Wednesday, 11 December 2019

எழுபது ஆண்டுகளைத் தாண்டும் நேட்டோ


1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் ஆண்டு உச்சி மாநாடு 2019 டிசம்பர் 03-ம் 4-ம் திகதிகளில் இலண்டனில் நடைபெற்றது. எழுபதாவது ஆண்டை நிறைவு செய்யும் நேட்டோவின் 29 உறுப்பு நாடுகளின் மாநாடு பல சிக்கல்களுக்கு நடுவே நடை பெற்றது. சிக்கல்களின் நாயகர்களாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துருக்கி அதிபர் ரிசெப் எர்துவான், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இருக்கின்றனர்.

நேட்டோவைச் சூழவுள்ள பிரச்சனைகள்
1. சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயற்படும் குர்திஷ் போராளி அமைப்பை நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி பயங்கரவாத அமைப்பு எனச் சொல்லி அதன் மீது தாக்குதல் செய்கின்றது.
2. நேட்டோ பகையாளியாகக் கருதும் இரசியாவிடமிருந்து எச்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை உட்படப் பல படைக்கலன்களை துருக்கி வாங்குகின்றது.
3. 2018 ஒக்டோபரில் நேட்டோ அமைப்பைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா தனது படையினரை சிரியாவில் இருந்து விலக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தது.
4. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது பாதுகாப்பிற்கு தமது மொத்தத் தேசிய உற்பத்தியின் இரண்டு விழுக்காட்டை ஒதுக்காவிடில் அமெரிக்கா நேட்டோ கூட்டமைப்பில் இருந்து விலகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி மிரட்டுகின்றார். நேட்டோ அமெரிக்காவிற்கு நியாயமற்ற ஒரு நிதிச் சுமை என்றும் நேட்டோ காலாவதியான ஓர் அமைப்பு என்பது அவரது கருத்து.
5. போலந்தையும் போல்ரிக் நாடுகளையும் பாதுகாப்பதற்காக நேட்டோ உருவாக்கிய திட்டத்தை நிறைவேற்ற விடாமல் துருக்கி தடை போட்டுள்ளது. சிரியாவில் செயற்படும் குர்திஷ் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்பாக நேட்டோ நாடுகள் பிரகடனப் படுத்தினால் மட்டுமே துருக்கி அத்திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கும் என்கின்றது துருக்கி.
6. அமெரிக்காவின் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையினால் நேட்டோ கூட்டமைப்பு மூளை இறந்த நிலையில் இருக்கின்றது என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கருத்துத் தெரிவித்துள்ளார். துருக்கி சிரியாவில் செய்யும் படை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படாதவையாக இருக்கின்றன என்றும் மக்ரோன் குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபர் தனது வாக்காளர்களை இலக்கு வைத்து எடுக்கும் நடவடிக்கைகளை தன்னால் மாற்ற முடியாமல் இருக்கின்றது என்றும் பிரெஞ்சு அதிபர் தன் கரிசனையை வெளியிட்டார்.
7. நேட்டோ அதிக கவனம் செலுத்தும் நாடான உக்ரேனின் அதிபர் தான் உலக அரங்கில் யாரையும் நம்ப மாட்டேன் எனச் சொல்லியுள்ளார்.தன்னை மாற்றாமலிருக்கும் நேட்டோ
படைத்துறை நிபுணர்கள் நேட்டோ சூழல் மாற்றங்களை உள்வாங்க வேண்டும் என்கின்றனர். நேட்டோ ஆரம்பித்த 1949இல் இருந்த நிலைமையிலும் பார்க்க 2019இல் நிலைமை வேறுபட்டனவாக உள்ளது. அப்போது இரசிய விரிவாக்கத்தையிட்டு நேட்டோ கரிசனை கொண்டிருந்தது. இப்போது சீன எழுச்சி பற்றி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்றத்து ஏற்ப நேட்டோ தன்னை மாற்றுவது மிகவும் மந்த கதியில் உள்ளது என்பது படைத்துறை நிபுணர்களின் குற்றச்சாட்டாகும்.

வளர்ந்த நேட்டோ
பதினாங்கு நாடுகள் ஆரம்பித்த நேட்டோவில் தற்போதுஅல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோசியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்த்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, ஐஸ்லாந்து இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பேர்க், மொன்ரிநிகிரோ, நெதர்லாந்து, நோர்வே, போலாந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலொவேக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், துருக்கி, ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இரசியா தனது கவச நாடுகளாகக் கருதும் எஸ்த்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைக்கப்பட்டமை இரசியாவைக் கடுமையாக ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைய முற்பட்டபோது இரசியா அந்த நாடுகளுக்கு எதிராகப் படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் நேட்டோ 29 நாடுகளின் ஒரு பில்லியன் மக்களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய ஒற்றுமைக் கவசம் என்றார். மேலும் அவர் நேட்டோவின் 29 உறுப்பு நாடுகளும் 2016-ம் ஆண்டு தமது பாதுகப்புச் செலவை130பில்லியன் டொலர்களால் அதிகரித்தன. 2024இல் அந்த அதிகரிப்பு 400பில்லியன் டொலர்களாக உயரும் என்றார் ஜோன்சன்.

மாநாட்டின் முடிவில் வெளியிட்ட கூட்டறிக்கையில்:
1. பாதுகாப்பாக இருப்பதற்காக எதிர்காலத்தை ஒற்றுமையாகப் பார்க்க வேண்டும்.
2. பாதுகாப்புச் செலவுக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 2%ஐயாவது ஒதுக்க வேண்டும்.
3. இரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் யூரோ-அத்லாந்திக் நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.
4 நேட்டோ எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது
5. எமது அயலவர்களுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஒத்துழைப்போம்
6. எமது தொழில்நுட்ப மேம்பாட்டு நிலையைப் பாதுகாப்போம்.
7. நேட்டோவின் கலந்துரையாடும் தன்மையை பேணி வளர்ப்போம்.

சீனா நோக்கி திரும்பும் கவனம்
உலகப் பெருவல்லரசாக உருவாகிக்கொண்டிருக்கும் சீனா படைத்துறைத் தொழில்நுட்பத்தில் அதிக அளவு முதலீடு செய்வது மேற்கு நாடுகளின் படைத்துறைத் தொழில்நுட்பத்தை அது விஞ்சும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதையிட்டு நேட்டோ நாடுகள் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தின. நேட்டோ உச்சி மாநாட்டில் சீனாவுடன் ஒரு படைவலிமை அதிகரிப்புக் குறைப்பு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக நேட்டோ உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சீனாவிடமிருக்கும் ஒலியிலும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகள் தற்போது மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள் வரை பாய்ந்து அழிக்க வல்லன என்பதையிட்டு நேட்டோ நாடுகள் கரிசனை கொண்டுள்ளன. சீனாவிடமிருந்து 5G தொழில்நுட்பத்தை வாங்குவது தொடர்பாக உறுப்பு நாடுகளிடையே இருக்கும் முரண்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இரசியாவை மறப்பதற்கில்லை
ஏற்கனவே நேட்டோ முப்பது தரைப்படையணிகளையும், முப்பது வான் படையணிகளையும் முப்பது கடற்படைக் கப்பல்களையும் இரசியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக நிறுத்தும் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. போல்ரிக் நாடுகளினதும் போலாந்தினதும் பாதுகாப்புத் தொடர்பான திட்டத்தை தடை செய்யும் நிலைப்பாட்டில் இருந்து மாநாட்டின் போது துருக்கி விலகிக் கொண்டது. அத்திட்டம் மீள் வரைபு செய்யப்படும் என்றும் உச்சி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
வாய்கள் ஓய்வதில்லை
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் முதலாம் நாள் அமெரிக்க அதிபர் டிரம்பும் பிரெஞ்சு அதிபர் மக்ரோனும் துருக்கி தொடர்பாகவும் இஸ்லாமிய அமைப்பு தொடர்பாகவும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது முரண்பட்டுக் கொண்டனர். ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக வரிகள் தொடர்பாக முறுகல் நிலை உருவாகி இருந்தது. நேட்டோவில் ஆரயப்பட்டவைகள், எடுத்த முடிவுகள் போன்றவற்றிலும் பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றி கனடியத் தலைமை அமைச்சர் செய்த கிண்டலும் அதற்குப் பதிலடியாக டிரம்ப் கனடியத்தலைமை அமைச்சர் ஜஸ்றின் ருடோ இரட்டை முகம் கொண்டவர் எனக் கொடுத்த பதிலடியிலும்தான் மேற்கு நாட்டு ஊடகங்களின் அதிக கவனம் செலுத்தின. டிரம்ப் நேட்டோ மாநாட்டில்  டிரம்ப் கருத்துத் தெரிவிக்கும் போது அவரது பரிவாரங்களின் தாடைகள் நிலத்தில் அடிபட்டதைக் கவனித்தீர்களா என்றார் கனடிய தலைமை அமைச்சர் ஜஸ்றின் ருடோ . அந்த அளவிற்கு அவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் கருத்து வெளிவிடுவார் என்பதையே ஜஸ்றின் ருடோ அப்படிக் குறிப்பிட்டார். மாநாட்டு முடிவின் போது எல்லா உறுப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கு பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொள்வதை டிரம்ப் இரத்துச் செய்தார். மாநாடு நடக்கும் பிரித்தானியாவில் எட்டு நாட்களில் பாராளமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் பிரித்தானியா தொடர்பாக டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்துடன் பிரித்தானிய அரசியல்வாதிகள் இருந்தனர். ஆனால் கடந்த பிரித்தானியப் பயணத்தில் டிரம்ப் விட்ட பிழையை இந்த முறை விடவில்லை.

