Wednesday, 11 August 2010

பத்மநாதன் பேட்டியில் எழும் சந்தேகங்கள்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக எழுதிவரும் ஊடகவியலாளர் டி. பி. எஸ் ஜெயராஜ் என்பவருக்கு ஒரு பேட்டியை அண்மையில் வழங்கியுள்ளார். அவரது பேட்டியில் கூறப்பட்டவற்றில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

  • கே. பத்மநாதன்: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

சந்தேகம் -1
கைது செய்யப் பட்ட நீங்கள் ஏன் மலேசிய நாட்டிலோ அல்லது இலங்கையிலோ நீதி மன்றத்தின் முன் நிறுத்தப் படவில்லை. மலேசியாவில் கைது செய்யப் பட்ட நீங்கள் அங்கிருந்து நீதி மன்ற ஆணியின்றி எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டீர்கள்? உங்கள் குடும்பத்தினர் ஏன் ஆட்கொணர்வு மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை?

சந்தேகம் - 2: உங்களைக் கைது செய்தவர்களின் நோக்கம் என்ன என்பதை நீங்கள் இங்கு ஏன் தெளிவு படுத்தவில்லை? உங்கள் பேட்டியின் இப்பகுதியை வாசிக்கும் போது இலங்கையில் அவதிப்படும் தமிழர்களுக்கு நீங்கள் உதவுவதற்கு உங்களைப் பயன்படுத்தப் படுவதாகத் தெரிகிறது. இலங்கையில் கைது செய்யப் பட்டிருக்கும் தமிழ்ப் போராளிகளை இலங்கைஅரசு தனது செலவில் பராமரிக்க விரும்பவில்லை. அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் மூலமும் பராமரிக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தால் போர்குற்றம் தொடர்பான சாட்சியங்கள் வெளிவரும் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது. ஒரே வழி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் பணம் கறந்து அதன் மூலம் கைது செய்யப் பட்டிருக்கும் தமிழ்ப் போராளிகளை இலங்கைஅரசு பராமரிக்க விடும்புகிறது போல் தெரிகிறது. இதற்கு உங்களை அரசு பாவிக்கிறது என்று எமக்கு நினைக்கத் தோன்றுகிறது.

  • கே பத்மநாதன்: நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

சந்தேகம் - 3 : சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொன்றதாகக் கருதப் படும் சிங்கள ஆட்சியாளர்கள் ஏன் உங்களை தயையுடன் நடாத்துகிறார்கள்? யோகி, பாலகுமார், புதுவை இரத்தினதுரை ஆகியோருக்குக் காட்டப் படாத தயை ஏன் உங்களுக்கு காட்டப் படுகிறது.

  • கே. பத்மநாதன்: பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார்.

சந்தேகம் - 4: கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பல ஊடகங்களுக்கு அளித்த காணொளிப் பேட்டியைப் பார்த்தவர்கள் எவரும் அவரை கண்ணியமானவராக எண்ணியதில்லை. அவர் அப்படி எதுவும் செய்ததும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் சம்பந்தமாக அவர் கண்ணியமாக நடந்து கொண்டதே இல்லை. அப்படி இருக்க நீங்கள் ஏன் அவரை கண்ணியமானவர் என்று கூறுகிறார். விருகள் பெற்ற ஊடகவியலாளர் வித்தியாதரனை பயங்கரவாதி என்றும் அவருக்கு ஆதரவாக கதைப்பவர்கள் பயங்கரவாதி என்றும் கொக்கரித்தவர் உங்கள் கண்ணியவான். தமிழர் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகள் சட்டபூர்வமாக குண்டு வீசித்தாக்கப்படவேண்டியவை என்று கூறியவர் எப்படிக் கண்ணியவான் ஆனார்?

  • கே பாத்மநாதன்: "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்".....கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன். எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.
சந்தேகம் - 5: இலங்கையில் தெருவெங்கும் புத்தர் சிலைகளுண்டு. தமிழர் பகுதிகளிலும் ஏராளமாகப் புத்தர் சிலைகளுண்டு. இந்த சிலைகளைப் பார்த்தவர்கள்தான் குழந்தைகளையும் இந்துப் பூசகர்களையும் 1956இல் கொதிதாரில் போட்டுக் கொன்றார்கள். சென்ற ஆண்டு புத்தரை வணங்குபவர்கள் தடைசெய்யப் பட்ட ஆயுதங்களைப் பாவித்து ஒரு நாளில் மட்டும் 25000 பேரைக் கொன்றார்கள். இவர்களுக்கு கொடுக்காத கருணையை புத்த பகவான் எப்படி உங்களுக்கு கொடுத்தார்?
(தொடரும்)

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...