Tuesday, 27 September 2011

பாக்கிஸ்த்தான் என்னும் பாம்பை வளர்த்த அமெரிக்காவின் பரிதாப நிலை.


கள்வருக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும் என்பார்கள். அமெரிக்கா பாக்கிஸ்த்தான் என்னும் இரு பன்னாட்டுத் திருடர்களுக்கிடையில் ஒரு நீண்ட கால நட்புறவு உண்டு. சுதந்திரமடைந்ததின் பின்னர் இந்தியா கூட்டுச் சேரா நாடுகள் என்ற போர்வையில் சோவியத் யூனியனுடன் உறவை வளர்க்க முற்பட்டபோது உருவான பாக்-அமெரிக்க நட்பு பங்களாதேச உருவாக்கத்தின் போது உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் அரசதந்திர மோதல்கள் இருதரப்பினரதும் குட்டுக்களை அம்பலமாக்குகின்றன. செப்டம்பர் 13-ம் திகதி ஆப்கானிஸ்த்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் மீது இசுலாமியத் தீவிரவாத இயக்கமான தலிபானின் ஒரு பிரிவான ஹக்கானி அமைப்பு நடாத்திய தாக்குதலின் பின்னால் பாக்கிஸ்த்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்க உயர் படைத்துறை அதிகாரி அட்மிரல் மைக் முலென் கூறிய கருத்து பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பலத்த அரசதந்திர மோதல்களை உருவாக்கியுள்ளது.


காபுலில் தலிபானின் கிளை அமைப்பான ஹக்கானியின் தாக்குதல் விபரமறிய இங்கு சொடுக்கவும்.


அமெரிக்காவை குற்றம் சாட்டுகிறது, அமெரிக்காவை மிரட்டுகிறது,  அமெரிக்காவிற்கு சவாலும் விடுகிறது.
பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் அமெரிக்கா தமது காபூல் தூதுவரகத்தின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் பின்னால் பாக்கிஸ்த்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாக கூறுவது ஆதாரமற்றது என்று கூறுகிறார். அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றார் ஹினா ரபானி. அமெரிக்கா முடியுமானால் போதிய ஆதாரத்தை எம்மிடம் சமர்ப்பிக்கட்டும் என்றும் கூறினார் ஹினா ரபானி. அதுமட்டுமல்ல "பயங்கரவாதத்திற்கு" எதிரான தனது போரில் அமெரிக்கா ஒரு முக்கிய நண்பனை இழக்க வேண்டி வரலாம் என்றும் எச்சரித்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் ஜோன் கேர்பி பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுப்பதற்கான நம்பகரமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார்.

அமெரிக்காவிற்கு எமது கதவு திறந்திருக்கிறது - பாக் வெளிநாட்டமைச்சர்.

பாக்கிஸ்த்தானா கொக்கா.
இதற்குப் பதிலடி கொடுத்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு உலகெங்கும் உள்ள பல பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். அத்துடன் நின்றுவிடவில்லை ஹினா ரபானி. காபூல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஹக்கானி அமைப்பு ஒரு காலத்தில் சிஐஏயின் செல்லப்பிள்ளையாக இருந்தது என்ற உண்மையைக் கூறி அமெரிக்காவின் குட்டை உடைத்தார் பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி. பக்கிஸ்த்தானிய உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் ஏற்கனவே ஹக்கானி அமைப்பு சிஐஏ ஆல் உருவாக்கி வளர்க்கப்பட்ட இயக்கம் என்றார் ஏற்கனவே. அமெரிக்காமீது மேற்கூறியவாறு பாய்ந்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் தனது நாடு அமெரிக்காவைப் பகைக்கும் நிலையில் இப்போது இல்லை என்பதை உணர்ந்து ஒத்துழைப்புக்கான "தனது கதவு திறந்திருக்கிறது" என்று முடித்துக் கொண்டார்.