பல முரண்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பமான மாநாடு மேலும் முறுகல்களை வளர்க்காமல் விட்டதே பெரிய வெற்றி, துருக்கியின் விட்டுக் கொடுப்பு நேட்டோவிற்கு ஆறுதலாக அமைந்திருந்தது. 2014-ம் ஆண்டில் இருந்து நேட்டோவின் செயளாளர் நாயகமாக இருக்கும் நோர்வேயின் முன்னாள் தலைமை அமைச்சர் ஜென்ஸ் ஸ்ரொல்டென்பேர்க் நேட்டோ ஆரம்பித்த காலத்தில் இருந்தே உள்ளக முரண்பாடுகள் நிலவுகின்றன ஆனால் அதன் நோக்கத்தில் இருந்து தவறியதில்லை என்றார். நேட்டோவின் தள்ளாடல் அதன் முதுமையின் அடையாளமல்ல களைப்பின் அறிகுறி மட்டுமே.

Wednesday, 4 December 2019

நகைச்சுவைக் கதை: இலங்கையின் விருந்தோம்பலும் இந்தியாவும்.

டேவிட் இலங்கை சென்ற ஓர் அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில் தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும் அதன் கரையினதும்  அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று  மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. அதற்குரிய இடத்தையும் காணவில்லை. அங்கும் இங்கும் அதற்குரிய இடத்தைத் தேடியவருக்கு அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை. ஒரு சந்துக்குள் போய் ஒண்ணுக்கு அடிக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை அவர் பின்னால் காக்கிச் சட்டையுடன் ஒரு சிங்களக் காவற்துறைச் சேர்ந்த ஒருவன் வந்து இங்கு இதெல்லாம் செய்யக் கூடாது என்று சிங்களத்தில் கூறினான். அதற்கு டேவிட் சைகை மூலம் தனக்கு ரெம்ப அவசரம் என்று சொன்னார். அதற்கு அந்த சிங்களவன் தன் பின்னே வரும்படி ஆங்கிலத்தில் சொன்னான். டேவிட்டும் பின் தொடர்ந்தார். ஏன் நீ என்னுடன் ஆங்கிலத்தில் முதலில் கதைக்கவில்லை என்றார் டேவிட். அதற்கு சிங்களவன் இது எங்கள் நாடு. எங்கள் ஆட்சி. எங்கள் ஆட்சி மொழி சிங்களம் என்றான் ஆங்கிலத்தில். அப்படிச் சொன்னபடியே ஒரு வெள்ளை நிறக் கட்டிடத்திற்கு டேவிட்டைக் கொண்டு போய் விட்டு இங்கு நீ எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம் என்றான். டேவிட்டும் ஒரு நீண்ட அடி அடித்து ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுட்டு:
This is your hospitality - இது உங்கள் விருந்தோம்பல் என்றார். அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அந்தச் சிங்களவன்
No, it is not hospital.... it is Indian embassy இது மருத்துவ மனை இல்லை இது இந்தியத் தூதுவரகம் என்றான்.

Monday, 2 December 2019

டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியுமா?


2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்பிற்கு சவாலாக முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன் மக்களாட்சிக் கட்சி சார்பில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் மீது சேறு பூச டிரம் பல வகைகளில் முயற்ச்சி செய்தார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்கத் தேர்தலில் மற்ற நாடுகளைத் தலையிட தூண்டும் வகையில் அமைந்துள்ளன என அவரது எதிர்க் கட்சியினர் கொதிக்கின்றார்கள்.

சீனாவில் ஒன்றரை பில்லியன் சுருட்டப்பட்டதா?
டிரம்ப் சீனாவிடம் ஜோ பிடனினதும் அவரது மனைவியின் முதற்தார மகர் ஹண்டர் பிடனினதும் சீன முதலீடுகள் தொடர்பாக விசாரித்து தகவல்களை அம்பலப்படுத்தும் படி கோரினார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இது அமெரிக்கத் தேர்தலில் ஒரு வெளிநாடைத் தலையிடும் படி தூண்டுவதாக அமைகின்றது என்கின்றனர் டிரம்பின் எதிர்க் கட்சியினர். அதற்கு போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. தன் பெயர் குறிப்பிட விடும்பாத ஒருவர் டிரம்பிற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசியில் உரையாடலில் ஹண்டர் பிடனிற்கு சீனாவில் இருக்கும் முதலீடுகள் பற்றி பகிரங்கப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார் என ஓர் அமரிக்க ஊடகத்திற்கு தெரிவித்தார் என்பது போதிய ஆதாரமாக இல்லை. 2019 செப்டம்பரில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில் ஹண்டர் பிடன் சீனாவில் ஒன்றரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான் சொத்தை வைத்திருக்கின்றார் எனக் குற்றம் சாட்டினார். சீனாவில் இருந்து நிதியை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் ஹண்டர் மிக இலகுவாக அந்த ஒன்றரை பில்லியன் நிதியை எடுத்து வந்துவிட்டார் என்றார் டிரம்ப்.
உக்ரேனில் முறைகேடான முதலீடா?
பராக் ஒபாமா அதிபராகவும் ஜோ பிடன் துணை அதிபராகவும் இருந்த போது உக்ரேனில் பல பிரச்சனைகள் உருவாகின. அந்தப் பிரச்சனையால் உக்ரேனிற்க்கு இரசியாவில் இருந்து வரும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டது. இதை முன் கூட்டியே அறிந்த அமெரிக்க துணை அதிபர் தனது மகனான ஹண்டர் பிடனை உக்ரேனில் எரிவாயு நிறுவனங்களில் முதலீடு செய்யப் பண்ணினார். பின்னர் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் கிறிமியா தீபகற்பத்தை தன்னுடன் இணைத்து இரசியர்கள் பெரும்பாலாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் பிரிவினைப் போராட்டம் ஆரம்பமானது. அதனால் ஹண்டர் பெருமளவு பணம் சம்பாதித்தார் என்பது டிரம்பின் தர்ப்பில் இருந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு. டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது மகன் ஹண்டரின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கும் உக்ரேனின் வழக்குத் தொடுநரை பதவி நீக்கம் செய்யும் படி உக்ரேன் அதிபரை வலியுறுத்தினார் என வாதிடுகின்றனர். ஜோ பிடன் இப்படிச் செய்யும் போது அவர் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தாராம். ஹண்டர் பிடன் உக்ரேனின் எரிவாயு நிறுவனத்தின் ஆலோசகராக இருந்து 3.4மில்லியன் டொலர்கள் சம்பாதித்தார்; இதற்காக் அவர் உக்ரேன் செறது கூடக் கிடையாது என்பது அவர்மீது வைக்கப்படும் குற்ற்ச்சாட்டு.

