Saturday, 10 July 2010

விகடனின் விவரம் கெட்ட தனமா? விஷமத்தனமா?


அண்மையில் வெளிவந்த ஜூனியர் விகடனில் சிங்கள ரவுடியிஸம் அதிர்ந்த ஐ.நா சபை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. விகடன் குழுமப் பத்திரிகைகள் தங்கள் விற்பனையைப் பெருக்க இலங்கைத் தமிழர்களைப் பற்றி வாரம் ஒரு கட்டுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் இலங்கைப் பிரச்சனை பற்றி தொடர்ந்து எழுதி வருகிறது. 2009 மே மாதத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாக இருப்பதாகப் புளுகி எழுதியே தனது விற்பனையப் பெருக்கியது விகடன் குழுமம். அதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி இந்தியாவில் உள்ள தமிழர்கள் பயப்படத் தேவையில்லை என்ற போலியான நிலையை உருவாக்கும் விஷமத் தனமும் கலந்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூற ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்தது. இதற்கு இலங்கையில் பலத்த எதிர்ப்புக் கிளம்பி அரச மந்திரி விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணிமனையை தனது அடியாட்கள் சகிதம் ஆக்கிரமித்து அங்குள்ளவர்களைப் இந்த நிபுணர் குழுவைக் கலைக்கும் வரை பணயக் கைதிகளாக வைத்திருக்கப் போவதாக காரியத்தில் இறங்கினார்.

ஜூனியர் விகடனின் சிங்கள ரவுடியிஸம் அதிர்ந்த ஐ.நா சபை என்ற கட்டுரையில் குறிப்பிடப் பட்டவை:
 • இலங்கைக்கு எதிராக சர்வ தேச அளவில் நிலையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள அணிசேரா நாடுகள் ராஜபக்சவிற்கு ஆதரவாக நிற்கும் விநோதமான நிலை இப்போது.
 • ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த கதையாக, கடைசியில் இலங்கையின் கண்மூடித்தனமான வன்முறை வெறி, தங்களையே தாக்கியது பற்றிய ரிப்போர்ட்டை முழுமையாக வாங்கி ஸ்டடி செய்தபோது கலங்கியே போனாராம் பான் கீ மூன்!
மொத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது போல் விகடனின் கட்டுரை வரையப் பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைமை வேறு:
 • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பலமுறை அடித்துச் சொல்லிவிட்டார் தான் அமைத்தது ஆலோசனைச் சபையே விசாரணைச் சபை அல்ல என்று. இது விகடன் அறியாததா?
 • தமிழர் தரப்பு இந்த ஆலோசனைச் சபை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கலாம் என்று நம்புகிறார்கள். முன்பு ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை போரின் போது செய்த மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க வந்த தீர்மானத்தை இந்தியா இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி தான் ஒரு தமிழின விரோதி என்றும் தமிழினக் கொலை புரியும் சிங்களவர்கள் பின்னால் என்றும் நிற்பேன் என்றும் காட்டிக் கொண்டது. இது விகடன் அறியாததா?
 • மஹிந்த ராஜபக்சவிற்கும் பான் கீ மூனிற்கும் பான் கீ மூன் தென் கொரிய வெளிநாட்டமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே நெருங்கிய நட்பு உண்டு.
 • பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போது இலங்கை தனது வேட்பாளரை போட்டியில் இருந்து விலக்கி பான் கீ மூன் வெற்றிக்கு உதவி செய்தது. அப்போது பான் கீ மூனிற்கும் இலங்கைக்கும் இடையில் திரைமறைவில் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம். சென்ற ஆண்டு நடந்த போரின் போது ஐநா பொதுச் செயலர் நடந்து கொண்ட விதங்கள் அவர் இலங்கைக்கு சார்பாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது விகடன் அறியாததா?
 • இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தான் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை முற்றுகை இடப் போகிறேன் என்று சொன்னபோது ஐநா தரப்பில் அது ஒரு காந்திய ஒத்துழையாமை நடவடிக்கை அதற்கு இலங்கையப் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தது. இது விகடன் அறியாததா?
 • இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச செய்ததைப் போன்று வேறு நாடுகளில் நடந்த போது அதை ஐநா தரப்பு உடன் கண்டித்தது. ஆனால் இலங்கையில் நடந்ததை ஐநா கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டிக்க வில்லை. இரண்டும் இலங்கையின் கைக்கூலிகளா என்ற சந்தேகம் வலுவானது. இது விகடன் அறியாததா?
 • பான் கீ மூன் கலங்கிப் போனார் என்று விகடன் சொல்கிறது. ஆனால் ஐநாவில் இருந்து வரும் செய்திகள் எதுவும் அப்படித் தெரிவிக்கவில்லை.
 • பான் கீ மூனின் ஆலோசனைச் சபையினர் இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டர்கள் என்று இலங்கை அரசு அறிவித்தது. இது தொடர்பாக பான் கீ மூன் எந்தக் கருத்தும் இதுவரை கூறவில்லை. இலங்கை சென்று உண்மையை அறியாத ஆலோசனைச் சபையால் எந்தப் பயனும் இல்லை என்பதை விகடன் அறியாதா?
 • சர்வதேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் செல்வி நவநீதம் பிள்ளை சர்வதேச மட்டத்தில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையைச் சாமளித்து காலத்தை இழுத்தடித்து இலங்கையைக் காப்பாற்றும் நோக்கத்துடந்தான் விசாரணைக் குழு அமைக்காமல் ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டதா என்ற சந்தேகத்தை விகடன் அறியாதா?
 • அடுத்த ஆண்டு பான் கீ மூனின் பதவிக்காலம் முடிந்தபின் அவர் மீண்டும் தெரிவு செய்யப் படுவதற்கு இந்த இலங்கை தொடர்பான விசாரணைப் பாசாங்கு பெரிதும் உதவும் என்பதை விகடன் அறியாதா?
இவ்வளவு இருந்தும் விகடன் ஐநா இலங்கைக்கு எதிராக திரும்பியது போல் எழுதுவது அதன் விவரம் கெட்ட தனமா அல்லது இலங்கைத் தமிழர்களுக்கு ஐநா இருக்கிறது அவர்களைப்பற்றி இந்தியாவில் உள்ள தமிழர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஒரு பொய்யான நிலைமையை உருவாக்கும் விஷமத்தனமா?

