Monday, 23 May 2011

அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து ஆடும் இரட்டை நாடகம்


பாக்கிஸ்தானைப் பற்றி பிரபல வட இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு நகைச்சுவை: அயத்துல்லா கொமெய்னி கடவுளிடம் போய்க் கேட்டார், "எனது நாட்டில் இசுலாமிய முறைப்படி ஆள்கிறேன் ஆனால் நாட்டிற்கு ஒரு விமோசனம் இல்லை. எப்போது எனது ஈரான் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்?" கடவுள் சொன்னார் உனது வாழ் நாளில் அது நடக்காது என்று. அப்போதைய பாக்கிஸ்தானிய அதிபர் சியா உல் ஹக் அதே கேள்வியை கேட்டார். கடவுள் சொன்னார் "எனது வாழ் நாளில் அப்படி ஒன்று நடக்காது" என்று. பாக்கிஸ்த்தான் ஒரு நாளும் உருப்படாது என்பதையே அவர் இப்படி நகைச்சுவையாக எழுதினார். பாக்கிஸ்தான் உருப்படாதா அல்லது பாக்கிஸ்த்தானை அமெரிக்கா உருப்பட விடுகிறதில்லையா?

அமெரிக்க பாக்கிஸ்தான் உறவு
அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் நீண்டகால உறவை கொண்டுள்ளன. 1950களில் கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை ஜவர்லால் நேரு போன்ற பல வளரும் நாடுகளின் தலைவர்கள் உருவாக்கியபோது அமெரிக்கா அதில் பாக்கிஸ்த்தானைச் சேரவிடாமல் தன்னுடன் உறவு வைத்திருக்கும்படி வேண்டியது. நேரு தனது நாட்டு முதலாளிகளை இரு முனையில் பாதுகாக்கும் பணியை மேற் கொண்டிருந்தார். ஒன்று தனது நாட்டு முதலாளிகளை மேற்கு நாட்டு முதலாளிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மற்றது தனது நாட்டில் பொதுவுடமை வாதம்(கம்யூனிசம்) பரவாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காகவே அவர் கூட்டுச் சேரா நாடுகளின் அணியை உருவாக்கினார். வெளியில் கூட்டுச் சேரா நாடுகள் மேற்குலகுடனோ அல்லது சோவியத் ஒன்றியத்துடனோ கூட்டுச் சேர்வதில்லை என்ற கொள்கையுடையது என்று கூறப்பட்டது. இந்திய முதலாளிகளுக்கு மேற்கத்திய முதாலாளிகளால் பொதுவுடமை வாதத்திலும் பார்க்க அதிக பயமுறுத்தல் இருந்தது. இதனால் கூட்டுச் சேரா நாடுகள் அணி சோவியத் ஒன்றியதிற்கு நெருக்கமாகவே இருந்தது. இதனால் சோவியத் இந்திய உறவு நல்ல முறையில் இருந்தது. இதைப் பயன்படுத்தி பாக்கிஸ்த்தானை அமெரிக்கா தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