வழங்காத ஜவலின் ஏவுகணைகள்
டிரம்ப்பின் பதவி நீக்க முயற்ச்சியில் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகள் முக்கியமானவை. FGM-148 Javelin ஏவுகணைகள் தோளில் வைத்து ஏவக் கூடியவை. எந்த போர்த்தாங்கியையும் அழிக்கக் கூடியவை.  உலகிலேயே மிகச் சிறந்த தாங்கிகளை உற்பத்தி செய்யும் இரசியா இவற்றையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளன. ஜவலின் ஏவுகணைகள் தரைப்போரில் இரசியாவிற்கு சாதகமாக இருந்த நிலையை மாற்றியமை மாற்றியமைத்தன. இலக்கு அசையும் போது அதற்கு ஏற்ப தமது திசையையும் மாற்றைப் பாயக் கூடியவை. சிரியாவிடமிருந்த இரசிய தாங்கிகளை அழிக்க குர்திஷ் போராளிகளுக்கு அவை அமெரிக்காவால் வழங்கப்பட்டன. உக்ரேனை இரசியா ஆக்கிரமித்த போது உக்ரேனுக்கு அமெரிக்காவின் FGM-148 Javelin ஏவுகணைகளை வழங்கும் படி அதிபர் ஒபாமாவை துணை அதிபர் ஜோ பிடன் வலியுறுத்தியிருந்தார். அந்த ஏவுகணைக்ள் இரசியா உக்ரேனுக்கு அனுப்பிய தாங்கிகளை நிர்மூலம் செய்யக் கூடியவை. இரசியாவுடன் பகைமை வளர்க்க விரும்பாத ஒபாமா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து உக்ரேனுக்கு ஜோ பிடனை அனுப்பிய ஒபாமா உக்ரேனுக்கு காத்திரமான உறுதி மொழி எதையும் வழங்க வேண்டாம் எனவும் சொல்லியிருந்தார். அப்போது உக்ரேன் ஊழல் நிறைந்த நாடாக இருந்தது. அதில் ஊழல் நிறைந்த எரிவாயு நிறுவனத்தின் ஆலோசகராக ஹண்டர் பிடன் நியமிக்கப்பட்டார்.

வழங்கவிருந்த ஜவலின் ஏவுகணைகள் நிறுத்தமா?
2019 ஜூலை 10-ம் திகதி உக்ரேனின் புதிய அதிபரின் பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையை டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை. பின்னர் 25-ம் திகதி டிரம்ப் உக்ரேன் அதிபர் வொளோடிமீர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடுகின்றார். 2019 ஓக்ஸ்ட் மாதம் 12-ம் திகதி வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க உளவு சமூகத்தின் கண்காணிப்பாளர் நாயகத்திடம் ஒரு முறைப்படு செய்கின்றார். அந்த முறைப்பாட்டில் உக்ரேன் அதிபருடன் டிரம்ப் செய்த உரையாடலில் ஜோ பிடன் செய்த ஊழல்கள் பற்றி அம்பலப்படுத்த வேண்டும் என நிர்ப்பந்தித்ததாகவும் அதை மறுத்த போது டிரம்ப் உக்ரேனுக்கு வழங்க இருந்த ஜவலின் ஏவுகணைகளை வழங்குவதை நிறுத்தியதாகவும் சொல்லப்படிருந்தது. இங்கு டிரம்ப் இரண்டு குற்றச் செயல்களை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. ஒன்று அமெரிக்கத் தேர்தலில் தலையிட வெளி நாடு ஒன்றைத் தூண்டியது. அதை மறுத்த போது அந்த நட்பு நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய முடிவை எடுத்தது. இந்த அடிப்படையில் டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முன் மொழிவு வைக்கப்பட்டது. அதை ஒட்டி டிரம்ப் மீது விசாரணை செய்ய மக்களவை முடிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது. டிரம்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதுவர், உக்ரேனிற்கான அமெரிக்கத் தூதுவர், உக்ரேன் தொடர்பான அமெரிக்கப் படைத்துறை நிபுணர் போன்றவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

பதவி நீக்க விசாரணை
அமெரிக்க அதிபரைப் பதவி நீக்கம் செய்வது இலகுவான ஒன்றல்ல முதல் அமெரிக்கப் பாராளமன்றத்தின மக்களவையில் ஒரு முன் மொழிவு செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அக்குற்றச் சாட்டை  நீதிக்கான குழு அல்லது ஒரு சிறப்புக் குழுவால் விசாரிக்கப்பட வேண்டும். நீதி விசாரணைக் குழு சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை மக்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு அது சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் பாராளமன்றத்தின் மூதவையில் விசாரணை நடை பெறும். அதற்கன சட்ட மூலம் அங்கு தாக்கல் செய்யப்படும். அதில் மக்களவை உறுப்பினர்கள் சாட்சியங்கள் சமர்ப்பிப்பர் தலைமை நீதியரசர் மூதவை விசாரணைக்கு தலைமை தாங்குவார் மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் குற்றவாளி என முடிவு செய்ய வேண்டும் அப்போது குற்றம் சாட்டப்பட்ட அதிபர் பதிவியிழப்பர்.

முன்னைய பதவி நீக்க முயற்ச்சிகள்
இதற்கு முன்பு அண்டுரு ஜோன்சன் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரைப் பதவி நீக்க முயற்ச்சிக்கப்பட்டது. இருவரையும் பதவி நீக்க அமெரிக்க மக்களவை முடிவெடுத்தது. ஆனால் இருவரும் மூதவையால் விடுவிக்கப்பட்டனர். 1868இல் ஜோன்சன் மீது போர் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்தது சட்ட விரோதம் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. அவர் மூதவையில் ஒரு வாக்கால் தப்பித்தார். 1999இல் நீதிக்கு முன் பொய் சொன்ன குற்ற்ச்சாடு பில் கிளிண்டன் மீது சுமத்தப்பட்டது. மூதவையில் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதவிற்கு 22 வாக்குகள் போதாமல் இருந்தன.

டிரம்பை விசாரணைக்கு அழைப்பு
டிரம்பிற்கு எதிரான விசாரணையில் வந்து டிரம்ப்பைத் தோன்றும் படி மக்களவையின் நீதித்துறைக்கான குழுவின் தலைவர் ஜெரால்ட் நட்லர் அழைப்பு விடுத்ததுடன் வந்து விசாரணையில் பங்கு கொள்ளுன்க்கள் அல்லது விசாரணையைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துங்கள் என்றும் சொல்லியுள்ளார். விசாரணையில் பங்கு பற்றி சாட்சிகளை அவர் கேள்விகளும் கேட்கலாம் என்றார் அவர்.

மூதவை டிரம்பை பாதுகாக்கும்
டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டை மக்களவை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உண்டு. அதை மூதவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறவேற்ற முடியாது. நூறு உறுப்பினர்களைக் கொண்ட மூதவையில் டிரம்பின் குடியரசு கட்சியினர் 53பேரும் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சியில் 47பேரும் உள்ள நிலையில் டிரம்பை குற்றவாளியாக மூதவையில் முடிவு செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு

Tuesday, 29 October 2019

மீண்டும் கொல்லப்பட்டார் ஐ எஸ் தலைவர் அல் பக்தாதி


26/10/2019 சனிக்கிழமை சிரிய நேரம் இரவு 11-00 மணிக்கு பெயர் வெளியிடாத (ஏர்பில், ஈராக்) இடத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்காவின் எட்டு போயிங் CH-47 Chinook உழங்கு வானூர்திகளில் அமெரிக்காவின் சிறப்புப் படையணியான டெல்டாவைச் சேர்ந்த 100 படையினர் சிறபுப் பயிற்ச்சி பெற்ற நாய்களுடன் இருந்தனர். அவர்களின் படையணியின் முழுப்பெயர் 1st Special Forces Operational Detachment-Delta, known as Delta Force. சிரியாவின் இத்லிப் மகாணத்தின் இரசியக் கட்டுப்பாட்டில் உள்ள பரிஷா நகரத்தில் இரசியாவின் அனுமதியுடன் வேட்டுக்களை மாரிபோல் பொழிந்தபடி சென்று இறங்கிய அமெரிக்கப் படையினர் அல் பக்தாதி இருந்த கட்டிடத்தின் சுவரை உடைத்துக் கொண்டு உள் நுழைந்தனர். கதவில் தற்கொலையாளிகள் இருப்பார்கள் என்பதால் சுவரை உடைத்துக் கொண்டு போனார்கள். டெல்டா படையணியினர் பல மொழிகள் பேசக் கூடியவர்கள். கட்டிடத்தை சுற்றவர இருந்த மக்களை அரபு மொழியில் விலகிச் செல்லும் படி பணித்தனர். அவர்களை ஒரு மரத்தின்  கீழ் படை நடவடிக்கை முடியும்வரை இருக்க வைத்தனர். மூன்று மணித்தியாலங்கள் துப்பாக்கி வேட்டு ஓசை கேட்டபடி இருந்தது.

