Monday, 14 March 2011

பான் கீ மூனின் வெற்றி வாய்ப்பும் ஐநாவையும் அசிங்கப் படுத்தும் இந்தியக் குடும்பச் சலுகை யும் © 2011 Vel Tharma


அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பை சட்டவிரோதமானது என்று துணிந்து சொல்லிப் பல அரசதந்திரிகளை வியக்கச் செய்த கோபி அனன் அமர்ந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் ஆசனத்தில் ஒரு உலகின் மிகப் பயங்கரமான கொரியர் என்று விமர்சிக்கப் பட்ட பான் கீ மூன் வந்து அமர்ந்தது ஒரு துக்க கரமான நிகழ்வுதான். அதிலும் துன்பகரமான நிகழ்வுகள் பான் கீ மூன் மீண்டும் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடப்போகிறார் என்பதும் அவர் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்பதும். பான் கீ மூனின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

பொதுச் செயலர் தேர்வு முறை

15உறுப்பினர்களைக் கொண்ட ஐநா சபையின் பாதுகாப்புச் சபை பொதுச் செயலாளரை நியமிக்க அதைப் 192 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை அங்கீகரிக்க வேண்டும். பொதுச் சபையில் அமெரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்சு ஆகிய இரத்து அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகள் உள்ளன இவற்றை P-5 என அழைப்பர். தற்போது பாது காப்புச் சபை உறுப்புரிமையுள்ள மற்ற நாடுகள் பொஸ்னியா-ஹெஜெகோவினா, பிரேசில், கபன், கொலம்பியா, ஜேர்மனி, இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென் ஆபிரிக்கா ஆகியவையாகும்.

P-5நாடுகளில் இரசியாவிற்கு பான் கீ மூன் கொசோவா விவகாரத்தில் அமெரிக்க சார்பாக நடந்து கொண்டதாக அதிருப்தி, இரசியாவிற்கும் சீனாவிற்கும் அவர் எகிப்து அதிபர் ஹஸ்னி முபராக்கை பதிவியில் இருந்து விலகச் சொன்னது பிடிக்கவில்லை. ஜோர்ஜியாவின் அப்காஜியாப் பிராந்திய விவகாரத்தில் பான் கீ மூன் இரசியாவைத் திருப்திப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரித்தானியாவும் பிரான்சும் அதிருப்தி அடைந்திருந்தன.Aஇலங்கை அரசின் வன்னிப் படுகொலைகள் சூடானிய அரசின் டாபூர் இனக் கொலைகளுக்கு எதிராக பான கீ மூன் செயற்படவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் அவர் மீது அதிருப்தி கொண்டுள்ளன. சூடானிய மற்றும் இலங்கைப் படுகொலைகளைப் பற்றிய உண்மைகளையும் அதில் பன் கீ மூன் நடந்து கொண்ட விதங்கள் பற்றியும் பத்தி பத்தியாக எழுதலாம். ஆக மொத்தத்தில் பான் கீ மூன் இதுவரை பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வோருகட்டத்தில் பகைத்துள்ளார். பின்னர் அவற்றை ஏதாவது ஒரு விதத்தில் திருப்திப்படுத்தியுள்ளார். அதே வேளையில் சில நாடுகளிற்கு சாதகமாகவும் நடந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதர சமூக அபிவிருத்திக்கான பிரதிச் செயலரான சீனாவை சேர்ந்த ஷா ஜுக்காங் ஐநாவின் ஒரு மூடிய அறைக்குள் 2010இல் பிற்பகுதியில் நடந்த கூட்டத்தில் பான் கீ மூனை வைத்து வாங்கு வாங்கென்று வாங்கியதாக இலண்டன் ரெலிகிராf பத்திரிகை தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த பான் கீ மூன் சீனாவைச் சமாதானப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டார். சீனாவைத் திருப்திப் படுத்த நோபல் பரிசு வென்ற சீனரான லியூ ஷியாபோவை பாராட்ட மறுத்தார் பான் கீ மூன்.

