கடாஃபியின் விமானங்கள் பொதுமக்களைக் கொல்கின்றன என்பதால் பொதுமக்களைப் பாதுகாக்க அங்கு விமானப்பறப்பற்ற பிரதேசம் ஒன்றை ஏற்படுத்துகிறோம் என்று நேட்டோ நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு ஆணையைப் பெற்றுக் கொண்டு தமது விமானங்களை லிபியாவில் பறக்கவிட்டு லிபியாவின் பொதுக் கட்டிடங்களை குண்டு வீசித் தகர்த்தன.

சிரியாவும் ஈரானும்
லிபியாவிற்கு அடுத்ததாக சிரியா என்றால் சிரியாவிற்கு அடுத்தபடியாக ஈரான்! இதை ஈரானிய ஆட்சியாளர்கள் நன்குணர்வர். சிரியாவில் ஒரு மேற்குலகு ஆதரவு அரசு அமைவதை ஈரான் சகல விதத்திலும் எதிர்த்து வருகிறது. சிரியாவில் மேற்குலக சார்பு நாடு அமைந்தால் அது ஈரானின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பது பல படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாகும். சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகளில் பெரும்பாலானவை அமெரிக்க ஆதரவு நாடான ஜோர்டானுடனான எல்லை நகர்களிலேயே நடக்கின்றன. சிரிய ஆட்சியாளர்களுக்கான கிளர்ச்சி ஒரு அமெரிக்க - ஈரானிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் சிரியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் போர்ட்டுக்கு ஈரானியச் சதியால் கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்கா ரொபேர்ட் போர்ட்டை திரும்ப அழைத்தும் விட்டது. கடாஃபி கொல்லப்பட்ட விதம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமையாது. சிரியாவிற்கு எதிராக பொருளாதரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனாவாலும் இரசியாவாலும் இரட்டை வீட்டோவிற்கு(இரத்து) உள்ளானது. சிரியாவின் படைபலமும் ஈரான், சீனா, இரசிய உதவிகளும் மேற்குலகிற்கு சாதகமாக இல்லை. சிரியாவின் ஆட்சியாளர்கள் சில விட்டுக் கொடுப்புக்களை மேற் கொள்ள வேண்டியிருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...