ஹக்கானி பாக்கிஸ்த்தானின் ஒரு மலிவான ஆயுதம்
தமது நாட்டில் பாக்கிஸ்த்தானின் ஆதிக்கத்தை அங்கு இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் சமாளிக்க ஆப்கானிஸ்த்தானில் ஒரு பகுதியினர் விரும்புகின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இந்தியச் செல்வாக்கை அழிக்கவும் அங்கு இந்தியாவின் மூக்கை உடைக்கவும் பாக்கிஸ்த்தான் ஹக்கானி அமைப்பைப் பாவித்து வருகிறது. ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தனுக்கு இந்தியாவிற்கு எதிரான ஒரு மலிவான ஆயுதம். இதனால் தலிபானின் கிளை அமைப்புக்களில் ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தான் அரசினதும் உளவுத் துறையினதும்  விருப்பத்துக்குரிய அமைப்பாக இருக்கிறது. இதனால் தலிபானின் மற்றக் கிளை அமைப்புக்களில் இருந்து ஹக்கானி அமைப்பு வேறுபட்டு நிற்கிறது. அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களில் இருந்து தப்ப ஹக்கானி அமைப்பினர் பாக்கிஸ்த்தானின் பொருளாதார படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்க பாக்கிஸ்த்தான் அனுமதி வழங்கியுள்ளது.


தானம் கொடுத்த அமெரிக்கா தண்டம் எடுக்குமா?
ஆப்கானிஸ்த்தானில் தனது படைகளை நீண்ட காலம் வைத்திருக்க விரும்பாத அமெரிக்கா தனது இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. அப்படி முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர் அமெரிக்கா பாக்கிஸ்த்தானைக் கைகழுவி விடலாம். அத்துடன் இனி வரும் காலங்களில் அமெரிக்க-பாக் உறவு  மோசமடைந்து கொண்டே போகும். காபூலில் தலிபானின் துணை அமைப்பான ஹக்கானி அமைப்பின் தாக்குதலில் பாக்கிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமெரிக்கா மிகவும் கடுமையான தனது கரிசனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்காவிற்கு இருக்கும் சிறப்பு நட்பைத் துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. பாக்கிஸ்த்தானுக்கு எதிராக ஒரு ஒருதலைப்பட்சமான படைநடவடிக்கை எடுப்பது கூட அமெரிகாவின் சாத்தியமான தெரிவுகளில் ஒன்றாக உள்ளது. ஆப்கானிஸ்த்தானில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைக்கு பாக்கிஸ்த்தானின் ஆதரவு மிக முக்கியம் என்பதை உணர்ந்த அமெரிக்கா பக்கிஸ்தானுக்குத் தானம் கொடுத்தே அதை தன்னுடன் வைத்திருக்கிறது. ஆண்டு தோறும் அமெரிக்கா நான்கு பில்லியன் டாலர்கள் பெறுமதியான உதவிகளைப் பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருகிறது. சென்ற வாரம் அமெரிக்க மூதவை(செனட்) ஒருபில்லியன் டாலர்கள் உதவியை பாக்கிஸ்த்தானிற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வழங்க அனுமதித்திருந்தது. இப்போது பாக்கிஸ்த்தானிற்கான உதவிகளை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகள் பாக்கிஸ்த்தானின் நட்பின்றி பூகோள ரீதியில் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்.


பாவம் அமெரிக்கா.
ஏற்கனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் இரு போர் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவால் அணு ஆயுதங்களைக் கொண்ட பாக்கிஸ்தானுடன் இன்னொரு போர் முனையைத் திறக்க முடியாது. அமெரிக்கா வழங்கிய பலநவீன ஆயுதங்களும் அமெரிக்காவால் பயிற்றப்பட்ட படைகளும் பாக்கிஸ்த்தானிடம் உள்ளன. தான் வளர்த்த பாம்பால் அமெரிக்காவின் கால் சுற்றப்பட்டுள்ளது.


 அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் பிணக்குத் தீர்க்கும் முயற்ச்சியில் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளது. பாக்கிஸ்த்தானின் நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்ச்சியாக சீன உதவிப் பிரதம மந்திரி ஜென் ஜிகான்ஜு  பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற் கொண்டுள்ளார்.

அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு எதிராக பல படை நகர்த்தல்களை மேற்கொண்டும் இந்தியாவின் உதவியுடனும் இனிப் பாக்கிஸ்த்தானைப் பணிய வைக்கலாம். அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்த்தானுக்குள் உட்புகுந்து செய்து வரும் தாக்குதல்களை இனிவரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...