Thursday, 9 December 2010

கைது செய்யப்பட்ட விக்கிலீக் ஜுலியன் அசங்கேயிற்கு இனி என்ன நடக்கும்?


முதலில் ஜுலியன் அசங்கேயை அவர் சுவீடனில் புரிந்ததாகக் கருதப்படும் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்காக நாடுகடத்தும் வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் நடக்கும்.

அடுத்த விசாரணை டிசெம்பர் 14-ம் திகதி வெஸ்ட்மின்ஸ்ரர் நகர நீதிமன்றில் நடக்கும். அங்கு அவர் தனக்கு எதிராக சுவீடனில் விசாரிப்பது அரசியல் ரீதியில் பாராபட்சமானதாக இருக்கும் என்று வாதிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவீடன் அமெரிக்க வற்புறுத்தலின் கீழ் செயற்படுகிறது என்று ஜுலியன் அசங்கே வாதிடலாம். அதற்குரிய சாட்சியங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். அவரின் ஆதரவாளர்கள் வாஷிங்டனுக்கும் சுவீடனுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளின் பிரதிகளை ஏற்கனவே பெற்றிருப்பார்களோ?

ஜுலியன் அசங்கே பிரித்தானியாவில் இரு மேன் முறையீடுகளைச் செய்யலாம். அத்துடன் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றிற்கும் மேன் முறையீடு செய்யலாம். இந்த நடவடிக்கைகள் முடிய சில ஆண்டுகள் எடுக்கும். அவர் சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பது கடினம் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

ஆறு ஆண்டு சிறை?
ஜுலியன் அசங்கே மீதான குற்றம் சுவீடன் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் ஆறு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஜுலியன் அசங்கே மீது இன்னும் அமெரிக்காவில் முறைப்படியான குற்றச் சாட்டுகள் எந்த நீதிமன்றிலும் சமர்ப்பிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டவாளர் நாயகம் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் ஜுலியன் அசங்கே மீது எந்த குற்றத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்று ஆலோசிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


ஜுலியன் அசங்கே பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் சாத்தியம் மிகக் குறைவு. ஆனால் சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அவுஸ்திரேலியாமீது அமெரிக்க அழுத்தம்?
ஜுலியன் அசங்கேயில் கடவுச் சீட்டை இரத்துச் செய்யுமாறு அமெரிக்கா அவுஸ்திரேலியாவை கேட்டுக் கொண்டதாக சில வதந்திகள் உலாவின. ஆனால் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிவிட்ட அறிக்கையில் தகவல் கசிவிற்கு அமெரிக்காவைக் குற்றம் சாட்டியது.

சுவீடனில் இருந்து ஜுலியன் அசங்கே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியங்களும் குறைவு. சுவீடனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நாடுகடத்தும் ஏற்பாடுகள் இருக்கின்ற போதிலும் அரசியல் குற்றங்களுக்கு நாடுகடத்தப்படுவது மிக்க கடினம்.

ஜுலியன் அசங்கே மீது அமெரிக்கா புதிய வகைத்தாக்குதல்.
ஜுலியன் அசங்கே இற்கு உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் பிரபல்யத்தை குறைக்கும் வகையில் இப்போது சில செய்திகள் வெளிவருகின்றன. ஜுலியன் அசங்கே பெண்கள் பற்றி கீழ்த்தரமான சிந்தனை உடையவர் என்ற கருத்து இப்போது பரவவிடப்பட்டிருக்கின்றது.

விநோதமான நீதி
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஷிரீன் திவானி என்ற செல்வந்தர் அனி என்கிற சுவிற்சலாந்தில் வாழ் இந்திய வம்சாவளி அழகியைத் திருமணம் செய்து தேன்நிலவிற்கு தென் ஆபிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் பயணம் செய்கையில் அவரது மனைவி கடத்திச் செல்லப்பட்டதாக ஷிரீன் திவானி காவற்துறையிடம் முறையிட்டார். பின்னர் மனைவி அனி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். (மனுதர்ம சாஸ்த்திரப்படி இரண்டாம் வரதட்சணை வாங்க பிரித்தானியாவில் சமையலறியில் தீவிபத்து ஏற்படுத்துவது கடினம்.) பல விசாரணையின் பின் கணவர் ஷிரின் ஏற்பாடு செய்தவர்களே அனியைக் கொன்றார்கள் என்று தென் ஆபிரிக்க காவல் துறை கருதி அவரை நாடுகடத்தும் வேண்டுகோள் பிரித்தானியாவிடம் முன் வைக்கப்பட்டது. பிரித்தானிய நீதிமன்றம் ஷிரீனிற்கு பிணை வழங்கியுள்ளது. - பிந்திய செய்தி: புதன் கிழமை ஷெரீனிற்கு வழ்ங்கிய பிணையை எதிர்த்து தென் ஆபிரிக்க அரசு மேன் முறையீடு செய்தமையைத் தொடர்ந்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 comment:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...