Thursday, 1 September 2011

கடாஃபிக்குப் பின்னர் லிபியா

கடாஃபியின் மனைவி மகள் மகன்
அல்ஜீரியாவுடனான லிபியாவின் எல்லையைக் காவல் செய்து கொண்டிருந்த கடாஃபி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களின் படைகள் மீது 27-08-2011 ஞாயிறு இரவு ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடத்தப்படுகிறது. காடாஃபியின் எதிர்ப்புப் கிளர்ச்சிக்காரர்களிடமுள்ள குண்டுகள் தீரும் வரை தந்திரமாக சண்டை நடக்கிறது. குண்டுகள் தீர்ந்தவுடன் கடாஃபிக்கு எதிரான படைகள் பின்வாங்கிச் செல்ல பத்து ஆடம்பர கார்கள் இருட்டைக் கிழித்துக் கொன்று அல்ஜீரியாவை நோக்கி விரைகின்றன. பின்னர் திங்கட் கிழமை காலை 8-45இற்கு கடாஃபியின் மனைவியான சோபியா, நிறைமாதக் கர்ப்பிணியான கடாஃபியின் மகள் ஆயிஷா, மகன்கள் மொஹமட், ஹன்னிபல் ஆகியோர் தமது நாட்டுக்குத் தப்பி வந்ததாக அல்ஜீரிய அரச அதிகாரிகள் அறிவித்தனர். தப்பிச் சென்ற கடாஃபியின் செல்ல மகள் ஆயிஷா அல்ஜீரியாவில் கடாஃபிக்கு ஒரு பேர்த்தியையும் பெற்றெடுத்தார்.

நேட்டோவின் விமானங்கள், செய்மதிகள், ஆளில்லா விமானங்கள் எல்லாம் காவல் இருந்தும் ஒரு துணீகர நடவடிக்கையை கடாஃபி ஆதரவாளர்கள் மேற்கொண்டது எப்படி. கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பலவீனத்தை கடாஃபி தரப்பினர் நன்கு உணர்ந்து கொண்டனர். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் இருபதுக்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன. கடாஃபியை அகற்றியபின்னர் இவற்றின் ஆயுதங்கள் பறிக்கப்படும். இதை உணர்ந்த சில ஆயுதக் குழுக்கள் தமக்கென சில ஆயுதங்களைப் பதுக்க முற்பட்டன. இதனால் அவர்களுக்கு ஆயுதங்கள் அளவோடே வழங்கப்பட்டன. இதற்கு ஏற்ப கடாஃபி தரப்பினர் தங்கள் ஊடறுப்புத் தாக்குதலை மேற் கொண்டு தப்பினர்.

இந்த இருபதுக்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்களின் பின்னணி என்ன?
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.

 கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.

கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.

மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் உள்ளனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். இந்தச் சூழ்நிலை ஒரு தலைமைத்துவ மோதலுக்கு வழிவகுக்கலாம். கடாஃபிக்கு எதிரான போரில் முக்கிய பங்க்காற்றியவர்களில் பலர் Libyan Islamic Fighting Group (LIFG) என்ற அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இவர்கள் இசுலாமிய அடிப்படை வாதிகள் அல் கெய்தாவுடன் நெருங்கிய தொடரிபுடையவர்கள். ஒரு கட்டத்தில் Libyan Islamic Fighting Group (LIFG) அல் கெய்தாவுடன் இணைக்கப்பட்டது. Libyan Islamic Fighting Group (LIFG)இன் போராளிகளுக்கு இரகசிய இடத்தில் வைத்து  அமெரிக்கப்படை நிபுணர்கள் சிறப்புப் பயிற்ச்சி அளித்தனர். இவர்களின் படையணி திரிப்பொலியைக் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றியது.