பாக்கிஸ்த்தானியப் பிரதமர் அயூப் கான் அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையையும் செய்து கொண்டார். எழுபதுகளில் பங்களாதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்த்தானின் இனக்கொலைக்கு அமெரிக்கா உதவி செய்தது. சுல்பிகார் அலி பூட்டோ இந்தியாவுடன் சிம்லா உடன்படிக்கை செய்து இந்தியாவுடன் முரண்பாடுகளைக் களைந்து தனது நாட்டின் பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைத்து பாக்கிஸ்த்தானை முன்னேற்ற முயற்ச்சி செய்தார். அவரது ஆட்சி கவிழ்க்கப் பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார். பாக்கிஸ்த்தான் பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைத்தால் பாதிக்கப்படுவது அமெரிக்க ஆயுத விற்பனையாளர்களே. 1980களில் ஆப்கானிஸ்த்தானில் இருந்து சோவியத் படைகளை விரட்ட அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து செயற்பட்டன. பல பில்லியன் டொலர்கள் செலவழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகளை விரட்டப் போராடும் முஜாகிதீன் ஆயுதக் குழுக்களுக்கு பாக்கிஸ்த்தானில் பயிற்ச்சிகள் அமெரிக்க உளவுத்துறையால வழங்கப்பட்டன. சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியபின் அங்கு ஒரு இஸ்லாமியத் அடிப்படைவாதக் கொள்கையும் அமெரிக்க விரோதமும் கொண்ட தலிபான் அரசு அமைந்தது. சோவியத்தை ஆப்கானிஸ்த்தானில் இருந்து விரட்டும் நோக்கத்துடன் உருவான நெருங்கிய உறவைப் பாவித்து பாக்கிஸ்த்தான் அணு ஆயுத நாடாகியது. அமெரிக்கப் பாராளமன்றம் ஆத்திரம் கொண்டு ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் (1989) பாக்கிஸ்த்தானிற்கான நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. 1997இல் பாக்கிஸ்த்தான் தலிபான்களை ஆப்கானிஸ்த்தானின் சட்டபூர்வ ஆட்சியாளர்களாக அங்கீகரித்தது. ஆனால் அமெரிக்க தனது தூதுவரகங்களில் குண்டு வைத்தமைக்காக தலிபான் ஆட்சியாளர்கள் பின் லாடனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 1998இல் பாக்கிஸ்த்தான் ஐந்து அணுஆயுதப் பரிசோதனைகளை மேற் கொண்டது. இதனால் அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கான உதவிகளை நிறுத்தியதுடன் ஆயுத விற்பனைகளையும் தடை செய்தது. 2009 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானை மிகவும் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் உள்ள அமெரிக்க எதிர்ப்புத் தீவிரவாத இயக்கங்களான தலிபானையும் அல் கெய்தாவையும் வேட்டையாட பாக்கிஸ்த்தனுடனான நட்பை அமெரிக்கா புதுப்பித்தது. அமெரிக்கக் கொள்கையில் ஆப்-பாக் கொள்கை என்ற புதிய பதம் உருவானது. வெளியுறவுக் கொள்கையும் புதிய உருப்பெற்றது.

நாடகம் ஆரம்பம்
2009-09-11 தாக்குதலின் பின் பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் இருக்கக் கூடாது என்பதே ஆப்-பாக் தீவிரவாதிகளின் நோக்கம். இதற்கு அமெரிக்க பாக் அரசுகள் ஒரு இரட்டை வேட நாடகத்தை ஆடத் தொடங்கின. பாக்கிஸ்த்தனிய ஆட்சியாளர்கள் அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் ஆதரவு போல ஒரு வேடம் தாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு இந்தத் தீவிரவாத இயக்கங்களை ஒழிக்க எல்லா உதவிகளையும் வசதிகளையும் செய்து வருகின்றனர். அமெரிக்காவும் அடிக்கடி பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறது என்று கூச்சலிட்டுக் கொண்டே இருக்கும்.

2010இல் இருந்து அமெரிக்க ஆளில்லா நவீன விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் அடிக்கடி கொல்லப்படுகின்றனர். பாக்கிஸ்த்தான் இதைக் கண்டிப்பது போல் பாசாங்கு செய்து வருகிறது. தனது நாட்டுக்குள் நுழையும் அமெரிக்க விமானங்களுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை.

