Saturday, 13 March 2010

தமிழர்கள் மேற்குப் பக்கம் தலை வைக்கலாமா?


1980களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தனே தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க சார்பாக மாறத் தொடங்கியது. இலங்கையின் பூகோள நிலை அமெரிக்கக் கடறபடையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ்வலை(ultra low wave) தொலைத் தொடர்புக்கு மிக உகந்ததாக அமைந்துள்ளதால் சிலாபத்தில் அமெரிக்க வானொலி நிலையம் என்ற போர்வையில் அமெரிக்க கடற்படையின் தேவைகளை நிறைவேற்ற அமெரிக்காவிற்கு இலங்கை தயாரானது. அத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் என்ற போர்வையில் அமெரிக்கா திருகோணமலையில் தனது கடற்படைக்கு ஒரு எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தையும் அமைக்க முற்பட்டது. இதை அறிந்த இந்திரா காந்தி தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை இந்தியா உருவாககியது. விளைவு அமெரிக்க திட்டத்திற்கு ராஜீவ் - ஜே ஆர் ஒப்பந்தத்தின் மூலம் ஆப்பு வைக்கப் பட்டது. இந்த ஒப்பந்தத்தின் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. அதைப் பற்றி இந்தியா கவலைப்படவும் இல்லை.

இப்போது இந்தியாதான் தமிழர்களின் முதலாம் எதிரி என்ற உண்மையை மறைத்து தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்ற பொய்யை தமிழர்கள் மத்தியில் விதைக்க சில சக்திகள் முற்படுகின்றன.

1980களில் இந்தியா தமிழர்கள்மீது காட்டிய அக்கறை போல சில மேற்குலக நாடுகள் தமிழர்கள் மீது இப்போது அக்கறை காட்டுகின்றன. இலங்கை சினாவின் இன்னொரு மியன்மாராக(பர்மா) மாறுவதைப்பற்றியோ அம்பாந்தோட்டை முதல் கச்சதீவு வரை நீண்ட சீன இருப்பைப்பற்றியோ குடும்பநலனில் மட்டும் அக்கறை கொண்ட இந்திய ஆட்சியாளர்களும் அவர்களின் சாதி நலனில் அக்கறை கொண்ட ஆலோசகர்களும் கவலைப் படாமல் இருக்கலாம் ஆனால் மேற்குலக நாடுகள் அக்கறை கொண்டுள்ளன. அதற்கு அவர்கள் கையில் எடுத்த சரத் பொன்சேக்கா இன்னொரு மியன்மாரின் ஆங் சான் சூ கீ(Aung San Suu Kyi) ஆக் மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றார். இலங்கையின் சீனப் பிடிக்கு எதிராக மேற்குலகு தமிழர்களைப் பாவிக்கமுயல்வது தவிர்க்க முடியாததே. இதற்காகத்தான் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்களான தமது நாட்டில் வாழும் தமிழ் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் அவர்கள் இலங்கை அரசின்மீது மனித உரிமை மீறல் குற்றச் சாட்டு போர் குற்றச் சாட்டு போன்றவற்றை முன்வைப்பதுடன் இலங்கைக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. தமது நாடு வாழ் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய மேற்குலக நாடுகள் அவர்களை ஒரு குடைக்குக் கீழ் திரளும்படி வேண்டுகின்றனர். இந்தியாவைப் போல் கேவலமாக பல குழுக்களை உருவாக்கவில்லை. ஆனால் தமிழர்களை ஜனநாயக முறைப்படி செயற்படும்படி வற்புறுத்துகின்றனர். இந்த "ஜனநாயக முறை" தமக்கு வேண்டியவர்களை மேற்குலகு வாழ் தமிழர்களின் தலைமைக்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மேற்குலகு வாழ் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 1980களில் இலங்கை வாழ் தமிழர்கள் விட்ட பிழையை இப்போது மேற்குலகில் வாழும் தமிழர்கள் இன்றுவிடக்கூடாது. தமிழர்கள் இப்போது இருக்கும் நிலையில் பற்றிக் கொள்ள ஏதாவது ஒன்று வேண்டும். அதற்காக எதையும் பற்றலாம் என்று இல்லை. அவர்கள் பற்றிக் கொள்வதைக் கவனமாகப் பாவிக்கவும் வேண்டும். அவர்கள் பற்றிக் கொள்வது அவர்களுக்கு எதிரான ஆயுதமாக மாறாமல் முன்கூட்டியே சிந்தித்து செயற்படவேண்டும்.