கைப்பற்றப்படாமல் இருக்க தற்கொலை செய்தார்
ஐ எஸ் என்னும் தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதியை இலக்கு வைத்தே ஆபத்து மிக்க பகுதிக்கு 100படையினரும் ஒரு மணித்தியாலம் தாழப் பறந்து சென்றனர். அமெரிக்கச் சிறப்புப் படையினர் தாக்கிய கட்டிடத்தில் இருந்து 11 சிறுவர்களை அமெரிக்கப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். அமெரிக்கப் படையின் தாக்குதலில் இருந்து தப்ப அல் பக்தாதி ஒரு சுரங்கத்துள் தன் மூன்று பிள்ளைகளுடன் தப்பி ஓடினார். அவரை சிறப்புப் பயிற்ச்சி பெற்ற நாய்கள் துரத்திச் சென்றன. எதிரிகளிடம் சரணடையக் கூடாது அவர்களால் கைப்பற்றாப்படக் கூடாது என்ற வைராக்கியத்துடன் தற்கொலைக் குண்டுகள் பொருத்தப் பட்ட உள்ளாடையுடன் எப்போதும் இருக்கும் அல் பக்தாதி அவற்றை வெடிக்கச் செய்தார். அமெரிக்காவின் படையில் இருந்த கே-9 என்ற பெயருடைய ஒரு நாய் மட்டும் காயப்பட்டது. முதலில் டிரம்ப் பெரிய அலுவல் ஒன்று நடந்துள்ளது என டுவிட்டர் பதிவிட்டார். தக்குதலில் அல் பக்தாதியின் இரண்டு மனைவிகள் கொல்லப்பட்டனர். இதற்கு முன்ன்ர் நான்கு தடவைகள் அல் பக்தாதி கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்திருந்தன.
நேரடியாக டிரம்ப் பார்த்தார்.
அமெரிக்க டெல்டா படையினரைன் தாக்குதலின் போது பல ஐ எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐ எஸ் போராளிகளிற்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம். தாக்குதல்களை வெள்ளை மாளிகையின் நிலைமை அறையில் (Situation Room) இருந்து நேரடியாகப் பார்ப்பதற்காக தக்குதலாளிகளிடமிருந்த ஒளிப்பதிவுக் கருவிகளில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திடீர் DNA பரிசோதனை
தாக்குதல் நடந்த இடத்தில் வைத்தே திடீர்  டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட்டு அவர் அல் பக்தாதிதான் என உறுதி செய்யப்பட்டது. தாக்குதல் நடத்த முன்னரே அல் பக்தாதியின் உள்ளாடையை உளாவாளிகள் மூலம் திருடி அதிலிருந்து அவரது டிஎன்ஏ மாதிரிகளை அமெரிக்கப் படையினர் பெற்றிருந்தனர். அல் பக்தாதி இருந்த கட்டிடத்தை அமெரிக்கப் போர் விமானங்கள் இறுதியில் குண்டு வீசி அழித்தன. அந்த இடம் ஒரு வழிபாட்டிடமாக மாற்றப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை. இத் தாக்குதலை நெறிப்படுத்த ஈராக்கின் எர்பில் நகரில் ஒரு கட்டளை-கட்டுப்பாட்டகம் ஒன்று நிறுவப்பட்டது. அங்கிருந்து  டெல்டா100 படையினரும் நாய்களும் துருக்கி ஊடாகப் பறந்து தாக்குதலுக்கு சென்றிருக்கலாம்.

அல் பக்தாதியை அசிங்கப் படுத்த டிரம்ப் முயற்ச்சி
ஊடகவியலாளர்களைக் கூட்டி அல் பக்தாதியின் இறப்பை அறிவித்த டொனால்ட் டிரம்ப் அவர் நாய் போல இறந்தார், கோழையாக இறந்தார் என வரிகளை அடுக்கி அவரை முடிந்த அளவு கேவலப் படுத்தினார். உக்ரேன் விவகாரத்தில் அதிபர் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் டிரம்பிற்கு இந்த நடவடிக்கை நல் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத் தாக்குதலுக்கு இரசியா அனுமதியும் உதவியும் வழங்கியமை டிரம்பின் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கு நோக்கத்துடனா என்ற கேள்வியும் எழுகின்றது. ஊடகவியளார்கள் முன் இரசியாவிற்கு டிரம்ப் இரசியாவிற்கு நன்றி தெரிவித்தார். தாக்குதலுக்கு தாம் உதவி செய்யவில்லை என்றது இரசியா. அல் பக்தாதியின் இறப்பில் எந்த ஒரு நீதிபதியும் சம்பந்தப்படவில்லை இருந்தும் அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டார் என்றார் டிரம்ப். அவரைத் தவிர எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என டிரம்ப் தெரிவிக்க மறுத்தார்.

நாய் போல என இகழ்ந்த டிரம்ப் நாய்களைப் பாராட்டினார்.
அமெரிக்காவின் படையணிகள் பலவற்றில் நாய்கள் பாவிக்கப்படுவதுண்டு. வெடிபொருட்களை மோப்பம் பிடிப்பதற்கு என German shepherd, Belgian Malinois என்றவகை நாய்களைப் பாவிக்கின்றார்கள். துரித படை நடவடிக்கைக்களுக்காக அவற்றிற்கு சிறப்புப் பயிற்ச்சி வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு இருட்டில் பார்க்கக் கூடிய கண்ணாடி, நீர்புகாத ஆடை போன்றவை கூடப் பொருத்தப்படும். முழுப் பயிற்ச்சி பெற்ற ஒரு நாயின் பெறுமதி $283,000இற்கு மேல். மோப்பம் பிடிக்கும் நாய்களுக்கு இணையாக எந்த ஒரு கருவியையும் விஞ்ஞானிகளால் உருவாக்க முடியவில்லை. பின் லாடனைக் கொன்ற போது பாவிக்கப் பட்ட நாயை பராக் ஒபாமா நேரில் சந்தித்திருந்தார். அல் பக்தாதிக்கு எதிரான நடவடிக்கையில் காயப்பட்ட நாயை மதிநுட்பம் மிக்க அழகிய நாய் என்றார் டிரம்ப்.

குர்திஷ் போராளிகள் பேருதவி
குர்திஷ் உளவுத் துறையின் உதவியுடன் சிஐஏ தகவல்களைத் திரட்டியது. அவர்களின் 5 மாதங்கள் தொடர் முயற்ச்சி வெற்றி பெற்றமைக்கு குர்திஷ் உளவுத் துறை முக்கிய காரணமாகும் . குர்திஷ் தளபதி ஜெனரல் மஜ்லௌம் சிரியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஒரு மிகச் சிறந்த உளவுத் துறையைக் கட்டி எழுப்பியிருந்தார். அவர்களின் செயற்பாட்டால் பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. பின் லாடனைப் பிடிக்க ஐநூறு பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவுடன் பத்து ஆண்டுகள் எடுத்தன. ஆனால் அல் பக்தாதியை மிக விரைவில் மிகக் குறைந்த செலவுடன் பிடிப்பதற்கு குர்திஷ் போராளிகளே காரணம். அல் பக்தாதி இடங்களை மாற்றிக்கொள்ளும் முறை குர்திஷ் உளவாளிகளால் அறியப்பட்டது. அல் பக்தாதி இருந்த கட்ட்டிடத்தில் உள்ள சுரங்கங்கள் யாவும் தப்பி ஓட முடியாதபடி உள்ளவை என அமெரிக்கர்கள் முன் கூட்டியே அறிந்திருந்தனர். அல் பக்தாதியத் சுரங்கத்தில் துரத்திப் பிடிக்க கொண்டு செல்லப்பட்ட மனித இயந்திரங்கள் பவிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஐ எஸ் அமைப்பின் எதிரி அமைப்பான Hay’at Tahrir al-Shamஇன் கட்டுப்பாட்டுப் பகுதியுள் அல் பக்தாதி இருந்தமை அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

ஐ எஸ் அமைப்பு அழியாமல் தொடரலாம்
தன்னை எப்படியும் கொல்வாரகள் என உணர்ந்திருந்த பக்தாதி தனது அமைப்பின் கட்டமைப்பை தனக்குப் பின்னரும் செயற்படக்கூடிய வகையில் ஒழுங்கு செய்திருந்தார். அடுத்த தலைமைப் பொறுப்பை Abu Hassan al-Muhajir என்பவர் ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரித்தானிய ஃபினான்ஸியல் ரைம்ஸ் நாளிதழ் அல் பக்தாதி கொலை ஐ எஸ் அமைப்பிற்கு ஒரு குறியீட்டு இழப்பு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது எனச் சொல்கின்றது.