அதிகார வெற்றிடம் (Power Vacuum)
முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்கள் ஒதுக்கப்பட்டால் ஒரு பெரும் பதவி வெற்றிடம் லிபியாவில் ஏற்படும். இருபதுக்கு மேற்பட்ட குழுக்களில் எந்தனை குழுக்கள் முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டன என்பது பெரும் கேள்வி. லிபியாவின் பூகோள அமைப்பின் படி அது ஒரு பிராந்தியாங்களின் கூட்டமைப்பே. ஒவ்வொரு பிராந்தியங்களும் உள்ளூர் வாசிகளினாலேயே கடாஃபியின் படைகளிடம் இருந்து மீட்கப்பட்டன. ஆனால் திரிப்பொலி பல ஆயுதக் குழுக்களால் மீட்கப்பட்டன. திரிப்பொலி விமான நிலையம் ஜிந்தான் பிரதேசக் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. லிபிய மத்திய வங்கி பாராளமன்றம் ஆகியவை மிசுராட்டாப் பிரதேசக் கிளர்ச்சிக்காரர்கள் வசம் உள்ளது. திரிப்பொலியில் இருக்கும் பல ஆயுதக் குழுக்களை ஒரு கட்டளைத் தளபதியின் கீழ் கொண்டுவரும் முயற்ச்சியாக அப்துல் ஹக்கீம் அல் ஹசாடி கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு இசுலாமியத் தீவிரவாதி என மதசார்பற்ற கொள்கையுள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர். சிலர் இவரை காட்டார் நாட்டுக் கைக்கூலி என்கின்றனர். கிளர்ச்சிக் குழுக்களில் மிகப்பெரியதும் பலம் வாய்ந்ததுமான மிசுரட்டாப் பிரதேசக் குழுக்கள் இவரது தலைமையை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தனை எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அப்துல் ஹக்கீம் அல் ஹசாடியின் நியமனம் கைவிடப்பட்டது.

புகழ் பங்கீட்டில் பெரும் போட்டி
ஒவ்வொரு குழுக்களும் கடாஃபியின் படைகளுக்கு எதிரான போரில் தமது பங்களிப்பு மற்றதிலும் பார்க்க உயர்ந்தது என்று வாதிடுகின்றனர். அதற்கான காணொளிப்பதிவுகள் தம்மிடம் உண்டு என்றும் கூறுகின்றனர்.

கடாஃபிக்கு பின்னர் அமையப் போகும் அரசு ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ நீண்ட நாட்கள் எடுக்கும். இதில் கிளர்ச்சித் தலைவர்களின் அனுபவம் நம்பிக்கையளிக்கவில்லை. இதில் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முன்னாள் அரசறிவியல் பேராசிரியர் மஹ்மூட் ஜிப்ரில் சற்று அனுபவம் நிறைந்தவர். ஆனால் இவரும் கடாஃபிக்கு நெருக்கமாக இருந்தவர். கடாஃபியின் இரண்டாவது மகன் சயிஃப் கடாஃபியால் அரசியல் சீர்திருந்தங்கள் செய்வது பற்றி ஆராய அமர்த்தப்பட்டவர். இவர் மேலும் சந்தேகங்கள் பலருக்கு உண்டு.

போதிய  எண்ணை வருமானம் இருந்தபோதும் லிபியா மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியே இருந்தது. லிபியாவிற்கு சொந்தமான பல முதலீடுகள் இன்னும் வெளிநாடுகளில் இருக்கின்றன. லிபியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவையில்லை. வெளிநாட்டு தொழில் நுட்பங்களே தேவைப்படுகின்றன. இதைப் பாவித்து நேட்டோ நாடுகள் லிபியாவைச் சுரண்டும். நேட்டோவின் வங்கிகளும் காப்புறுதி நிறுவனங்களும் இனி லிபியாவில் திறக்கப்படும்.

கடாஃபியின் அமைச்சரவையில் நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல் தற்போது லிபியாவின் இடைக்கால தேசிய சபையின் தலைவராக இருக்கிறார். ஆபிரிக்காவில் மிகப்பெரிய எரிபொருள் இருபபை லிபியா கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 1.8 மில்லியன் பீப்பாய் எண்ணெய் லிபியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் லிபீயாவில் எண்ணெய் உற்பத்திச் செலவு உலகிலேயே மிகக் குறைவானது.