Friday, 12 March 2010

புதிதாக ஓர் உறவு. புரியாத ஓர் உணர்வு


புதிதாக ஓர் உறவு
புரியாத ஓர் உணர்வு
தெரியாத ஓர் உருவம்
பிழையாக இப்பருவம்

இளவேனிற் தளிராக
முதுவேனிற் குளிராக
புதிதாக ஓர் உறவு
புரியாத ஓர் உணர்வு

தனியாக ஒரு ஏக்கம்
தெளியாத ஒரு மயக்கம்
புதிதாக ஓர் உறவு
புரியாத ஓர் உணர்வு

இதமாக ஒரு வேதனை
பதமாக ஒரு சிந்தனை
புதிதாக ஓர் உறவு
புரியாத ஓர் உணர்வு

பார்வைகள் பரிதவிக்கின்றன
வார்த்தைகள் கவி தேடுகின்றன
புதிதாக ஓர் உறவு
புரியாத ஓர் உணர்வு.

Thursday, 11 March 2010

தமிழ்நாட்டை நம்பலாமா?


தந்தை செல்வநாயகம் 1970களில் தமிழ்த்தேசியப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் போது எமக்கு 35மைல் தொலைவில் மூன்றரைக் கோடி தமிழர்கள் எமக்குத் தோள் கொடுக்க இருக்கின்றார்கள் என்றுரைத்தார். அந்த மூன்றரைக் கோடி இருமடங்காகி விட்டது ஆனாலும் தமிழ்த்தேசிய போராட்டம் மழுங்கடிக்கப் பட்டது ஏன்?

தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தனர். கொட்டும் மழையில் கை கோத்து நின்றனர். சிலர் தீக் குளித்தனர். இவையாவும் ஈழத் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்ட போது ஏற்பட்ட உணர்வலை மட்டுமே! இது அதிர்வலை அல்ல. அதிர்வு ஏற்பட்டிருந்தால் 10,000 ஆரியப் பிணந்தின்னி பேய்கள் சிங்களவரோடு தோளோடு தோளாக நின்று போரிட்டிருக்க முடியாது.

1983 ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் கொல்லப் பட்டபோது, இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களவர்கள் கொதித்து எழுந்தனர். அரச படைகளுடன் இணந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர். இது தான் அதிர்வலை!

ஈழத்தில் 125000 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் என்ன நடந்தது? இந்தக் கொலைக்கு உதவிசெய்தவர்களை தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இலங்கைக்கு துணைநின்ற சோனியா காந்தியின் கட்சி ஆட்சி பீடம் ஏற்றப் பட்டது. தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சோனியா காந்தி தனது அரசு இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக ஆவன செய்யும் என்றார்.
செய்தாரா?

இலங்கை அரசு ஆகஸ்ட் மாதம் முடிக்க எண்ணியிருந்த போரை மே மாதத்தில் இந்தியத் தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என்று இந்தியா இலங்கையை வேண்டிக் கொண்டது. அதற்காக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடிய நச்சு ஆயுதங்கள் பாவிக்கப் பட்டன. குழந்தைகள் உட்படப் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கருகி மாண்டனர்.

சிங்களப் பேரினவாதிகள் பகிரங்க அறிக்கை விடுகிறார்கள் கருணாநிது உட்பட அனைத்து இந்தியாவும் தமது கைக்குள் என்று.

இப்போது சோனியா காந்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரப் போகிறார். அந்த அன்னையை, கலைஞரின் சொர்க்கத் தங்கத்தை தமிழ்நாடே வரவேற்கப் போகிறதே! ஏன்? தமிழ்நாடு ஒரு திரைப் படம் என்றால் அதைத் தாயாரிப்பது நடிகர்கள்; இயக்குபவர்கள் பார்பனர்கள்; நிதி வழ்ங்குபவர்கள் சாமியார்கள்; விநியோகிப்பவர்கள் அரசியல் வாதிகள்.

தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகள் யார்? கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த். இவர்களில் எவர் தமிழர். தமிழ்நாடு வந்தேறு குடிகளால் ஆளப்படுகிறது. ஒரு குடியேற்ற (காலனித்துவ) ஆட்சியின் கீழ்தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருக்கிறது. அந்தத் தமிழ்நாட்டை ஈழமக்கள் நம்பலாமா?

Wednesday, 10 March 2010

பான் கீ மூன் - திருப்பமா? திருகுதாளமா?


சென்ற ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க
வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
 • போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
 • சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
 • இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
 • இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
 • இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இலங்கைக் குடியரசுத் தலைவரும் ஐக்கிய நாடுகளின் செயலரும்வெளிவிட்ட கூட்டறிக்கையில் எதுவும் இது வரை நிறை வேற்றப் படவில்லை. அவை நிறைவேற்றப் படாதவிடத்து பான் கீ மூன் என்ன செய்வார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அதற்கான பதிலாகவே பான் கீ மூன் அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் போர்குற்றம் தொடர்பாகவும் தமக்கு ஆலோசனை வழங்க ஒரு விற்பன்னர்கள் சபையை அமைத்துள்ளார். இது இலங்கையை ஆத்திரமடைய வைத்துள்ளது.

இந்திய பான் கீ மூன் கூட்டுச் சதியும் நிருபாமாவின் பாய்ச்சலும்
பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் சகோதரர் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப் பட்ட படைத்துறை ஆலோசகர். பான் கீ மூனின் மருமகனும் சித்தார்த் சட்டர்ஜி என்னும் ஒரு இந்தியர். இவரும் இலங்கை வந்து கொலை கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபட்ட அரசியல் அறிவிலி ராஜிவ் காந்தியின் அமைதிப் படையில் இடம் பெற்றவர். இவற்றைக் கூட்டிப் பார்க்கும் போது இந்தியாவின் சதி பற்றிய சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. அதுமட்டுமா பாக்கிஸ்த்தானுடன் ஒரு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபாமா ராவ் அவர்கள் ஐநா செயலர் விற்பன்னர்கள் சபையை அமைத்தவுடன் இலங்கைக்கு ஒரு திடீர்ப் பாய்ச்சலை மேற் கொண்டது இதற்குத்தானா? இந்த விற்பனனர்களின் விசாரணையில் இந்தியா புரிந்த போர்க் குற்றம் இந்தியச் சதி இந்தியத் தொடர்பு என்பன வெளிப்படும் என்ற பயமா? அதைத் தவிர்க்கவே நிருபாமா இலங்கைக்கு சென்றாரா? மேற்குலகை ஆத்திரப் படுத்திய பொன்சேக்காவிவகாரத்தில் இந்தியத் தலையீட்டால் தான் பொன்சேக்காவை இராணுவ நீதிமன்றில் விசாரிக்காமல் சாதாரண நீதி மன்றில் விசாரிக்கும் முடிவை இலங்கை எடுத்ததா?

பான் கீ மூனின் பதவி நீடிப்பு
பான் கீ மூனைப் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கத்திய சக்திவாய்ந்த ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவரை ஒரு மிக உயர் ஆபத்தான கொரிய நாட்டவர் (Most dangerous Korean)என்ற தலைப்பிட்டுக் கூட ஒரு Foreign Policy என்னும் அமெரிக்க ஊடகம் கட்டுரை வெளியிட்டது. இவையாவும் பான் கீமூன் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக பான் கீமூனின் மௌனம், இலங்கையில்ன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பான் கீ மூன் செயற்படாமை, இலங்கையில் போர் முனையில் அகப்பட்ட பொது மக்களைப் பாதுகாக்கத் தவறியவை போன்றவற்றை குற்றச் சாட்டாக முன்வைக்கின்றன. இந்நிலையில் பான்கீ மூன் அவர்களது பதவிக்காலம் இரண்டாவது முறையாகத் தொடருமா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது முறையும் தனது பதவிக் காலத்தை நீடிக்கவே பான் கீமூன் விற்பன்னர்கள் சபையை அமைத்தாரா?