சர்ச்சை மிக்க வரலாறு
இப்ராஹிம் அவ்வாட் இப்ராஹிம் அலி அல் பத்ரி அல் சமர்ராய் என்னும் இயற்பெயருடன் அல் பக்தாதி 1971-ம் ஆண்டு ஈராக்கின்  சமர்ரா நகரில் பிறந்தார். பாக்தாத் பல்கலைக் கழகத்தில்  இஸ்லாமியக் கல்வியில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அதை சிலர் மறுக்கின்றார்கள். அல் பக்தாதி என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் எனவும் வாதிடப்படுகின்றது. அல் பக்தாதி இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு தாக்குதலும் செய்யவில்லை. அவ இஸ்ரேலிய உளவாளி எனவும் சொல்லப்பட்டது. அவரின் பல தாக்குதல்கள் உலகெங்கும் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தின. 2004-ம் ஆண்டு அமெரிக்கப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு 10மாதத்தில் விடுதலை செய்யப்பட்டவர், அல் பக்தாதி அபு முசம் அல் ஜர்காவியின் தலைமையிலான அல் கெய்தா அமைப்பில் இணைந்து கொண்டார். அல் கெய்தாவில் இருந்து விலகி 2013இல் ஐ எஸ் ஐ எல் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பை ஆரம்பித்தார். பின் லாடனும் அல் கெய்தா அமைப்பும் அமெரிக்காவை அழித்த பின்னரே இஸ்லாமிய அரசி நிறுவலாம் என நம்பினர். ஆனால் அல் பக்தாதி இஸ்லாமிய அரசை அமைத்த பின்னரே அமெரிக்காவை அழிக்க முடியும் என நம்பினார். அதன் படி 2014 ஜூனில் சிரியாவிலும் ஈராக்கிலும் பல நகரங்களைக் கைப்பற்றி பிரித்தானியாவின் நிலப்பரப்பிற்கு ஒப்பான நிலப்பரப்பில் இஸ்லாமிய அரசை நிறுவினார். இஸ்லாம்கிய அரசுக் கோட்பாட்டை விரும்பி பல்லாயிரம் இஸ்லாமிய இளையோர். உலகெங்கும் இருந்து அவரது ஐ எஸ் அமைப்பில் இணைந்தனர். ஆனால் பரந்து  மறைந்து இருக்க வேண்டிய போராளிகளை சிரியாவிலும் ஈராக்கிலும் திரட்டியமை அவர்களை இலகுவில் அழிக்க வழிவகுத்தது.

2017-ம் ஆண்டு ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் 2018-ம் ஆண்டு 3670 தாக்குதல்களை உலகெங்கும் ஐ எஸ் அமைப்பு செய்தது. உலகெங்கும் உள்ள ஐ எஸ் அமைப்பின் கிளைகள் இனி தம் இச்சைப்படி செயற்படலாம். அது ஓர் ஆபத்தான நிலைமையாகும். குர்திஷ் மற்றும் யதீஷ்ய சிறுவர்கள் உட்பட பல பெண்களுக்கு எதிராக அல் பக்தாதியின் ஐ எச் அமைப்பு தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்களுக்கும் கொடுமைகளுக்கும் இன்னும் முழுமையாக தண்டனைகள் வழங்கப்படவில்லை.

Monday, 7 October 2019

கீழடி உறுதி செய்யும் தமிழரின் பொருளாதாரத் தொன்மை


ஒரு நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்கு நட்புமிக்க மக்கள், சிறந்த நகரம், உயர்ந்த தொழில்நுட்பம், சிறந்த உட்கட்டுமானம், வேற்று நாட்டவர்களுடன் போக்கு வரத்துத் தொடர்பு, கருத்துப் பரிமாற்றத் தொடர்பு, உறுதியான ஆட்சி முறைமை, துறைமுகங்கள், ஆறுகள், மக்களின் கல்வித்தரம் போன்றவை முக்கியமானவையாகும். தமிழர்களின் தொன்மை பற்றியும் அவர்களது மொழிச் சிறப்புப் பற்றியும், அவர்களது வீரம் பற்றியும் பரவலாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. ஆனால் அவர்களது பொருளாதாரச் சிறப்புப் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் தொழில்நுட்பம்

மனித இனத்தின் பழைய கண்டுபிடிப்புக்களில் தீ உண்டாக்குதலுக்கு அடுத்தபடியான முக்கிய கண்டுபிடிப்பாக சில்லு (சக்கரம்) கருதப்படவேண்டும். சில்லின் தொன்மையை ஆராய்ந்தவர்கள் மிகப் பழைமையான சில்லு இன்று ஈராக்காகவும் சிரியாவாகவும் இருக்கும் மெசப்பட்டோமியாவில் இற்றைக்கு 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகச் சொல்கின்றார்கள். ஆனால் அதை யார் கண்டு பிடித்தார்கள் என அறிய முடியாமல் இருக்கின்றது என்றும் அவர்கள் சொல்கின்றார்கள். தமிழர்களின் தொனமையை ஆய்வு செய்த இடங்களில் எல்லாம் பானைகள் கண்டறியப் பட்டுள்ளன. பானை செய்வதற்கு சில்லு முக்கியமான ஒன்றாகும். எந்த மக்கள் முதலில் பானை செய்யத் தொடங்கினார்களோ அவர்களே முதலில் சில்லைக் உருவாக்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஐம்பூதங்களைக் குறிக்கும் வழிபாட்டிடங்கள் ஐந்தும் ஒரே புவிநெடுங்கோட்டில் அமைத்தவர்களிடம் சிறந்த தொழில்நுட்ப அறிவு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. Wootz steel அல்லது Damascus steel என அழைக்கப்படும் மிகச் சிறந்த உருக்கை தமிழர்கள் உருவாக்கினார்கள். அந்த உருக்கில் செய்யப்ப்ட்ட வாள் உலகெங்கும் போற்றப்பட்டது. மூன்று காற்பாந்தாட்ட மைதானங்களின் நிலப்பரப்பைக் கொண்ட தொழிற்சாலை ஒன்று கீழடியில் கண்டறியப் பட்டுள்ளது. மேலை நாட்டினர் ஒரு புள்ளியைச் சுற்றி 360பாகைகளை வகுத்துள்ளனர். திசையில் 8திசைகளை வைத்துள்ளனர். தமிழர்கள் ஒரு புள்ளியைச் சுற்றி 1024பாகைகளை வகுத்துள்ளனர். அவர்களின் திசையறிவு அவர்களை மிகச்சிறந்த பயணிகளாக்கியது. 

தமிழர்களின் நகர உருவாக்கமும் உட்கட்டுமானமும்

பொருளாதாரமும் நகரச் சிறப்பும் உட்கட்டுமானமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. பொருளாதாரம் வளர்வதற்கு சிறந்த உட் கட்டுமானம் தேவை. பொருளாதாரம் வளரும் போது நகரம் மேம்படும். நகர சிறக்கும் போது உட்கட்டுமானம் மேலும் சிறப்படையும். மெஹன்சதாரோ, ஹரப்பா, காவேரிப்பூம்பட்டணம், கீழடி ஆகிய இடங்களில் செய்யப் பட்ட அகழ்வாராய்ச்சியில் உயர்ந்த உட் கட்டுமானங்களைக் கொண்ட சிறந்த நகரங்களும் கண்டறியப் பட்டன. நெடுநல்வாடை என்ற தமிழிலக்கியத்தில் தமிழர்களின் நகர்கள் “மாடம் ஓங்கிய மல்லல் மூதூர், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்” என தெருக்கள் விபரிக்கப்பட்டுள்ளன. கீழடியில் உள்ள குடியிருப்புக்களும், தெருக்களும் மேசையில் இருந்து வரையப்பட்ட படங்களை வைத்து உருவாக்கிய நகரங்கள் போல் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் சுட்ட செங்கற்களால் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியங்களும் சாயத் தொட்டிகளும் அரிக்கமேட்டில் கண்டறியப் பட்டுள்ளன. 

