Saturday, 13 February 2010

போர் குற்றம்: சொந்த இலாபம் தேடும் மேற்குலகம்.

வலியுறுத்தல்கள் வலி தீர்க்குமா?
இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது போர் நிறுத்தம் செய்யும்படி பகிரங்கமாக வலியுறுத்தல்கள் பல நாடுகளால் விடப்பட்டன. அவையாவும் திரை மறைவாக இலங்கைக்கு தமிழினக் கொலைக்கு உதவி செய்து கொண்டே இந்த வலியுறுத்தல்களை விட்டன. இலங்கை அரசு தனது இனக் கொலையைச் செய்து முடித்து மூன்று இலட்சம் பேர்களை சட்டவிரோதமாக மோசமான சூழலில் தடுத்து வைத்தது.

இப்போது மீண்டும் ஒரு வலியுறுத்தல் எழுந்துள்ளது. அது இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றம் சம்பந்தமாக. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் கூறியிருக்கிறார். இந்த வலியுறுத்தல்களுக்கு இலங்கை செவிசாய்க்காது என்பதை அவரே நன்கு அறிவார். இலங்கையில் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் தமக்கு ஏற்புடையவர்கள் அல்லர் என்பதனால் அவர்களுக்கு எதிராக ஒரு தொடர் மிரட்டல் விடுக்கவே இந்த வலியுறுத்தல் நாடகம். பல்லாயிரக் கணக்கான அப்பாவித்தமிழ் மக்கள் இறந்ததை எண்ணி வருந்தி அதற்காக விசாரணையை யாரும் வலியுறுத்தவில்லை. வலியுறுத்தலை இலங்கை ஏற்றுக் கொள்ளாவிடில் ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் என்ன செய்வார்? போர்குற்றம் நடந்தது என்று தமிழர்கள் சொல்கிறார் போர் குற்றம் நடந்ததாக போரை நடத்திய தளபதி சரத் பொன்சேக்காசொல்கிறார். போர் குற்றம் தொடர்பாக விசாரணை எதுவும் நடக்காது என்று இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சேயின் உடன் பிறப்பும் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றில் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை தொடங்காமல் வலியுறுத்துவது ஏன்?

ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் அவர்களின் நாடகம்.
இலங்கை அரசிற் கும், விடுதலைப் புலி களுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப் பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ். இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அவர் மேலும் தெரிவிப்பன:
  • சகல விதமான ஆயுதங்களும் பயன் படுத்தப்பட்டன.
  • துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலை களைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட் டன.
  • பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை.
  • இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்க முடையவையாகவும் அவை காணப்பட்டன.

இவ்வளவு காலமும் மௌனமாக இருந்த கோர்டன் வெய்ஸ் ஏன் இப்போது பேசுகிறார்? உண்மையில் இறுதிக் கட்டதில் இறந்தவர்கள் தொகை எழுபதினாயிரத்திற்கு மேல். அப்படியிருக்க கோர்டன் வெய்ஸ் ஏன் 40,000வரை என்று வரையறுக்கிறார்? ஒரு ஐநாவின் அதிகாரியாக இருந்து இவரால் இத்தனை இறப்புக்களையும் தடுக்க முடியாமல் போனது ஏன்? இதை தடுக்காமல் ஐநா இருந்தது ஏன்? ஐநாவும் சதிஸ் நம்பியாரும் போர் நடந்தவேளை செய்த சதிகளை கோர்டன் வெய்ஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை? இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியாளர் மேற்குலகிற்கு உகந்தவர் அல்லர் என்பதால்தால்தான் இவரை இப்போது பேசும்படியாராவது பணித்துள்ளார்களா? தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்திருந்தாலும் இவர் இப்படிப் பேசியிருப்பாரா?

இலங்கை அரசு சிம்பாவே போல் முழுக்க முழுக்க மேற்குலகின் எதிர் நாடாக மாறி சீனா, ஈரான் போன்ற நாடுகளின் கூட்டத்தில் நிரந்தரமாக இணையாமல் இருக்கவும் மேற்குலகு இலங்கைக்கு தனது கையில் இருந்து நழுவாமல் இருக்கவும் மேற்குலகம் சுய இலாபம் தேடிக் காய்களை நகர்த்துகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் இதை நன்கு அறிந்து கொண்டுள்ளனர். இதனால் இலங்கை அரசு தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஒரு சிறிய நாட்டிற்கு இந்தளவு செல்வாக்கா என்று வியந்தார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...