பான் கீ மூனைப் பதவியில் அமர்த்திய இலங்கை
பான் கீ மூன் அவர்கள் ஐநா செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போது இலங்கையும் ஒருவரைப் போட்டிக்கு நிறுத்தியிருந்தது. பின்னர் பான் கீ மூனின் வெற்றியை உறுதி செய்யதனது வேட்பாளரை போட்டியில் இருந்து இலங்கை விலக்கியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. பான் கீ மூன் விற்பன்னர்கள் சபையை அமைத்ததும் இலங்கை சீற்றம் கொண்டது இதற்குத்தானா? தம்மை எதுவும் செய்ய முடியாது என்று இலங்கை மார் தட்டுவது ஏன்? பான் கீ மூன் விற்பன்னர்கள் சபையை அமைத்ததால் ஒரு கால இழுத்தடிப்பைச் செய்யலாம். அது இலங்கைக்கும் வசதியாக அமையும். அது மட்டுமல்ல இது பற்றி அடிக்கடி கதைக்கும் நவநீதம் பிள்ளை அவர்களின் வாயையும் அடக்கலாம்.

Tuesday, 9 March 2010

இலங்கையில் நிருபாமா ராவோட ராவுகள்


காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்துக் கொண்ட ஒரு குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையோ அல்லது பார்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய மத்திய அரச அலுவலகங்களின் தென்மண்டலம்(South Block) இருக்கும் வரையோ தமிழர்கள் இந்தியாவை நம்பவும் முடியாது, எந்த நன்மையும் இந்தியாவால் தமிழர்களுக்குக் கிடைக்காது.

இப்படி இருக்கும் போது நிருபாமா ராவ் அவர்கள் இலங்கைக்கு வந்து சில இரவுகளைக் கழித்துச் சென்றுள்ளார். இலங்கையில் சுனாமி தாக்கியபோது இலங்கையில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றியவர் நிருபாமா ராவ். பலநாடுகள் இலங்கைக்கு உதவி செய்தன. சில நாடுகள் தமது உதவியில் குறிப்பிட்ட தொகை தமிழர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தமது உதவியை வழங்கின. அப்படி ஒரு நிபந்தனையை இந்தியா இலங்கைக்கு விதிக்குமா என்று கேட்டபோது இலங்கைக்கு நாம் கொடுக்கும் உதவியை அவர்கள் தங்கள் விருப்பப்படி பாவிக்கலாம் என வெடுக்கெனவும் திமிராகவும் பதிலளித்தவர் இந்த நிருபாமா ராவ். அவர் அப்போது சுனாமியால் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு என்று எந்த சிறப்பு உதவிகளையும் செய்யவில்லை. இப்படிப் பட்ட நிருபாமா ராவ் தான இப்போது இலங்கை வந்துள்ளார்.

துள்ளிக் குதித்த கைக்கூலிகள்
அவர் வந்ததுவிட்டார்; தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போகிறார்; இலங்கை அரசை தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்கும்படி வற்புறுத்தப் போகிறார்; என்று இந்தியக் கைக்கூலி ஊடகங்கள் ஆருடம் கூறி மகிழ்ந்தன.

குமுறிய சிங்களப் பேரின வாதம்.
வடக்குக் கிழக்கை நிருபாமா ராவ் இணைக்கப் போகிறார்; அது பிரிவினைக்கு வழிவகுக்கும்; நாடு பிரிபட நாங்கள் விடமாட்டோம் என்று ஜேவிபி கூக்குரலிட்டது.