தமிழர்களின் கடற்பயணம்

தமிழர்களின் வரலாறு பற்றி எழுதிய அறிஞர்கள் அவர்களை சிறந்த கடற்பயணிகள் என்பதில் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர். பண்டிய தமிழர்களின் கடற்பயணங்களைப் பற்றி ஒரிசா பாலு என அழைக்கப்படும் திருச்சி உறையூரில் பிறந்த சிவ பாலசுப்பிரமணி செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. கடல்சார் விஞ்ஞானம் கற்ற ஒரிசா பாலு ஆமைகள் கடலில் நீந்திச் செல்வதில்லை. அவை கடலில் உள்ள நீரோட்டத்தை அறிந்து அதில் மிதந்து செல்கின்றன. அதை பாதையைத் தொடர்ந்தே தமிழர்கள் தமது கடற்பயணங்களை மேற் கொண்டனர் என அவர் கண்டறிந்தார். தொலைதூரம் செல்ல நீண்ட காலம் எடுக்கும் அப்போது குடிநீருக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு ஒரிசா பாலு தமிழர்கள் மூங்கில் குழாய்க்குள் மூலிகைகளை வைத்து அதன் மூலம் 24 நிமிடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் அறிவு பெற்றிருந்தனர் என்ற உண்மையை வெளிக் கொண்டு வந்தார். இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்ட பெரும் செங்கற்களால் கட்டிய படகுத்துறை பூம்புகாரில் கண்டறியப்பட்டது. தமிழர்கள் உலகெங்கும் பயணித்தார்கள் என்பதற்கு ஆதரமாக உலகெங்கும் தமிழ்ப்பெயரில் உள்ள பத்தொன்பதாயிரம் நகரங்களை இனம் கண்டுள்ளார். உலகெங்கும் மதுரா என்னும் பெயரில் மட்டும் 24 நகரங்கள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். கீழடியில் தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் இடையில் உள்ள நீப்பரப்பில் உள்ள நாற்பதிற்கு மேற்பட்ட துறைமுகங்கள ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கும் தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் மொழிகளில் கலந்திருப்பதையும் ஒரிசா பாலு வெளிப்படுத்தியுள்ளார். ரோமா புரி மன்னன் அகஸ்டஸ் சீசரிடம் பாண்டிய மன்னர்களின் தூதுவர்கள் மூவர் சென்றதை ரோம வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ரோமிலிருந்து ஆண்டு தோறும் தென் இந்தியாவிற்கு பத்தாயிரம் குதிரைகள் அனுப்பப்பட்டதையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். கீழடியை ஒரு பகுதியாகக் கொண்ட வைகை நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அழகன்குளம், பெரியபட்டினம் என இரண்டு பண்டைய துறைமுகங்கள் இருக்கின்றன.  கீழடி நகர மக்கள் இதன் மூலம் தங்கள் பன்னாட்டு வாணிபத்தைச் செய்துள்ளனர். அழகன்குளத்தில் கப்பலின் வரைபடம் உள்ள பானைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன கீழடி பாண்டியர்களின் தலைநகரான மணலூர் என வரலாற்று நிபுணர்கள் சொல்கின்றனர். கீழடியில் இருந்து முத்து, மிளகு, பருத்தி போன்ற தமிழர்களின் உற்பத்திப் பொருட்கள் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. எகிப்திய அரசி கிளியோப்பற்றாவும் பல ரோமாபுரி அரசிகளும் தமிழ்நாட்டு முத்துக்களை மதுவில் ஊறவைத்து குடித்தனர் என அவர்களது வரலாறுகள் உறுதி செய்கின்றன. முத்தின் இன்னொரு பெயரான பரல் மருவி ஐரோப்பிய மொழிகளில் Pearl ஆகவும் மிளகின் இன்னொரு பெயரான திற்பலி pepper ஆகவும் மருவி இருக்கின்றன. புவிசார் அரசியல் நிபுணரான ரொபேர்ட் கப்லான் இந்தியர்கள் எப்படி வியாபராக காற்றைப் பயன்படுத்தி கப்பலோட்டி உலக வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் என்பதை விபரித்துள்ளார். கடற்போக்குவரத்து, கப்பற்கட்டுமானம், வாணிபம் பற்றிய பழைய குறிப்புக்கள் உள்ள ஒரே மொழி தமிழ். 
வெண்ணிக் குயத்தியார் பாடலில்:
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!...

பொருள்: கடலில் பெரிய கலங்களை காற்றின் சீற்றத்தினால் பாதிக்கப்படாமல் செல்லுத்தியவர்கள் சோழ மன்னர்கள். அவர் வழிவந்த, மிகப்பெரும் யானைப்படையை உடைய கரிகால் வளவனே! 

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(மு.வரதராசன் விளக்கம்: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.என்ற குறள் கணவன் வாணிபத்திற்காக வெளிநாடு சென்றதால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றியதாக இருக்க வேண்டும்.

நாணயக் கொடுப்பனவு முறைமை

கீழடி, காவேரிப் பூம்பட்டினம், மெஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிரேக்கம், ரோமாபுரி, மெசப்பட்டோமியா, எகிப்து ஆகிய பழம் பெரும் நகரங்களின் நாணயங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் தமிழர்களிடையே சிறந்த நாணய மாற்று முறைமை இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்று செய்யும் முறையில் இருந்து வளர்ச்சி பெற்ற முறைமையே நாணயக் கொடுப்பனவு முறைமை. நாணயங்களின் பெறுமதி பற்றிய அறிவும் தமிழர்களிடையே இருந்துள்ளன.

தமிழர்களின் மொழித் தொடர்பு

சிலப்பதிகாரத்தில் காவேரிப்பூம்பட்டினத்தில் பன்னாட்டு வாணிபம் எப்படி நடந்தது என்பதை:

“பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர் தே எத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்”

என்னும் வரிகளால் விபரிக்கின்றது. பல மொழி பேசும் மக்கள் எப்படி ஒற்றுமையாக செயற்பட்டனர் என்பதை அந்த வரிகள் விபரிக்கின்றன. தமிழர்களுடன் வர்த்தகம் செய்த சீனர்களும் ரோமர்களும் தமிழ் பேசும் திறன் பெற்றிருந்தனர். சீனர்களும் ரோமர்களும் தமிழில் பேசிக் கொண்டனர். உலகெங்கும் உள்ள பல்லாயிரம் மொழிகளில் நானூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் பொதுவாக இருக்கின்றன. அதில் முன்னூறு சொற்கள் தமிழ் சொற்களாக இருப்பது தமிழர்கள் பல மொழி பேசும் மக்களுடன் தொடர்பில் இருந்தனர் என்பதை உறுதி செய்கின்றது. மணிமேகலையில் கச்சிமாநகர் புக்க காதையில் காஞ்சியில் 18 மொழிகள் பேசும் திறன் கொண்ட மக்கள் வாழ்ந்ததாக குறிபிடப்பட்டுள்ளது:

மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்

தமிழர்களின் ஆட்சி முறைமை

பட்டினப்பாலை என்னும் பழைய தமிழ் இலக்கியத்தில் நகரத்தின் சிறப்பைச் சொல்லும் போது அங்கு இருப்பவை பற்றிக் கூறுகின்றார். அதில் வணிகர்களின் சிறப்பு, சுங்கம் கொள்வோரின் சிறப்பு, துறைமுகப் பண்டக சாலையின் முற்றம், அங்காடி வீதிகள், ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள், வணிகர், வேளாளர் குடிச்சிறப்பு போன்றவை பற்றி விபரிக்கின்றார். இவற்றை நெறிப்படுத்த சிறந்த ஆட்சி முறைமை தமிழர்களிடம் இருந்தது. வைகை ஆறு வற்றாத உயிர் நதியல்ல ஆண்டின் சில திங்கள்கள் மட்டுமே ஓடும் நதியாகும். அதனால் அதன் கரையில் வாழ்ந்த மக்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்க சிறந்த நீர் முகாமைத்துவத்தை மன்னர்கள் மேற்கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளன. நீர் சேமிப்பு, நீர் வழங்கல், கழிவு நீர் வசதி போன்றவை எல்லாம் சிறப்பாக இருந்தமை கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது.