என் வீட்டில் ஆயுள் தண்டனை


என் அன்பு
வேடந்தாங்கல் தேடிவந்த பறவை
சுடுபட்டு வீழ்ந்து ஏன் கிடக்கிறது

அது இன்றி இது இல்லை

காதல் புனிதமானது என்றவள்
காதலனை மட்டும் ஏன் வெறுத்தாள்

உன் புன்னகை.
வருமான வரியில்லா வருமானம் எனக்கு
விற்பனை வரியில்ல வியாபாரம் உனக்கு

என் வீட்டில் ஆயுள்த் தண்டனை
வழக்கொன்று தொடுப்பேன்
கண்களால் என் மனம் கொன்றதாக
கனவில் அத்துமீறிப் பிரவேசித்ததாக
உள்ளம் கொள்ளை அடித்ததாக
என் வீட்டில் ஆயுள் சிறைத் தண்டனை
உனக்குக் கொடுக்க வேண்டி

Thursday, 8 July 2010

பட்டு மாமியின் பட்டுச் சேலைக்குள்


இதுவும் ஒரு திரைப்படம்
உன் முதற்பார்வையில்
எழுத்துக்கள் ஓடின
திரும்பிய முகம் புதிரானது
புன்னகை பாடல் காட்சியானது
வெறுத்தது சண்டைக் காட்சியானது
பிரிந்தது சோகக் காட்சியானது
மீண்டும் வந்தது காதல் காட்சியானது
உச்சக் கட்டம் நாடி நிற்கிறேன்

