Monday, 31 January 2011

மக்கள் பேரெழுச்சி: துனிசியாவையும் எகிப்தையும் தொடர்ந்து அல்ஜீரியாவும் லிபியாவும்!


துனிசியாவின் பிரச்சனைகளை மேற்குலக ஊடகங்கள் மூடி மறைத்தே வந்தன. பிராந்தியத்தின் படு மோசமான அடக்கு முறையாளர் ஜினி அல் அபடைன் பென் அலியை மக்கள் நாட்டை விட்டு விரட்டினர். இது திடீரென்று வெடித்த புரட்சியல்ல. தொடந்து பல காலங்களாக நடந்த மக்கள் எழுச்சி அண்மையில் பெரிதாக வெடித்தது.

துனிசியாவில் ஏற்பட்ட எழுச்சியின் முக்கிய அம்சம் இது ஒரு மத சார்பற்ற எழுச்சி. அங்குள்ள கற்றவர்களாலும் தொழிற் சங்களாலும் இப்புரட்சி முன்னெடுக்கப்பட்டது. ஒரு இசுலாமிய நாட்டில் மதசார்பற்ற எழுச்சி ஏற்பட்டது பலரையும் வியக்க வைத்தது.

துனிசியாவில் மக்கள் ஊழல் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து அரசைக் கவிழ்ததைத் தொடர்ந்து எகிப்திலும் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஊரடங்கையும் மீறி தலைநகர் கெய்ரோவில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்தனர். செய்வதறியாது ராணுவம் பின்வாங்கியது. இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் தனது அமைச்சரவையைக் கலைத்தார் முபாராக். அத்துடன், துணை அதிபரையும், புதிய பிரதமரையும் அறிவித்திருக்கிறார். இவை எதுவும் மக்களை அமைதிப் படுத்தவில்லை போராட்டங்கள் தொடர்கிறது.


அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் கெய்ரோ வீதிகளில் குவிந்து அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். முபாரக் அறிவித்த் மந்திரி சபை மக்களைத் திருப்திப் படுத்தவில்லை. அந்த மந்திரி சபை மக்கள் உடையில்(சிவில்) ஒரு இராணுவக் கும்பல் என்று மக்கள் கருதுகின்றனர்.
எகிப்தில் கிளர்ச்சியை உருவாக்கியது முஸ்லிம் சகோதர அமைப்பு என்னும் ஒரு இஸ்லாமிய அமைப்பு. இது ஒரு செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அமைப்பு. ஆனால் இது வன்முறைகளை விரும்புவதில்லை. அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலைக் கண்டித்தது இந்த அமைப்பு.

அமெரிக்காவின் தந்திரம்
எகிப்து அதிபர் ஹன்சி முபாரக் வீழ்ச்சி அடைந்தால் அது இசுலாமியத் தீவிர வாதிகளின் கைகளில் விழுந்து விடுமா என்ற அச்சம் மேற்கு நாடுகளைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. துனிசியப் புரட்சி போலில்லாமல் எகிப்தில் நடக்கும் எழுச்சி பல கொள்ளைச் சம்பவங்கள் நிறைந்தவையாகக் காணப்படுகிறது. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி சூயஸ் கால்வாயுடாக நடக்கிறது. எகிப்தின் எழுச்சி மேற்குலக வர்த்தகர்களையும் அரசுகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்குச் சந்தைகளும் ஆட்டம் காண்கிறது. இப்போது மேற்குலக நாடுகள் எப்படி காய்களை நகர்த்தும் எனப்து பெரும் கேள்வி. நோபல் பரிசு பெற்றவரான எதிர் கட்சி அரசியல்வாதி மொஹமெட் அல் பரடெ கிளர்ச்சி செய்யும் மக்களுடன் இணைந்திருப்பது. ஒரு அமெரிக்கக் காய் நகர்த்தலாக இருக்கலாம். நோபல் பரிசு பெற்றாவர்களில் அநேகர் அமெரிக்க விசுவாசிகளே. அமெரிக்கா கிளர்ச்சிக்காரர்களுக்கோ அல்லது முபராக்கிற்கோ ஆதரவு தெரிவித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒரு அமைதியான மாற்றத்தை விரும்புவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. இப்போது இருக்கும் தனக்கு விசுவாசமானவரை நீக்கி விட்டு இன்னொரு விசுவாசியை பதவிக்கு கொண்டுவருவதே அமெரிக்காவின் "அமைதியான மாற்றம்" என்பதன் பொருள். எகிப்தின் சகல அரச படைத்துறையினரும் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். அங்கு ஒரு அமைதியான மாற்றத்தை அமெரிக்கா ஏற்படுத்துவது அதற்கு இலகு.