நெசவுத் தொழில்

தமிழர்களின் நெசவுத் தொழிலின் ஆதாரங்களும் கீழடியில் கிடைத்துள்ளன. மற்ற நாடுகளின் பாய்மரக் கப்பல்கள் பல துணிகளைக் கொண்டன. ஆனல் தமிழர்களின் பாய்மரக் கப்பல் ஒரே துணியை மட்டும் கொண்டன. அந்த அளவிற்கு நீளமானதும் வலிமையானதுமான துணிகளை நெய்யும் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்தது. எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம், மெசப்பட்டோமியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் தமிழர்கள் நெய்த மெல்லிய பருத்தித் துணி பிரபலமானது. மஸ்லின் என்ற சொல்லே முசுலிப்பட்டினம் என்ற சொல்லில் இருந்து மருவியதாகும். ஒரு சேலையின் அளவில் உள்ள துணியை உள்ளங்கைக்குள் அடக்கும் அளவிற்கு மெல்லிய துணியை தமிழர்கள் நெய்தார்கள். எகிப்தியப் பிரமிட்களில் இறந்தவர்களின் உடலைச் சுற்றி தமிழ்நாட்டு பருத்தித் துணியால் சுற்றி மூலிகைக்கள் இட்டுப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

உறுதியான ஆட்சியும் மக்களின் கல்வித்தரமும்

பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான ஆட்சி தேவை என்பது இன்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. போர் நடப்பது பொருளாதாரத்திற்கு கேடு என்பதும் இன்றைய உண்மை. பழைய தமிழ் மன்னர்கள் போர்கள் இன்றி அமைதியாக உறுதியான ஆட்சி செய்தனர் என்பதற்கு ஆதாரமாக இருப்பது கீழடியில் படைக்கலன்கள் ஏதும் இல்லாமல் இருப்பதே. கீழடியில் மக்கள் மொழியறிவு எழுத்தறிவு போன்றவையுடன் கல்வித்தரத்தில் உயர்ந்து இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக வீட்டுப் பொருட்களில் பெயர்களை எழுதி வைத்தல், சதுரங்க விளையாட்டுக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

உறுதியான ஆட்சி, சிறந்த உட்கட்டுமானம், உயர்ந்த தொழில்நுட்பம், நல்ல தொடர்பாடல் மொழி, துறைமுகங்கள், மக்களின் கல்வித்தரம். பன்னாட்டு கொடுப்பனவு முறைமை போன்றவை உள்ள நகரங்களான இலண்டன், நியூயோர்க், சிங்கப்பூர், ஹொங் கொங் போன்றவை இன்று உலகின் முன்னணிப் பொருளாதார நிலையங்களாக இருக்கின்றன. அதே போல் தமிழர்களின் பண்டைய நகரங்களான காவேரிப்பூம் பட்டினம், மதுரை, மெகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்கள் அப்போது உலகின் மிக உயர்ந்த பொருளாதார நிலையங்களாக திகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 17 ஆற்றுப் படுக்கைகளிலும், கடலுக்குள் மூழ்கிப் போன குமரிக் கண்டத்திலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.

Monday, 5 August 2019

சீனக் கனவு: சூழும் தளைகளை நீக்குமா சீனா?


சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை 2021-ம் ஆண்டு நிறைவு செய்யும் போது சீனா எல்லாவகையிலும் மிதமான செழிப்பு மிக்க நாடாக்கப் பட வேண்டும் என்ற நோக்கமும் 2049—ம் ஆண்டு சீனக் குடியரசு உருவாகிய நூற்றாண்டு நிறைவடையும் போது சீனா 1. செழுமைமிக்க 2. வலிமையான 3. கலாச்சாரத்தில் வளர்ச்சியடைந்த 3. இசைவிணக்கமான (harmonious) புதிய சமூகவுடமைக் குடியரசு நாடாக சீனா கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கமும் சீனக் கனவு என்கின்றார் அதன் அதிபர் ஜீ ஜின்பிங். சீனாவின் கனவை நிறைவேற்றுவதற்கு பல தளைகள் தடைகளாக இருக்கின்றன. உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் மற்ற நாடுகளிலும் பார்க்க அதிக வர்த்தகம் செய்யும் நாடாக சீனா இருக்கின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்படாமல் இருக்க சீனாவின் இந்த வர்த்தகம் தங்கு தடையின்றி நடக்க வேண்டும். அதற்கு உரிய வசதிகளைப் பேண சீனாவின் ஆதிக்கம் உலகெங்கும் அதிகரிக்கப்பட வேண்டும். 

சீனாவின் நான்கு முனைப்பிரச்சனை
அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை அமெரிக்காவும் ஜப்பானும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை நான்கு முனை பாதுகாப்பு பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue) என அழைக்கப்படுகின்றது. அதை சுருக்கமாக குவாட் (Quad) என அழைக்கப்பட்டது. இது கடந்த பத்து ஆண்டுகளாக ஜப்பான் முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கு எதிரான ஒரு நான்கு நாடுகள் இணைந்த பொறிமுறையாகும் எனவும் சொல்லப்பட்டது. இந்த ஒத்துழைப்பில் இந்தியா இணையக் கூடாது என சீனா நரேந்திர மோடியை சீனா மிரட்டியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் 2019 ஜூன் மாத இறுதியில் ஜப்பானில் நடந்த G-20 மாநாட்டில் இந்த நான்கு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து குவாட் பற்றி உரையாடியமை சீனாவிற்கு இன்னும் ஒரு தளையாகும்.

இரசியா நண்பனா எதிரியா?
மேற்கு நாடுகள் எனப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தமக்கு சாதகமாக இருக்கும் தற்போதைய உலக ஒழுங்கை குழப்ப முயலும் திரிபுவாத வல்லரசுகளாக சீனாவையும் இரசியாவையும் பார்ப்பதால் இரண்டையும் அடக்க முடியாமற் போனாலும் உலக அரங்கில் இருந்து ஓரம் கட்ட அவை முயல்கின்றன. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட இரசியாவும் சீனாவும் பல துறைகளிலும் ஒத்துழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. இரசியா தன் கிழக்குக் கரையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆரம்பித்த கிழக்கு (Vostok) என்ற படைப்பயிற்ச்சியில் 2018-ம் ஆண்டு சீனாவையும் இணைத்துக் கொண்டு செய்ய வேண்டிய அளவிற்கு இரசியாவின் எதிரிகள் அதன் கிழக்குக் கரையில் மாறியிவிட்டனர். ஆனால் இரசிய சீன உறவுகள் தொடர்பான நிபுணரான அலெக்ஸாண்டர் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான படைத்துறை ஒத்துழைப்பு ஒரு முழுமையான நிலையை அடைய மாட்டாது என்கின்றார். கஜகஸ்த்தான் போன்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் சீனா தனது படைத்துறைப் பயிற்ச்சிகளை செய்வது இரசியாவிற்கு ஆபத்தானது என்பதை இரசியா அறியும். கஜகஸ்த்தானில் பயங்கரவாத ஒழிப்பு என்னும் போர்வையில் சீனா படைப்பயிற்ச்சியை மேற்கொண்டிருந்தது. இரசியா தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனாவிற்கு தனது படைத்துறைத் தொழில்நுட்பத்தை விற்கவேண்டிய நிலையும் உள்ளது. ஆனாலும் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையும் உலகின் முதன்மை நாடாக உருவெடுப்பது இரசியாவைக் கரிசனை கொள்ள வைப்பதை மறுக்க முடியாது. சில இரசியப் படைத்துறை நிபுணர்கள். தற்போது சிறிய குழப்ப சூழ் நிலை உருவாகினாலும் நீண்ட கால அடிப்படையில் நேட்டோ நாடுகளினிடையில் இருக்கும் உறவு போல இரசிய சீன உறவு உறுதியாக இல்லை என்பது சீனாவை ஒரு புறம் சூழ்ந்துள்ள பிரச்சனையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கொரியத் தீபகற்பம்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் நடந்த கொரியப் போரில் கொரியத் தீபகற்பம் பொதுவுடமை ஆட்சியின் கீழ் வட கொரியாவாகவும் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் தென் கொரியாவாகவும் இரு நாடுகளாக்கப் பட்டன. பல முறை சீனாவாலும் ஜப்பானாலும் ஆக்கிரமிக்கப் பட்ட கொரியத் தீபகற்பம் சீனாவிற்கு ஒரு சவாலாக இப்போது இருக்கின்றது. பொருளாதாரத் துறையில் முன்னேறிய தென் கொரியா சீனாவிற்கு வர்த்தகத்தில் போட்டியாக இருக்கின்றது. வட கொரியா அணுக்குண்டுகளையும் ஏவுகணைகளையும் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் துருப்புச் சீட்டாகப் பயன்படும் வட கொரியா படைத்துறையில் பெரு முன்னேற்றம் காண்பது சீனாவிற்கு அச்சுறுத்தலாக அமையும். வட கொரியா தனது படைக்கல உற்பத்திகளை நிறுத்தில் தென் கொரியாவுடன் சமாதானமாகி இரு நாடுகளும் ஒன்றிணைக்கப்பட்டால் அது சீனாவிற்கு பல முனைகளில் பெரும் தலையிடியாக அமையும்.

