Saturday, 13 December 2008

மேலும் ஒரு பலி

பம்பலப்பிட்டியில் கணக்கியல் கற்கை நெறி வகுப்பில்
என் மேல் மெல்ல விழுந்தது அந்த முதற் பார்வை
என் உடலைத் துளைத்து உயிரை உலுக்கிய பார்வை
என்னுள் ஏதோ ஒன்றைக் கொழுத்தி விட்ட பார்வை
முன்பின் அறியாத புதுமுகம் அதுவானாலும்
முற்பிறப்பிலிருந்து தொடர்ந்து வந்த உறவு போலிருந்தது
தமிழா சிங்களமா அல்லது முஸ்லிமா
எனத் தடுமாற வைக்கும் தோற்றம்
மொழியை மதத்தை இனத்தை நினைக்கவில்லை
எல்லாம் துறந்த நிலை எல்லாம் மறந்த நிலை
பார்வைகளோடு பல வாரங்கள் பறந்து சென்றன
இன்றோடு உலகம் அழியப் போகுது போலோடும்
மனிதரிடைபொறுப்போடு நிதானித்து நின்றது நம் நல் உறவு
முண்டியடித்து பேருந்தில் பாயந்து ஏறும் போது
உனக்கு விட்டுக் கொடுத்ததில் நன்றியாய் வந்த முதற் புன்னகை
புன்னகைகளோடு நாட்கள் பல நகர்ந்து சென்றன
இனப்பகையில் வெடித்திடும் குண்டுகள் சிதறிடும் உடல்கள்
நாள்தோறும் வரும் பல மரணச்செய்திகள்
மீண்டும் வருமா ஒரு இனக் கலவரம் அதுதான் பலர் கேள்வி
இந்த முறை ஒருத்தரையும் உயிரோடு விடாங்களாம்
கப்பல் ஏறிப் போக ஏலாதாம் அகதி முகாமே தேவையில்லையாம்
யார் எது சொன்னாலும் என் காதில் ஏறாது
இந்த உறவைத் தொடர்வதெப்படி வளர்ப்பதெப்படி
அதுவே சிந்தனை அதுவே கனவு அதற்கே வாழ்வு
வகுப்பு அன்றிலை என்றோர் அறிவிப்பு
நான் வெளியே வருகிறேன் நீ உள்ளே வருகிறாய்
நான் உனக்கு கூறிய செய்தியே முதல் வார்த்தைப் பரிமாற்றம்
வார்த்தைப் பரிமாற்றத்தில் வளர்ந்தது நம் உறவு
தாழையடியில் கடற்கரையில் பதுங்கியதுமில்லை
மழைச்சாரலில் ஒரு குடையின் கீழ் நெருங்கியதுமில்லை
சினிமாக் கொட்டகையில் பின்வரிசையில் ஒதுங்கியதுமில்லை
எமக்கு முன்னே எம் நட்பு வட்டத்திற்கு தெரிந்து விட்டது
நாமிருவரும் காதலரென்று கதைகள் பல பரவின
கேட்கும் போதெல்லாம் மகிழ்வை மறைக்கும் கோபம்
நீ உணவு சமைத்து பொட்டலமாகத் தருவாய் நான் உண்ண
என்னை மறந்து நான் வாழ்ந்த அந்த நாட்களில் ஒருநாள்
ஒரு ஐயர் வந்து என் காலில் விழுந்தார்
கண்ணீருடன்நீ தன் மகளென்றார் மானம் காத்திடென்றார்
பிரதமருக்கு ஜாதக தோஷம் நிக்க பூசை செய்பவரென்றார்தான் குடும்பத்தோடு சாவேனென்றார் சாத்திரங்கள் பல சொன்னார்
கால்களில் விழுவதை;த திரைப்படங்களில் மட்டும் பார்த்ததுண்டு
அன்றோடு முடிந்தது நம் உறவு கலைந்தது காதல் கனவு
சாதிய சாத்திரங்களுக்கு இன்னும் ஒரு பலி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...