இந்திய "ஜம்பம்" பலிக்காது.
இலங்கையில் போர் முடிந்த பின் சர்வ தேச அரங்கில் இலங்கையின் செல்வாக்கு உயர்ந்துவிட்டது; அதனால் நிருபாமா வந்து இன்கு ஒன்றும் சாதிக்கமுடியாது; இந்தியாவால் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது; என்றது ஒரு சிங்கள ஊடகம். முள்ளிவாய்க்காலில் ஆற்றை கடந்தாகிவிட்டது இனி நீயாரோ நான் யாரோ!

பிரித்தானியப் பாராளமன்றத்துக்குள் பிரித்தானியப் பிரதமர் வருகையுடன் தமிழ் மக்கள் உலகத் தமிழர் பேரவை அங்குரார்பணம் செய்து வைத்தமை இலங்கையை ஆத்திரமடைய வைத்தது; இந்தியாவைச் சிந்திக்க வைத்தது; இந்தியாவின் அச்சிந்தனையே எதிரொலியாகவே நிருபாம ராவ் இலங்கை வருகிறார்; என்றது சிங்கள நாளேடான லங்காதிப.

குறுகுறுக்கும் குற்றமுள்ள நெஞ்சம்.
நிருபாமா ராவின் இலங்கைப் பயணம் நீண்டகாலம் திட்டமிடப்பட்டது அல்ல. அவர் வரும்போது அவருடன் அரசியல் யாப்பில் வல்லுனர்களோ அல்லது வேறு உயர் ஆலோசகர்களோவரவில்லை. கச்சதீவுவரை நீண்ட சீனப் பிரசன்னம், சர்வதேச தமிழர் பேரவையின் அன்குரார்பணம், ஐக்கிய நாடுகள் சபையில் செயலர் இலங்கை தொடர்பாக ஆலோசகர்களை நியமித்தமை அவரது இலங்கைப் பயணத்தைத் தூண்டியிருக்கலாம். போர்குற்ற விசாரணை வந்தால் அதில் இந்தியப் பங்களிப்பும் வெளிவரும் என்றபயம் இந்தியாவிற்கு இருப்பது வெளிப்படை. சனல்-4 தொலைக்காட்சி தமிழ் இளைஞர்களைக் கொல்லும் காணொளியை வெளியிட்டவுடன். இந்திய வெளிவிவகார அமைச்சர் உடன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டது சம்பந்தமானதா அல்லது இந்தியப் படையினர் போரில் நேரடியாகப் பங்கு கொண்டு செய்த கொடுமைகளின் காணொளிகள் ஏதாவது உள்ளதா என்பதை அறியவா என்று அவர் சொல்லவில்லை. அந்த விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு தன்னை விட்டால் வேறுகதியில்லை என்ற நிலையை உறுதி செய்து தனது சிறு விரலுக்குக் கீழ் தமிழர்களை வைத்திருக்க விரும்பும் இந்தியாவிற்கு தமிழர்களுக்கு ஆதரவாக வேறு நாடு ஒன்று வருவதை சகிக்கமுடியாது.


தமிழ்த் தேசியக் கூத்தமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்(சிதைந்து போன) இந்திய நிருபமா ராவை சந்தித்து பேச்சு நடாத்தினர். இப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். (செல்வம் அடைக்கலநாதனுக்கு என்ன நடந்ததோ?)

நிருபாமா தம்மைச் சந்தித்ததாகக் கூறிய (சிதைந்து போன) தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியும் இன்னமும் முகாமில் உள்ளவர்கள் பற்றியும் முகாமில் இருந்து வெளியேறி இன்னமும் அவல நிலையில் வாழும் மக்கள் பற்றியும் அவர் தம்முடன் கதைத்தாகக் கூறினார். ஆனால் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் உதவிகள் தமக்கு திருப்தி அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு தினங்களுகு முன் தெரிவித்துள்ளார்.

காரணமின்றிச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் தமிழர்களைப் பற்றி இரு தரப்பில் எவரும் கவலைப்படவில்லை. அப்படிச் சிறையில் இருப்பவர்கள் தமிழ்த் தேசியத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் இருதரப்பும் அவர்கள் மீது அக்கறை காட்டவில்லைப் போலும்.