பாக்கிஸ்த்தனிய படைத்துறையின் முகத்தில் கரி
பாக்கிஸ்த்தானிய மக்களை பொறுத்தவரை பாக்கிஸ்த்தானியப் படையினர் அவர்களது செல்லப் பிள்ளைகள். இந்தியாவிடம் இருந்து பாக்கிஸ்த்தானைப் பாதுகாப்பவர்கள். ஆனால் அமெரிக்க சீல் படைப்பிரிவின் வான்கலங்கள் பாக்கிஸ்த்தானுக்குள் நுழைந்து பாக்கிஸ்த்தானியப் படையினரின் தளங்களுக்கு அண்மையில் உள்ள பின் லாடனின் மாளிகைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை பாக்கிஸ்த்தானிய மக்களுக்கு படையினர் மேல் இருந்த மதிப்பைத் தகர்தது. நாளை இந்தியாவும் இதையே செய்யுமா என்ற கேள்வியையும் அவர்களிடையே எழுப்பியது. அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தனின் மிகப் பெரிய நகரான கராச்சியில் ஆறு தலிபான் போராளிகள் கடற்படை முகாமை 18 மணித்தியாலங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை அவர்களை அதிர வைத்துள்ளது. நாற்பது நிமிடங்கள் நடந்த பின் லாடனுக்கு எதிரான படை நடவடிக்கை பற்றி அது தொடங்கி பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் தனக்கு அமெரிக்கா அறிவித்ததாக பாக்கிஸ்த்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்திருந்தார்.

பெரும் தொடர் நாடகம்
தேவை ஏற்படின் பின் லாடனைக் கொல்லச் செய்த படை நடவடிக்கைபோல் இன்னும் பாக்கிஸ்த்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த நான் உத்தரவிடுவேன் என்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இனி இப்படி ஒரு தாக்குதல் செய்யக் கூடாது என்று தாம் அமெரிக்காவை எச்சரிப்பதாக பாக்கிஸ்த்தான் சொல்கிறது. இதுவும் ஒரு இரட்டை வேட நாடகம். நீ தேவையான நேரமெல்லாம் அடி நான் உன்னைத் திட்டுவது போல் திட்டுகிறேன்.

இந்திய நப்பாசை
பின் லாடன் மீதான தாக்குதலின் பின் அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவில் விரிசல் ஏற்படுமென்கின்றன இந்தியப் பத்திரிகைகள். இந்தியா இதை வைத்து மனக் கோட்டை கட்ட வேண்டாம் என்கின்றன பாக்கிஸ்த்தனியப் பத்திரிகைகள்.
பின் லாடன் பாக்கிஸ்த்தானில் இருப்பது அதன் அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அது தெரியாதது போல் நாடகமாடியது என்று சில அமெரிக்க மக்களவை உறுப்பினர் கொதித்தனர். பாக்கிஸ்த்தானிற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்று அவர்கள் உறுமினர். பாக்கிஸ்த்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தமக்கு ஒன்றும் தெரியாது என்றார். அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ரொபேர்ட் கேட்ஸ் பாக்கிஸ்த்தான் அரசினருக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

ஏப்ரல் மாத இறுதியில் பாக்கிஸ்த்தானிய மாவிரர் தினத்தில் பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி பர்வஸ் கயானி தாம் தமது நாட்டின் படைத்துறையினர் தியாகம் செய்து காத்த இறைமையை அமெரிக்கத் தலையீட்டிற்கு விற்கமாட்டோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார். அப்போதே - பின் லாடன் கொலைக்கு முன்னரே- அவர் மீதான கடும் விமர்சனங்கள் எழும்பத் தொடங்கிவிட்டன. அமெரிக்க விமானங்கள் அடிக்கடி பாக்கிஸ்த்தனுக்குள் நுழைந்து அப்பாவிகளைக் கொல்வதை மக்கள் விரும்பவில்லை.

இனி நடக்க விருப்பவை
  1. அமெரிக்கா தொடர்ந்தும் பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து தாக்குதல்கள் நடாத்தும்.
  2. அமெரிக்கா தனது தலிபான்களுக்கும் அல் கெய்தாவிற்கும் எதிரான படை நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானை தொடர்ந்து உதவும் படி மிரட்டும்.
  3. பாக்கிஸ்த்தானில் மக்கள் கிளர்ந்து எழுவர். அவர்கள் மீது அடக்கு முறை கட்டவுழ்த்து விடப்படும்.
  4. அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் ஒன்றை ஒன்று தாக்கி அறிக்கைகள் விடும் நாடகம் தொடரும்.

அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு தொடர்ந்து வளரும் பாக்கிஸ்த்தான் வளராது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...