Tuesday, 6 July 2010

கொழும்பு ஐநா பணிமனை முற்றுகை:பான் கீ மூனின் ஆசீர்வாதத்துடனா?இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இதை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோரின் தொடர்ச்சியான வற்புறுத்தலைச் சமாளிக்க முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய முடியாது. அது ஒரு எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆலோசனைக் குழு கொழும்பு அதிகார மையத்தை அதிர்ச்சியடையச் செய்தது.

விமல் வீரவன்சவின் வீராப்பு
ஐநா ஆலோசனைச் சபையைக் கலைக்காவிடில் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை ஆக்கிரமித்து அங்குள்ளோரை பணயக் கைதிகாளப் வைத்திருப்போம் என்று அரசாங்கதின் ஒரு அமைச்சரான விமல் வீரவன்ச பகிரங்க அறிக்கையை விட்டார்.

ஐநாவின் பொய்நா
விமல் வீரவன்சவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் பான் கீமுனின் உதவியாளர்களிடம் வினவியபோது:
  • அவர் வெளியிட்ட தகவல்களை பத்திரிகைகள் பிழையாக பிரசுரித்திருக்கலாம்.
  • அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
  • இலங்கை ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையை செய்யலாம் அதற்க்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்
போன்ற தவறான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து இலங்கையின் அரச பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்த முயன்றனர்.

Inner City Press ஊடகவியலாளர்கள் இதுவே சூடான் போன்ற வேறு நாடாக இருந்தால் ஐநா பலத்த கண்டனத்தை வெளியிடும் என்று தெரிவித்தனர்.

கொழும்பு ஐநா பணிபமனை முற்றுகை இடப்பட்டது
இன்று 06/07/2010 பிற்பகல் விமல் விரவன்ச தலைமையில் ஒரு கும்பல் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை முற்றுகையிட்டு அங்குள்ள ஊழியர்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளது.

பான் கீ மூன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஐநாவின் ஊழியர்களை பணயக் கைதிகளாக வைப்போம் என இலங்கையில் இருந்து வந்த மிரட்டல் தொடர்பாக பான் கீ மூன் மௌனமாகவே இருக்கிறார். இப்படியான ஒன்று நடக்காமல் இருக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக பான் கீ மூன் தென் கொரியாவின் வெளிநாட்டமைச்சராக இருந்த காலம் தொட்டே இருக்கிறார். இருந்தும் அவரால் இலங்கயுடன் தொடர்பு கொண்டு ஐநா பணிமனை முற்றுகை இடப்படாமல் இருக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவரால் கிள்ளிவிடப் பட்ட குழந்தை இப்போது அழுகிறதா? இந்த முற்றுகை அவரது ஆசீர்வாதத்துடன் நடக்கிறதா?

பிந்திய செய்திகள்
ஐநா பணிமனையை ஆக்கிரமித்திருக்கும் கும்பலை அகற்றச் சென்ற இலங்கை அரச காவல்துறையினர் மீது அங்குள்ள காடையர்கள் தாக்குதல் நடாத்தினர். இதைத் தொடர்ந்து மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் காவல் துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். காவல் துறையுடன் மோதல் நடந்து கொண்டிருக்கையில் விமல் வீரவன்ச தனது கைப்பேசியில் கோத்தபாய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் அக்கைப்பேசியை அங்கிருந்த கவல் துறை அதிகாரியிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர். இதன் பின்னர் இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளார் ஐநா பணிமனைக்குள் பேச்சு வார்த்தைக்குச் சென்றுள்ளார்.
ஐநாவின் கொழும்புப் பணிய ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டுவிட்டனர். தொடர்ந்தும் விமல் வீரவன்ச தலைமையிலான கும்பல் ஐநா பணிமனையை ஆக்கிரமித்துள்ளது.
இதுவரை பான் கீ மூன் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...