போட்டியிட யாரும் முன்வரவில்லை
பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகள் எவையும் இதுவரை பான் கீ மூனிற்கு போட்டியாக எவரையும் முன் மொழிந்ததாகத் தெரியவில்லை. தெரியாத தேவதையிலும் பார்க்க தெரிந்த பேய் பரவாயில்லை என்று அவை கருதுவது போல் தெரிகிறது. மேற்கத்திய ஐநா அரசதந்திரிகள் ஒருவர் “It’s not as if he’s lightning in a bottle, but we can live with him.” என்று தெரிவித்ததாகச் செய்திகள் வந்துள்ளன.

பான் கீ மூனைப் பற்றி மோசமான விமர்சனங்கள்
  • உலக நெருக்கடிகளிற்கு ஐநாவின் செயற்பாடுகள் தேவைப் படும் நேரங்களில் பான் கீ மூன் அமைதியாக இருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட வேளையில் தனது தலைமைத்துவத்தை வெளிக்காட்டவில்லை என்றும் நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் குற்றம் சுமத்தியிருந்தார். ஒரு அமெரிக்க ஊடகம் இவரை உலகின் மிக ஆபத்தான கொரியநாட்டவர் என்று வர்ணித்தது.
  • பான் கீ முனிற்கு முன்னர் இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போது காட்சியளிப்பார். புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தி அவர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து வெளிவந்தது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழ்ங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. இதனால் பாவம் இவரது பேச்சாளர் பர்ஹன் ஹக் பலதடவைகள் நிரூபர்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.
  • பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் இப்போது வெளிவந்துள்ளது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார்.
  • 2009 டிசம்பரில் கொப்பெனஹின்னில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
  • ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள் இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிடுகிறார்.
மனித உரிமைக் கண்காணிப்பகம்
மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் பிலிப்பே பலோப்பியன் பான் கீ மூனைக் கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். மனித உரிமைக் கண்காணிப்பகம் இந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில் பான் கீ மூன் மனித உரிமை மீறுபவர்களை கண்டிப்பதில்லை என்ற குற்றச் சாட்டைத் தெரிவித்தது. இந்த அறிக்கையை வெளியிட்ட பிலிப்பே பலோப்பியன் பான கீ மூன் இரண்டாம் முறை தெரிவு செய்யப் படத் தகுதியற்றவர் என்றார். 2010 நவம்பரில் பான் கீ மூன் சீனா சென்று சீனத் தலைவரைச் சந்தித்த போது சீனாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்காததையிட்டு பிலிப்பே பலோப்பியன் தனது கவலையையும் வெளியிட்டார்.

அமைதியான அரசதந்திரி
பான் கீ மூன் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர். அவர் பகிரங்கமாக கருத்துரைப்பது குறைவு என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஜப்பானிய அரசதந்திரி ஒருவர் ஒரு படி மேலே சென்று பான் கீ மூன் ஒரு யோகி போன்றவர் என்றார். யோகி என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம். அவரது பேச்சல்ல என்றார். ஆனால் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் பிலிப்பே பலோப்பியன் பான் கீ மூன் தனது செய்ற்பாடின்மையை அமைதியான அரசதந்திரம் என்னும் போர்வைக்குள் மூடி மறைக்கிறார் என்கிறார்.

பான் கீ மூன் இப்போது பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமை கொண்ட பொஸ்னியா-ஹெஜெகோவினா, பிரேசில், கபன், கொலம்பியா, ஜேர்மனி, இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென் ஆபிரிக்கா வற்றை தம் வசப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த நாடுகளுக்கு பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

