Thursday, 28 July 2011

ஆட்டம் காண்கிறதா அல் கெய்தா?

மே மாதம் இரண்டாம் திகதி பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கெய்தா இயக்கம் அமெரிக்காவிற்கு எதிரான் ஒரு பலத்த எதிரடியைக் கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் சிலர் அல் கெய்தா "அந்தளவும்தான்" என்கின்றனர். ஆனால் "பின் லாடனின் முடிவு அல் கெய்தாவின் முடிவல்ல" இதுதான் பின் லாடன் கொல்லப்பட்ட மறுநால் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தி. ஒரு கரந்தடி இயக்கத்திற்கு முக்கியமானது எப்போது பதுங்க வேண்டும் என்பதை நன்கறிந்திருத்தல். ஒரு கரந்தடி இயக்கத்தின் பலத்தையோ பலவீனத்தையோ சரியாகக் கணிப்பிடுவதும் அரிது. பின் லாடன் போன்ற ஒரு தனிப்பட்ட செல்வாக்கு மிக்க தலைவரின் இழப்பு எந்த இயக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா அணமையில் பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தார். அதன் போது அவர் "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" என்றார்.

அல் கெய்தாவின் அண்மையப் பின்னடைவுகள்:

1. பின் லாடன் கொலையும் தகவல் களஞ்சியக் கைப்பற்றலும்
அமெரிக்க கடற்படையின் சிறப்பு சீல் படையணியினர் பில் லாடனை அவரது மாளிகையில் வைத்துச் சுட்டுக் கொன்றதுடன் அங்கிருந்த பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அவற்றிலுள்ள தகவல்கள் அல் கெய்தாவிற்கு எதிரான போரில் கிடைத்த தங்கச் சுரங்கம். அதை வைத்து பாக்கிஸ்த்தானில் உள்ள அல் கெய்தாவிற்கான ஆதரவுத் தளத்தை அமெரிக்கா சிதைத்து வருகிறது.

2. அரபு வசந்தம்

அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தமையும் அது இரு நாடுகளில் ஆட்சியாளர்களை அகற்றியமையும் இசுலாமியர்களை அல் கெய்தாச் சித்தாந்தத்தில் இருந்து விலக்கி அவர்களை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது. இது அல் கெய்தாவிற்கான ஆதரவுத் தளத்தைக் குறைத்து விட்டது. 'அரபு நாட்டு ஆட்சியாளர்கள் அமெரிக்க ஆதரவாளர்கள். அமெரிக்காவிற்கு எதிரான போரில் வென்றால்தான் இந்த ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து தூக்க முடியும்" என்றே பின் லாடன் போதித்து வந்தார். ஆனால் துனிசியாவிலும் எகிப்திலும் மக்கள் வேறு விதமாக சிந்தித்து வெற்றி கண்டனர். அரபு  வசந்தம் எனப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் மேற் கொண்ட எழுச்சி அல் கெய்தாவின் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது அல் கெய்தா தங்கள் கொள்கைகளைக் கார்ட்டூன் படங்கள் மூலம் பரப்ப முயல்கிறது.

3. ஆளில்லா விமானங்கள் மூலம் நடக்கும் தொடர் தாக்குதல்கள்.
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடந்த சில வருடங்களாக நடாத்தி வரும் தாக்குதல்கள் அல் கெய்தாவிற்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்கள ஆளணிகளையும் படைக்கலன்களை விரும்பியபடி நகர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறையினர் தமது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல் கெய்தாவைப் பின் வாங்க வைத்தது என்கின்றனர். அது மட்டுமல்ல அமெரிக்கா இன்னும் பல புதுவித ஆளில்லா விமானங்களைக் களமிறக்க இருக்கிறது. ஆளில்லா விமானங்களை அதிகம் பயன் படுத்தலாம் என்ற துணிவுடனேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து பாரிய அளவிலான அமெரிக்கப் படைகளை அடுத்த ஆண்டு விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

4. உலகெங்கும் அல் கெய்தாவிற்கு ஆதரவு குறைந்தமை.
2001இல் ஆப்கானிஸ்தானில் ஒரு அரசையே நடத்தி வந்த பின் லாடன் அரபு நாடெங்கும் ஒரு கதாநாயகனாக கருதப்பட்டார். ஆனல் பின்னர் அவரின் முக்கிய ஆதரவுத் தளங்களான சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான், ஜோர்டன், மொரொக்கோ, இந்தோனோசியா போன்ற நாடுகளில் செய்த கருத்துக் கணிப்புக்கள் அல் கெய்தாவிற்கு சாதகமாக இல்லை.