லிபியாவில் கடாஃபிக்கு எதிரான விமானத் தாக்குதலில் பிரித்தானியா மட்டும் 260மில்லியன் பவுண்களைச் செலவிட்டுள்ளது. இந்த "முதலீடு" எப்படித் திரும்பப் பெறப்படும்? எவ்வளவு இலாபமீட்டப்படும்?

லிபியாவிற்கு பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்தோ உலக வங்கியிடமிருந்தோ கடன் தேவைப்படாது. கடனைச் சாக்காக வைத்து தனியார் மயமாக்கும் நிர்ப்பந்தம் வரப்போகும் லிபிய அரசின் மீது சுமத்த முடியாது. நேட்டோ நாடுகள் லிபியாவின் எண்ணெய் வளத்தைச் சுரண்ட புதிய உபாயங்களை வகுக்கும்.

கடாஃபியைப் பதவியில் இருந்து அகற்றிய கிளர்ச்சிக்காரர்கள் அமைத்த இடைக்கால அரச சபையில் பெரும்பாலானவர்கள் கிழக்கு லிபியாவைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கும் அரச இயந்திரந்தில் இருக்கும் மேற்கு லிபியர்களுக்கும் கடும் பகை. இந்த முரண்பாடு புதிய லிபிய ஆட்சியாளர்களுக்கு பெரும் சவால்.

தங்கமகன் இன்று சுரங்க வழி நடை போட்டு எங்கு சென்றான்?
144தொன் தங்கத்தை தன்னுடன் வைத்திருந்த கடாஃபி அவற்றுடன் எங்கு சென்றார் என்பதுதான் இன்று பலரையும் குடையும் கேள்வி. திரிப்பொலியின் தனது மாளிகைக்குக் கீழ் ஒரு நகரத்தையே கடாஃபி அமைத்திருந்தார். அது திரிப்பொலி விமான நிலையம் வரை செல்கிற பாதையுடன் கூடியது. அங்கு சிறிய ரக கார்களும் இருந்தன. கடாஃபியின் தங்கம் இனி எதற்குப் பயன்படும். அவரால் இனக்குழும முரண்பாடுகளைப் பயன்படுத்தி லிபியாவில் இன்னும் ஒரு கிளர்ச்சியை ஒழுங்கு செய்ய முடியும். கடாஃபியின் கன்னிக் காவலர்கள் எங்கே என்பது இன்னும் ஒரு கேள்வி.
கடாபியின் கன்னி மெய்ப்பாது காவலர்கள்

லிபியாவின் எண்ணெய் வளத்தை கருத்தில் கொண்ட நேட்டோ நாடுகள் இனி பல இனக் குழுமங்களைக் கொண்ட லிபியாவை என்ன செய்யப் போகின்றன. இனக் குழுமங்களிடை குரோதத்தை வளர்த்து அங்கு தமது படைகளை நிலை கொள்ள ஒரு நொண்டிச் சாட்டை உருவாக்குமா? கடாஃபி தனது ஆட்சியை நிலை நிறுத்த நாடெங்கும் புரட்சிக்குழுக்களை அமைத்து அதன் மூலம் நாட்டைத் தனது பிடிக்குள் வைத்திருந்தார். இந்த புரட்சிக் குழுவைச் சேர்ந்தவர்களிடமிருந்து நாட்டை இனிப் பாதுகாக்க வேண்டும். லிபியாவில் மேற்குலக ஆதிக்கத்தை இசுலாமிய அடிப்படைவாதிகளோ ஈரானோ விரும்பாது. இசுலாமியத் தீவிரவாதிகள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடையே ஊடுருவி இருக்கலாம்.  ஈரானும் தனது கையாட்களை லிபியாவில் வைத்திருக்கலாம். இவை லிபியாவின் எதிர்காலத்தை அமைதியுள்ள ஒன்றாக இருக்க உதவமாட்டாது. நேட்டோ நாடுகள் லிபியாவை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரிக்க முயற்ச்சி செய்யலாம். அவற்றின் மீதான ஆதிக்கத்தை தம்மிடையே பங்கு போட்டுக் கொள்ளலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...