"பொழைப்பு நாறிவுடும்"
இந்தியா தனது நலனை ஒட்டியே இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை காட்டும் என்றும் சுரேஸ் கூறினார். இந்தியா தனது பிராந்திய நலனை ஒரு குடும்பத்தின் நலனுக்காகவும் அதன் ஆலோசகர்களின் சாதிய நலன்களுக்காகவும் என்றோ அம்பாந்தோட்டையில் கோட்டை விட்டு விட்டது என்ற உண்மையை வெளியே சொன்னால் சுரேஸின் "பொழைப்பு நாறிவிடும்". இந்தியா தமிழர்களைச் சிங்களவர்கள் அடிமைகளாக வைத்திருப்பதையே விரும்புகிறது என்பதையும் அது அதன் பேரினவாதக் கொள்கைக்கு உகந்தது என்பதையும் சுரேஸும் நன்கறிவார். கூட்டமைப்பை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்

செல்லப் பிள்ளையான், செல்லாக் காசான கருணா.
நிருபாமா கருணாவைச் சந்திக்கவில்லை. பிள்ளையானைச் சந்தித்த நிருபாமா அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்வையிட்டு அவரது கட்சிக் கொள்கைகளை எப்படி முன்னேற்றுவதற்கு இந்தியா உதவி செய்யும் என்று கூறினாராம். பிள்ளையானை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.

விடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசு கடந்த மே மாதம் முறியடித்துள்ள போதும் அவர்கள் இந்தியாவுக்கு உறுதியளித்தபடி அரசியல் தீர்வை இதுவரை முன் வைக்கவில்லை. மஹிந்தா வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பான தகவலை இந்திய மத்திய அரசு நிருபாமா மூலம் தெரிவிக்கவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மஹிந்தாவைச் சந்தித்த நிருபாமா என்ன கதைத்தார் என்பது தொடர்பாகச் செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் மஹிந்தவை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமும் தன்னை நிருபாமா ராவ் சந்தித்தார். அவரையும் டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.

அவளோட ராவுகளில் தொண்டமானுக்கு இடம் இல்லை

நிருபாம ராவ் தனது இலங்கைப் பயணத்தின் போது மலையகத் தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை. மலையத் தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லை என்றதால் சந்திக்கவில்லையோ! அல்லது அவர்கள் ஒரு அமைப்பை பிரித்தானியப் பாராளமன்ற வளாகத்துள் அங்குரார்பணம் செய்யாததோ கரணமாக இருக்கலாம்.

மீண்டும் ஒரு திம்பு
திம்புப் பேச்சு வார்த்தையில் சிங்களவர் தரப்பில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் சகோதரரும் தமிழர் தரப்பில் கணக்கற்றவர்களும் பங்குபற்றினர். அப்போது தமிழர்களில் பலதரப்பாகப் பிரித்து வைத்திருந்து சகலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது இந்தியா. பின்னர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தது. இப்போது அதே பாணியை இந்தியா கையாள்கிறது. கருணா, பிள்ளையான், சங்கரி, டக்ளஸ், சித்தார்த்தன், வரதராஜப் பெருமாள், கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸ் இப்படிப் பலர் ஒரு பக்கமும் மறுதரப்பில் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் (ஓட்டைவாயன்)கோத்தபாய மறுபக்கமும் பேச்சு வார்த்தை நடத்துவார்களா? தமிழர்கள் கதை மீண்டும் முதலாம் அத்தியாயமா? ஆனால் மீண்டும் மேலுள்ளமுதலாம் பத்தியை பார்ப்போம்:
காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்துக் கொண்ட நேரு குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையோ அல்லது பார்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய மத்திய அரச அலுவலகங்களின் தென்மண்டலம் (South Block)இருக்கும் வரையோ தமிழர்கள் இந்தியாவை நம்பவும்முடியாது, எந்த நன்மையும் தமிழர்களுக்குக் கிடைக்காது.