5. பிளவுகளை எதிர் கொள்ளும் ஐமன் அல்ஜவஹிரி.
பின் லாடனிற்குப் பின்னர் அல் கெய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஐமன் அல்ஜவஹிரி தனது இயக்கத்தின் பிளவுகளைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார். அத்துடன் பாக்கிஸ்தானில் இப்போது அல் கெய்தாவிற்கு சாதகமான சூழ்நிலை இல்லை.

ஆப்கானிஸ்தானில் படுவது யேமனில் தழைக்குமா?
இப்போது அமெரிக்காவிற்கு தலையிடி கொடுப்பது AQAP - AL-QUAEDA IN THE ARABIAN PENINSULA ஆகும். இதன் பிரதான தலம் யேமன். இது இப்போது உள்ள அல் கெய்தாவின் இணை அமைப்புக்களில் பலமானது அல்லது அமெரிக்க வார்த்தையில் பயங்கரமானது. பின் லாடனை கொன்ற சில தினங்களில் AQAP தலைவர் ஒலாக்கி மீது குண்டு வீச்சுத் தாக்குதல் ஒன்றை அமெரிக்க சிறப்புப் படையணி மேற் கொண்டது. அவர் தனது வாகனத்தை மாற்றித் தப்பித்துக் கொண்டார். இப்போது அமெரிக்கா யேமன் அரசுடனும் சவுதி அரேபிய அரசுடனும் இணைந்து AQAPஐ ஒழித்துக் கட்ட முயல்கிறது. அத்துடன் பாலைவனத்தில் நன்கு செயற்படக் கூடிய ஆளில்லாத் தாக்குதல் விமானங்களை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இவ்விமானங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் களமிறக்கப்படும்.

பில் லாடன் ஏற்கனவே வென்று விட்டாரா?
பின் லாடனின் முக்கிய கொள்கை அமெரிக்க பொருளாதாரத்தைப் பலவீனப் படுத்தி அதை அடி பணிய வைப்பதே. அவர் அடிக்கடி சொல்வதும் அதுதான். அமெரிக்காவின் இப்போதைய கடன் நெருக்கடி பின் லாடனின் வெற்றியா? இது பற்றி வாசிக்க: கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.

அல் கெய்தா வித்தியாசமானது.
2001/09/11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா தனது பின் லாடன் வேட்டையை தீவிரமாக பல பில்லியன்கள் செலவில் நவீன கருவிகளுடன் முடுக்கி விட்டபோது பின் லாடன் தனது அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் லாடன் தன்வசம் எந்த வித தொடர்பாடல் கருவிகளையும் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதை வைத்து அமெரிக்காவால் அவர் இருக்கும் இடத்தை அறிந்திருக்க முடியும். இதனால் பின் லாடன் தனது அல் கெய்தாவை ஒரு franchise இயக்கமாக மாற்றினார். அதன்படி வேறு நாடுகளில் இருக்கும் அல் கெய்தா இயக்கம் பின் லாடனின் கொள்கைகளுக்கு அமைய தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயற்பட முடியும். அதனால் இப்போது அல் கெய்தா ஒரு தலமையின் கட்டளையின் கீழ் இயங்கும் கிளைகளைக் கொண்ட இயக்கமல்ல. இந்த அமைப்பு இப்போது அல் கெய்தாவிற்கு சாதகமாக இருக்கிறது.  தலையில் வேட்டையைத் தொடங்கிய வால்களைத் தேடிப் பிடிக்க பல காலம் எடுக்கும்.

2 comments:

Unknown said...

You did't hyperlink the US page

Vel Tharma said...

Thanx Mr M. Shanmugam. I corrected it.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...