கைவைக்க முடியுமா தைவானில்?
2019 ஜூலை 29-ம் 30-ம் திகதிகளில் தைவான் Han Kuang drill என்னும் பெயரில் பாரிய போர் ஒத்திகையைச் செய்துள்ளது. அதில் 9வகையான 117 ஏவுகணைகள் உண்மையாக வீசிப் (live-fire) பயிற்ச்சி செய்யப்பட்டன. 29-ம் திகதி திங்கட் கிழமை தைவானின் F-16 போர் விமானங்கள் AGM-84 Harpoon ஏவுகணைகளை வானில் இருந்து கடற்பரப்பில் வீசிப் பரிசோதனை செய்தன. இலக்குகளாக பழுதடைந்த தைவானின் கப்பல்கள் பாவிக்கப்பட்டன.  துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய நடுத்தர தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணைகள், Sky Bow I and Sky Bow II என்னும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள், Hsiung Feng III என்னும் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள் அவற்றுள் அடங்கும். ஏவுகணை வீச்சுக்கள் இலக்குகளைத் தாக்குதவில் 95% வெற்றியளித்துள்ளன என தைவான் அறிவித்துள்ளது. தைவான் தன் படைப்பயிற்ச்சியை செய்து கொண்டிருக்கும் போது தைவானுக்கு வட கிழக்காக இருக்கும் மியக்கோ நீரிணையூடாக சீனாவின் ஆறு போர்க்கப்பல்கள் கடந்து சென்றன.

தைவானிற்கு போட்டியாக சீனா
தைவானின் போர்ப்பயிற்ச்சி பிராந்திய அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது என்ற சீனா தைவான் போர்ப்பயிற்ச்சி செய்யும் போது தானும் ஒரு பெரிய போர்ப்பயிற்ச்சி செய்தது. சீனாவின் போர்ப்பயிற்ச்சி தைவானுக்கு அமெரிக்கா 2.2பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை விற்பனை செய்ய எடுத்த முடிவிற்கு பதிலடியாக அமைந்திருந்தது. அத்துடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி என மீள் உறுதி செய்ததுடன் தேவை ஏற்படின் தைவானை சீனாவுடன் மீளவும் இணைக்க படை நடவடிக்கையும் செய்யப்படும் எனற சீனாவின் வெள்ளை அறிக்கைக்கு உயிர் கொடுப்பதாகவும் அமைந்தது. தைவான் தீவை ஓட்டியுள்ள கடற்பரப்பையும் வான் பரப்பையும் சீனா எப்படித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதற்காகவே சீனாவின் பயிற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக இணைக்காவிடில் அது சீனாவின் காலில் ஒரு தளையாக அமையும்.

ஹொங் கொங்
2003-ம் ஆண்டு ஹொங் கொங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற முயற்ச்சி எடுத்த போது அது பேச்சுரிமைக்கு எதிரானது என பெரும் ஆர்ப்பாட்டம் நடந்ததால் அது கைவிடப்பட்டது. அது போலவே 2012-ம் ஆண்டு ஹொங் கொங்கில் கல்வியில் மாற்றம் அறிமுகம் செய்ய முற்பட்ட போது பெரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தால் அது கைவிடப்பட்டது. 2014-ம் ஆண்டு ஹொங் கொங்கில் அரசியல் சீர்திருத்தம் வேண்டி மாணவர்கள் தண்ணீர்ப் பாய்ச்சலில் இருந்தும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் இருந்தும் பாதுகாக்க கைகளில் குடையுடன் செய்த குடைப்புரட்சி இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பல அரசியல்வாதிகளின் தேர்தலில் போட்டியிடும் உரிமை பறிக்கப்பட்டது. 2019இல் ஹொங் கொங்கில் சீனாவிற்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சீனாவிற்கு நாடுகடத்தும் சட்டம் நிறைவேற்றப்படுவதை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம் செய்தமையினால் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் அது முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்டம் ஹொங் கொங்கில் நடக்கின்றது. சீனாவின் தங்க வாத்தாகக் கருதப் படும் ஹொங் கொங்கை சீனா கவனமாக கையாளாவிடில் அதுவும் ஒரு தைவானாக மாறலானம்.

செயற்கைத் தீவுகள்
சீனாவின் இயற்கைத் தீவுகளான ஹொங் கொங்கும் தைவானும் ஒரு புறமிருக்க தென் சீனக் கடலில் சீனா செயற்கையாக உருவாக்கிய தீவுகளை தொடர்ந்து பேணுவதிலும் தனது ஒன்பது புள்ளி வரைபடம் மூலம் தென் சீனக் கடலில் 90% கடற்பரப்பை தனதாக்குவதிலும் சீனா பல சவால்களை எதிர் நோக்குகின்றது. தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடுவதில் சீனாவுடன் போட்டி போடும் நாடுகள் தமக்கு துணையாக அமெரிக்காவைக் கருதுகின்றன. அதிலும் அமெரிக்காவின் முன்னாள் பரம வைரியான வியட்னாம் அமெரிக்காவுடன் மிகவும் நெருங்கி வருவதுடன் தென் சீனக் கடலில் தனது கடற்பரப்பில் உள்ள எரிபொருள் வளங்களை ஆய்வு செய்யும் பொறுப்பை இரசியாவிடம் வியட்னாம் ஒப்படைத்தமை பல சிக்கல்களை சீனாவிற்கு உருவாக்கியுள்ளது.

வெளிப்பிரச்சனைகளும் பார்க்க உட் பிரச்சனைகள் மோசமானவை
சீனாவில் மோசமாகிக் கொண்டு போகும் உள்நாட்டுக்கடன் இப்போது கட்டுக்கு அடங்காத நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து கொண்டு செல்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க சீனா தொடர்ந்தும் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதால் சீனாவின் உள் நாட்டுக் கடன் அளவிற்கு மீறியுள்ளது. இனியும் பணப்புழக்கத்தை அதிகரித்தல் பொருளாதாரத்தை இன்னும் மோசமாக்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் மக்கள் தொகையில் வயோதிபர்கள் அதிகமாகவும் இளையோர் குறைவாகவும் இருப்பது சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனையாக இருக்கின்றது. அத்துடன் பெண்களின் தொகை நாட்டில் குறைவாக இருப்பதால் பல சமூகப் பிரச்சனைகளை சீனா எதிர் கொள்கின்றது. உலகிலேயே அதிக நீர்த் தட்டுப்பாடு உள்ள நகரமாக சீனத் தலைநகர் பீஜிங்க் இருக்கின்றது.

எல்லாப் பிரச்சனையையும் எதிர் கொள்ள சீனாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான மூன்று ரில்லியன் டொலர்கள் உதவி செய்யுமா?Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...