அடுத்த மக்கள் எழுச்சி - அல்ஜீரியா
அல்ஜீரியாவை அப்துல் அசிஸ் பௌடெபிலிக்கா 1999இல் இருந்து ஆண்டு வருகிறார். 2009இல் அவர் தான் தொடர்ந்து ஆட்சி செய்யும் வகையில் அரசமைப்பை மாற்றியுள்ளார். நோயாளியான அப்துல் அசிஸ் பௌடெபிலிக்காவிற்குப் பின்னர் அவரது சகோதரர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்ஜீரியாவிலும் விலைவாசி அதிகரிப்பு வேலையில்லத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அல்ஜீரியாவிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிவிட்டன. ஐரோப்பியாவின் எரிபொருள் தேவையில் 20% அல்ஜீரியாவில் இருந்தே பெறப்படுகிறது. ஜனவரி 24-ம் திகதி அல்ஜீரியாவின் எதிர்கட்சியான RCD partyயின் தலமைப்பீடத்தை அரச படையினர் முற்றுகையிட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. ஜனவரி 29-ம் திகதி பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அல்ஜீரிய அரசுக்கு எதிராக அமைதியான போராட்டம் நடத்தினர். அல்ஜீரிய அரசு துனியாவில் கவிழ்க்கப்பட்ட அரசு போலவே மக்கள் மத்தியில் செல்வாக்கற்றதாகவும் மக்களாட்சிப் பண்புகளுக்கு விரோதமானதாக இருந்தாலும் அது அவிழ்க்கப்பட்ட துனிசிய அரசு போல் மக்களுக்கு எதிராக மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடவில்லை. அல்ஜீரிய அரசு விலைகளைக் குறைத்த போதும் மக்களின் கொதிப்பு அடங்கியதாகத் தெரியவில்லை. கடந்த வாரம் எட்டுப்பேர் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக தமக்குத் தாமே தீ முட்டினர். அடுத்த வாரம் என்ன நடக்கும்?


அடுத்த மக்கள் எழுச்சி - லிபியா
1969இல் படைத் துறை ஆயுதப் புரட்சி மூலம் பதவிக்கு வந்த லிபியாவின் அதிபர் தளபதி மும்மர் கடாபி மேற்குல்கால் மிகவும் வெறுக்கப் படும் ஒரு அரச தலைவர். தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு சென்ற சொற்களில் ஒன்றான "பறையன்" என்ற சொல் கடாபிக்கு எதிராக அடிக்கடி பாவிக்கப்படும். துனிசியப் புரட்சியைத் தொடர்ந்து கடாபி சற்றுக் கலக்கமடைந்திருப்பதாகத் தெரிகிறது. அவர் துனிசியப் புரட்சி திவிரமாக நடக்கும் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். விக்கிலீக்கில் பகிரங்கப்படுத்த அரசதந்திரிகளின் பொய்கள் துனிசிய மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தன என்று கூறி துனிசியாவின் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட பென் அலிக்கு வக்காலத்து வாங்கினார். லிபியாவில் பாரிய மக்கள் போராட்டம் எதுவும் நடப்பதாகத் தகவல் இல்லை. சில போராட்டங்கள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. லிபியாவில் அரசுக்கு எதிரான மக்கள் ஊர்வலங்கள் நடப்பதில்லை. ஆனால் இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இரு மகன்களால் லிபியாவில் பிரச்சனை வரலாம் என்று கூறப்படுகிறது. மூத்த மகன் சயிf சில சீர் மக்களுக்கு சாதகமான திருத்தங்களை மேற் கொள்ள விரும்புகிறார். ஆனால் இளைய மகன் தொடர்ந்து ஒரு சர்வாதிகார அரசு இருப்பதை விரும்புகிறார். மேற்குலகின் நீண்டநாள் ஆவல் கடாபியை பதவியில் இருந்து விரட்டுவது. 1986கடாபியைக் கொல்ல அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானங்கள் முலம் குண்டு வீசினார். சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்குலகுக்கு சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கடாபி சற்று அடக்கி வாசித்து வருகிறார். இந்த மக்கள் எழுச்சிப் பரவலை மேற்கு நாடுகள் காடாபியை வீழ்த்தப் பயன்படுத்துமா?

1 comment:

Anonymous said...

எகிப்திய தரைப்படை மக்கள் மீது பெரும் தாக்குதல்களையும் நடத்தவில்லை. படைத்தளபதியின் கட்டளைகள் அங்கு மீறப்படுகின்றனவா என்ற சந்தேகம் நிலவுகிறது. கிளர்ச்சிக்காரர்கள் தரைப்படைத் தாங்கிகள் மீது ஏறி நின்று உரக்கக் குரல் எழுப்புகின்றனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...