அன்றும் இன்றும்
தலையணை நனைத்தவள்
தலையிடியானாள்

உயிர்ப்பலி
சுத்த சைவ
பட்டு மாமியின்
பட்டுச் சேலைக்குள்
ஆயிரம் புளுக்கள்
உயிர்ப்பலியானதறியாளோ
முத்து மாலைக்கு
கொலையான
சிப்பிகள் எத்தனை

உன் பெயரும் பயனும்


திறந்த உள்ளம்
உள்ளம் என்பது
குடையைப் போலே
தேவையான சமயத்தில்
திறந்தால் தான் பயன்

நிம்மதியாக இருக்க ஆறு வழிகள்

மற்றவர்களை நேசி
மனதை தூய்மையாக்கு
எளிமையாய் இரு
மற்றவர்களிடம் இருந்து
அதிகம் எதிர்பார்க்காதே
மற்றவர்களுக்கு உதவு
இது போன்ற கவிதைகளை வாசி


எழுத முன் யோசி

இறக்க முன் வாழ் முயற்ச்சி செய்
சொல்ல முன் கேட்கப் பழகு
குற்றம் கூற முன் நிறுத்திக் கொள்
விலக முன் முயற்ச்சி செய்
இப்படிக் கவிதைகளை
எழுதி அறுக்க முன்
யோசனை செய்

பெயர்கள் தொடரும்
நீ என்னை ஏற்றுக் கொண்டால்
உன் பெயரின் பின் என் பெயர்
நீ என்னை ஏற்காவிடில்
உன் பெயர் என் மின்னஞ்சல்
கடவுச்சொல்லாகும்

Wednesday, 7 July 2010

எட்டுக்கால் சோதிடர்: இன்று ஜேர்மனி உதைபந்தாட்டத்தில் தோற்குமாம்.

நம்ம ஊர் கிளி சோதிடம் மாதிரி ஜேர்மனியில் ஒக்டபஸ் உதை பந்தாட்ட முடிவுகளைப்பற்றி சோதிடம் சொல்லி வருகிறது. இந்த ஒக்டபஸ் எனப்படும் எட்டுக்கால் கணவாய் ஜேர்மன் தேசியக் கொடியும் ஜேர்மனியுடன் உதைபந்து விளையாடும் நாட்டின் தேசியக் கொடியும் அடங்கிய பெட்டிகளை அதற்குப் பிடித்த சாப்பாட்டுடன் முன்வைத்தால் அது எந்த பெட்டியில் அமர்கிறதோ அந்தப் பெட்டியில் உள்ள தேசியக் கொடியின் நாடு வெற்றி பெறும்.

ஜேர்மனியின் Oberhausen நகரில் உள்ள இரண்டு வயதான பிரித்தானியாவில் பிறந்த இந்த ஒக்டபஸ் இதுவரை தென்னாபிரிக்காவில் நடந்த உதை பந்தாட்டப் போட்டிகளின் முடிவுகளை சரியாகச் சொல்லிவந்ததாம். இன்று நடக்க விருக்கும் ஜேர்மனை ஸ்பெயின் நாடுகளுக்கிடையான அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று இந்த எட்டுக்கால் சோதிடர் எதிர்வு கூறியுள்ளாராம்.

தென்னாபிரிக்காவில் குழுநிலைப் போட்டியில் சேர்பியாவிடம ஜேர்மனி அதிர்ச்சித் தோல்வியடைந்ததைக் கூட இந்த எட்டுக்கால் சோதிடர் சரியாகக் கூறினாராம்.