பான் கீ மூனும் இந்தியாவும்
பான் கீ மூனிற்கும் இதியாவிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அவர் இந்தியாவில் கொரிய அரசதந்திரியாகப் பணியாற்றியவர். அவரது இளைய மகள் சித்தார்த் சட்டர்ஜி என்னும் இந்தியப் படைத்துறையைச் சேர்ந்தவரை மணம் முடித்துள்ளார். அவரது பிரதம ஆலோசகர் விஜய் நம்பியார் என்னும் இந்தியர் (தமிழர்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒருவர்). சரியான நேரத்தில் இந்தியா பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. இந்தியாவின் உறுப்புரிமை 2012 வரை இருக்கும். பாதுகாப்புச் சபையில் இந்தியா தனக்குச் சாதமாக வாக்களிக்க பான் கீ மூன் இந்தியாவிற்கு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி இங்கு எழலாம். இதற்கான பதில் இந்தியாவின் ஐநாவிற்கான நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரியின் மனைவி லக்ஷ்மி பூரிக்கு ஐநாவின் பெண்கள் அமைப்பில் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியை பான் கீ மூன் வழங்கியதில் இருக்கிறதா? ஹர்தீப் சிங் பூரியின் மனைவி லக்ஷ்மி பூரிக்கு ஐநாவின் பெண்கள் அமைப்பில் பிரதிப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியது ஒரு முறை கேடான செயல் இல்லையா என்றும், இது இந்தியா தனக்கு வாக்களிக்க பான் கீ மூன் செய்த வேலையா என்றும் Inner City Press சந்தேகம் எழுப்பியுள்ளது. ஏற்கனவே தனது இந்திய மருமகனுக்கு பான் கீ மூன் பதவி உயர்வு வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பான் கீ மூனின் மருமகன் சித்தார்த்தை சட்டர்ஜீ ஐநாவின் திட்டச் சேவைகளில் நியமித்தது ஒரு பதவி உயர்வு அல்ல என ஐநா பேச்சாளர் தெரிவித்தார். ஆனால் சித்தார்த் சட்டர்ஜீ செயற்படாமல் இருந்தமைக்காக அவர் அங்கு ஒரு தளபாடம் போல் இருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டார். சித்தார்த் எந்த தகமையில் நியமிக்கப்பட்டார் அவரது தகமைகள் என்ன என்ற கேள்விகளுக்கு ஐநா பதிலளிக்கவில்லை. சித்தார்த்திற்கு ஐநா செலவில் அடிப்படை கணிதக் கல்வியும் புகட்டப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டத்திற்கு மருமகன் தடையாக அமையாலாம் என்பதால் அவர் இப்போது அப்பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று அறிய்பப்படுகிறது.

இதுவரை இருந்த எட்டு ஐநா பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூனே தீவிர அமெரிக்க விசுவாசி. அவரது நாடான தென் கொரியா அமெரிக்காவுடன் நல்ல உறவை வைத்துள்ளது. இது பான் கீ மூனின் மீள் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
© 2011-03-14- Vel Tharma

2 comments:

Anonymous said...

கண்டித்த கோபி அன்னான் அவரின் உத்தரவை மீறி அமேரிக்கா படைகளை அனுப்பியபோது பதவியை துறந்தாரா!!கண்டிப்பதை நானும் செய்ய முடியும்,இரசாயன ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்படாத நிலையிலும் அமெரிக்க கொலைகள் அரங்கேறிய நிலையிலும் கோபி அன்னான் பதவியை கையில் பிடித்தபடி மௌனம் காத்ததை மறந்து விட்டீர்களா அல்லது உங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்பதால் பாக்கி மூன் கெட்டவராக கோபி அன்னான் நல்லவராகினாரா!!என்ன அரசியலோ!???

Anonymous said...

பான் கீ மூனிற்கு எதிராக தமிழர்களது விமர்சனங்கள் எதுவும் இங்கு முன்வைக்கப்படவில்லை. அவரது "குடும்ப பராமரிப்பு" பற்றியும் அவரைப்பற்றி பலதரப்பின் கருத்துக்களும் மட்டுமே முன்வைக்கப்பட்டன. ஒரு கேவலமான நாட்டுக்கு ஒரு கேவலமானவன்தான் உதவுவான்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...