Monday, 8 March 2010

காங்கிரஸ்-திமுக பிளவும் இலங்கைப் பிரச்சனையும்


இந்தியப் பேரரசின் பட்டத்துக்குரிய இளவரசர் ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பெரிதாக விருப்பம் இல்லை. அவருக்கு தமிழ்நாட்டில் தனது பரம்பரைச் சொத்தான காங்கிரஸ் கட்சியை தனிப் பெரும் கட்சியாக வளர்த்தெடுக்கவேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் வரை அது சாத்தியம் அற்றது என்பதை அவர் உணர்ந்து கொண்டுள்ளார். இந்திய மைய அரசு திமுகவின் ஆதரவின்றி ஆளும் பலம் பெற்றிருக்கும் இப்போதைய நிலையை அவர் பயன்படுத்தக் கூடும். அவருக்குச் சாதகமான நிகழ்வுகள் நடப்பதற்கு வேண்டியவை:
 • திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி அவர்கள் இறக்க வேண்டும்.
 • திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி அவர்களது வாரிசுகளான ஸ்டாலினும் அழகிரியும் அடிபட்டு இருகூறாகப் பிரிய வேண்டும்.
 • இந்த பிரிவுகளில் சேராமல் மாறன் குடும்பத்தை காங்கிரசுடன் இணையவேண்டும்.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி அவர்கள் இறக்காவிடில் இது நடக்காது. அப்படியாயின் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக அரசைக் கலைத்து வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் திட்டமும் உண்டு. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருக்கும் போதே சட்ட சபையைக் கலைத்து தேர்தல் நடாத்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் திட்டம் திமுகவிடம் உண்டு.

காங்கிரஸ் தனது செல்வாக்கை தமிழ்நாட்டில் உயர்த்த தடையாக இருப்பது இலங்கைத் தமிழர் பிரச்சனை. காங்கிரஸ் திமுகவைத் தனது கூட்டணியில் இருந்து கழற்றி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக தமிழின உணர்வாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து இலங்கைப் பிரச்சனையை மீண்டும் கையில் தூக்கி நாடகமாடும். அதற்கு எதிராக காங்கிரசுக்கு உள்ள ஒரே வழி இலங்கைப் பிரச்சனைக்கு மீண்டும் ஒரு அரை வேக்காட்டுத் தீர்வுத் திட்டத்தை இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தைத் "தாஜா" செய்து அதை தமிழ் மக்கள் மீது திணித்து அது சிறந்த திட்டம் என தனது சில இலங்கைத் தமிழ் கைக்கூலிகள் மூலம் பறைசாற்றச் செய்து அதைப் பெரு வெற்றியாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது. இப்படித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய சிரமமான காரியமில்லை. ஏற்கனவே இப்படிப் பல நாடகங்கள் நடந்தேறியுள்ளது. நாலு சினிமா நடிக நடிகைகளைக் காங்கிரசில் இணைத்துவிட்டால் அது சுலபமாக நடந்தேறிவிடும்.

இந்தியக் காங்கிரஸ் ஆட்சி இதற்கு ஏற்ப காய்களை இலங்கையில் இப்போது நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு அம்சமாகவே நிருபமா ராவின் இலங்கைப் பயணமும் அமைகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை விருப்பங்களுக்கும் இந்தியக் காய் நகர்வுகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியது. இலங்கையில் இந்தியக் காய் நகர்வுகள் வெற்றியளிகும் சாத்தியங்கள் குறைவு. இலங்கையில் பெருகிவரும் சீன ஆதிக்கம் இதற்குத் தடையாக இருக்கும். சீனாமட்டுமல்ல இலங்கையின் பக்கத் துணை. இரசியா ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கையின் பக்கத் துணைக்கு இருக்கின்றன. தமிழர் ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப் பட்டபின் இந்தியாவின் தயவில் இலங்கை இல்லை. ஆனால் இபோது இலங்கையில் தயவில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் வற்புறுத்தல்களுக்கு செவிசாய்க்க வேண்டிய நிலையில் இலங்கை இல்லை. 1983முதல் ஒரு நாலு வருடங்கள் தமிழ் ஆயுதக் குழுக்களால் இந்தியாவின் பிடியில் இலங்கை இருந்தது. இந்தியப் பிடியில் இருந்து இலங்கை கைநழுவிப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சீனாபக்கம் இலங்கை சாயாமல் இருக்க இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியா அகப்பட்டுவிட்டது. இளவரசர் ராகுல் காந்தியினது கனவு மட்டுமே.