ஆனால் ஜேர்மனிய உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் 2008-ம் ஆண்டு யூரோ உதைபந்தாட்டக் கிண்ணத்தில் ஜேர்மனிக்கும் ஸ்பெயினுக்கும் நடந்த போட்டியை இந்த எட்டுக்கால் சோதிடர் பிழையாக எதிர்வு கூறியிருந்தாராம். ஸ்பெயின் எதிர் ஜேர்மனையப் போட்டியில் இவரது சோதிடம் பலிக்காது என்று ஆறுதலடைகின்றனர் ஜேர்மனிய உதைபந்தாட்ட இரசிகர்கள்

Tuesday, 6 July 2010

ஆண்களை நிம்மதியாக வாழ விடுங்கள்


சிரித்திரு
நல்ல உறவு என்பது
ஒளிப்பதிவுக் கருவி போல்
முன் வந்ததும் புன்னகை செய்

நன்றாகவே நடந்தது
நடந்தது நடந்ததுதான்
முடிந்தது முடிந்ததுதான்
முடிந்ததை திருப்ப முடியாது
திருத்தவும் முடியாது
மீண்டும் வீறு கொண்டெழலாம்
புதிதாக ஒன்றைத் தொடங்கலாம்
புதிய முடிவையும் ஏற்படுத்தலாம்

காக்கைக் குஞ்சு
தன்னம்பிக்கை வளர்க்க
காலை எழுந்திரு
கண்ணாடி முன் செல்
உன்னை நீயே பார்த்துக் கொள்
நான் அழகாக இருக்கிறேன் என்று
உனக்கு நீயே சொல்லிக் கொள்
உனக்கு நீயே பொய் சொல்லலாம்

ஆண்களை நிம்மதியாக வாழ விடுங்கள்

உலகம் சுழல்வதை நிறுத்த முன்
பறவைகள் பறப்பதை நிறுத்த முன்
அலைகள் பாய்வதை நிறுத்த முன்
இதயங்கள் துடிப்பதை நிறுத்த முன்
சூரியன் உதிப்பதை நிறுத்த முன்
பெண்களே ஆண்களை நிம்மதியாக
வாழ விடுங்கள்

கொழும்பு ஐநா பணிமனை முற்றுகை:பான் கீ மூனின் ஆசீர்வாதத்துடனா?இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இதை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோரின் தொடர்ச்சியான வற்புறுத்தலைச் சமாளிக்க முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய முடியாது. அது ஒரு எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆலோசனைக் குழு கொழும்பு அதிகார மையத்தை அதிர்ச்சியடையச் செய்தது.

விமல் வீரவன்சவின் வீராப்பு
ஐநா ஆலோசனைச் சபையைக் கலைக்காவிடில் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை ஆக்கிரமித்து அங்குள்ளோரை பணயக் கைதிகாளப் வைத்திருப்போம் என்று அரசாங்கதின் ஒரு அமைச்சரான விமல் வீரவன்ச பகிரங்க அறிக்கையை விட்டார்.

ஐநாவின் பொய்நா
விமல் வீரவன்சவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் பான் கீமுனின் உதவியாளர்களிடம் வினவியபோது:
 • அவர் வெளியிட்ட தகவல்களை பத்திரிகைகள் பிழையாக பிரசுரித்திருக்கலாம்.
 • அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
 • இலங்கை ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையை செய்யலாம் அதற்க்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்
போன்ற தவறான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து இலங்கையின் அரச பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்த முயன்றனர்.

Inner City Press ஊடகவியலாளர்கள் இதுவே சூடான் போன்ற வேறு நாடாக இருந்தால் ஐநா பலத்த கண்டனத்தை வெளியிடும் என்று தெரிவித்தனர்.

கொழும்பு ஐநா பணிபமனை முற்றுகை இடப்பட்டது
இன்று 06/07/2010 பிற்பகல் விமல் விரவன்ச தலைமையில் ஒரு கும்பல் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை முற்றுகையிட்டு அங்குள்ள ஊழியர்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளது.

பான் கீ மூன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஐநாவின் ஊழியர்களை பணயக் கைதிகளாக வைப்போம் என இலங்கையில் இருந்து வந்த மிரட்டல் தொடர்பாக பான் கீ மூன் மௌனமாகவே இருக்கிறார். இப்படியான ஒன்று நடக்காமல் இருக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக பான் கீ மூன் தென் கொரியாவின் வெளிநாட்டமைச்சராக இருந்த காலம் தொட்டே இருக்கிறார். இருந்தும் அவரால் இலங்கயுடன் தொடர்பு கொண்டு ஐநா பணிமனை முற்றுகை இடப்படாமல் இருக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவரால் கிள்ளிவிடப் பட்ட குழந்தை இப்போது அழுகிறதா? இந்த முற்றுகை அவரது ஆசீர்வாதத்துடன் நடக்கிறதா?

பிந்திய செய்திகள்
ஐநா பணிமனையை ஆக்கிரமித்திருக்கும் கும்பலை அகற்றச் சென்ற இலங்கை அரச காவல்துறையினர் மீது அங்குள்ள காடையர்கள் தாக்குதல் நடாத்தினர். இதைத் தொடர்ந்து மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் காவல் துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். காவல் துறையுடன் மோதல் நடந்து கொண்டிருக்கையில் விமல் வீரவன்ச தனது கைப்பேசியில் கோத்தபாய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் அக்கைப்பேசியை அங்கிருந்த கவல் துறை அதிகாரியிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதன் பின்னர் இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளார் ஐநா பணிமனைக்குள் பேச்சு வார்த்தைக்குச் சென்றுள்ளார்.
ஐநாவின் கொழும்புப் பணிய ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டுவிட்டனர். தொடர்ந்தும் விமல் வீரவன்ச தலைமையிலான கும்பல் ஐநா பணிமனையை ஆக்கிரமித்துள்ளது.
இதுவரை பான் கீ மூன் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

Monday, 5 July 2010

ஓரடியில் போட்டுத் தள்ள....வேங்கடாசலபதியே ரமணா
வேண்டும் வரம் தருபவனே
தாம்பத்தியம் வளர்ப்பவனே
அறிவைக் கொடு அவரைப் புரிந்து கொள்ள
அன்பைக் கொடு அவரைக் கவர்ந்து கொள்ள
பொறுமை கொடு அவர் கொடுமைகள் தாங்க
இன்றேல் என் கைகளுக்கு பலத்தைக் கொடு
ஓரடியில் அவரைப் போட்டுத்தள்ள....

நீயில்லாத ஒவ்வொரு நாளும்..


ஏன் இது
உன்னைக் கண்டது தலைவிதி
உன்னோடு பழகியது என் மதி
உன் மேல் காதல் கொண்டது?????

நீயில்லாத நாட்கள் வீணே
நீயில்லாத ஒவ்வொரு நாளும்
என்னை நான் இழந்த நாளே
என்றும் என்னுடன் நீ வேண்டும்
சிரிப்பே என்னுடன் இரு

மாறாத உறவு
இன்று என் பிறந்த தினம்
இன்னொரு வருடம்
இன்னொரு வயது
மேலும் ஒரு மெழுகு திரி
இளவேனில்கள் கடந்தன
முதுவேனில்கள் சென்றன
இலைகள் பல உதிர்ந்தன
மாதங்கள் பல குளிர்ந்தன
என்றும் மாறாமல்
என்னுடன் நீ வேண்டும்

நட்சத்திர நட்பு
பகலில் தெரிவதில்லை
இருளில் தெரியும்
இன்பத்தில் உணர்வதில்லை
துன்பத்தில் பக்கத் துணை
நட்பும் நட்சத்திரங்கள் போலவே

Sunday, 4 July 2010

உதட்டைத் திற உயிர்க் காற்று வரஉதட்டைத் திற உயிர்க் காற்று வர
மூடிய உதடுகள்
பிரச்சனைகளைத் தவிர்க்கும்
திறந்து புன்னகைக்கும் உதடுகள்
பிரச்சனைகளத் தீர்க்கும்
உன் உதட்டைத் திறந்து
என் உதட்டில் மூடு
என் உயிர் காற்று வர.

தேடல்
அன்பைத் தேடினேன்
நண்பர்களைக் கண்டேன்
அவளைத் தேடினேன்
துயரைக் கண்டேன்


காட்சி
அன்புக்கு தாயை கண்டேன்
ஆதரவுக்கு தந்தையைக் கண்டேன்
அலுப்புக்கு உன்னைக் கண்டேன்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...