Sunday, 7 March 2010

இலங்கைக்கு எதிராக மேற்குலகின் "நாலு படையணிகள்".


இலங்கையின் பங்குச் சந்தை ஆசியாவிலேயே சிறந்த வளர்ச்சியடைந்து வரும் வேளையில் மேற்குலக முதலீட்டாளர்கள் அதிலும் முக்கியமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது பங்குகளை விற்று இலங்கையில் இருந்து வெளியேறுகின்றனர். இலங்கையில் பங்குச் சந்தையின் வளர்ச்சி குறுங்கால அடிப்படையானது என்றும் மத்திய அல்லது நெடுங்கால அடிப்படையில் அதன் போக்கு உகந்ததாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போதைய பொருளாதர நெருக்கடியில் இருந்து முதலில் ஆசிய நாடுகளே வெளிவரும் என்றும் அதைத் தொடர்ந்தே மற்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இருந்தும் மேற்குலக முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவது அவர்கள் ஏதாவது புறக்காரணிகளை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுத்தார்களா என்ற எண்ணத் தோன்றுகிறது. அத்துடன் இது மேற்குலக அரசுகள் இலங்கைக்கு எதிரான தமது நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை மேற்குலகின் விரோதிகளான சீனா, ஈரான், மியன்மார் (பர்மா) ஆகியவற்றுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள்; போருக்கு பின்னரான அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு இலங்கை அரசு கொடுத்துள்ள அதிக முக்கியத்துவம்; தொடர்ந்து மேற்குலகின் பல கோரிக்கைகளை இலங்கை அரசு நியமித்தமை; தனது தேர்தல் வாக்கு வேட்டைக்காக இலங்கை ஆளும் கட்சியினைச் சேர்ந்தவர்கள் மேற்குலகிற்கு எதிராகத் தெரிவித்து வரும் "சண்டித்தன" கருத்துக்கள். ஆகியவை மேற்குலகை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டி வருகின்றன.

இலங்கை அரசிற்கு எதிரான மேற்குலக நகர்வுகள்.
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் பல நகர்வுகளை பகிரங்கமாகவும் திரைமறைவிலும் மேற்கொள்கின்றன:
 • ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் மீண்டும் மீண்டும் இலங்கைப் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணை தேவை என்று வலியுறுத்துவது;
 • மக்களுக்கான நிரந்தர விசாரணை மன்றம் (PPT) அயர்லாந்து டப்ளின் நகரத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மேற்கொண்டமை;
 • அவுஸ்திரேலிய, பிரிஸ்பேனில் உள்ள கத்தோலிக்க நீதி மற்றும் சமாதான ஆணைக்குழு அவுஸ்திரேலிய அரசை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்,கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியமை;
 • இலங்கை அரசால் நன்கு கவனிக்கப் பட்டவராகக் கருதப்படுபவரும் மஹிந்த ரஜபக்சவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுபவருமான ஐக்கிய நாடுகள் சபைச் செயலர் பான்கீமூன் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நிபுணர்கள் குழு நியமித்தமை;
ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கைக்கு எதிரான மேற்குலகின் நான்கு படையணிகள்
இலங்கைகு எதிரான தமது நடவடிக்கைகளிற்கு நான்கு படையணிகள் திரட்டுகின்றன:
 1. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகள்.
 2. இலங்கைக்கு எதிரான போர் குற்றச் சாட்டுக்கள்.
 3. இலங்கைக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் - ஜீஎஸ்பி+ சலுகை இரத்து, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி நிறுத்தம் இப்படிப்பல.
 4. தமிழர்களின் நாடுகடந்த அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துதலும் அங்கீகரித்தலும்.
இவற்றை இலங்கை அரசு தனது இந்திய சீன நண்பர்களுடன் இணைந்து எப்படி எதிர் கொள்ளப் போகிறது?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...